விவசாய மக்களை வெளியேற்ற தமிழ்நாடு வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதா? – சீமான் கண்டனம்

59

கூடலூர் மண்ணில் காலங்காலமாக வாழும் விவசாய மக்களை வெளியேற்ற தமிழ்நாடு வனச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதா? – சீமான் கண்டனம்

நீலமலை மாவட்டம், கூடலூரில் காலங்காலமாக வாழ்ந்து வருகிற மண்ணின் மக்களை அந்நிலத்தைவிட்டு வெளியேற்ற ஏதுவாகத் தமிழ்நாடு வனச்சட்டம் 1982ன் 16வது பிரிவில், 16 ஏ என்ற உட்பிரிவைப் புகுத்தி திருத்தம் கொண்டு வந்திருக்கிற தமிழக அரசின் செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இப்பிரிவின்படி, மக்களின் கைவசம் இருக்கிற நிலங்கள், பயன்பாட்டு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள் என எந்தவகையிலான நிலமாயினும் அதனை மொத்தமாக அரசுடைமையாக்கி வனமாக மாற்ற ஏதுவாகச் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது மக்களின் பயன்பாட்டிலுள்ள நிலங்களில் 80 விழுக்காடு வனமாக மாற்ற கையகப்படுத்தப்படும். அதிலும் குறிப்பாக, ஓவேலி பேரூராட்சி 100 விழுக்காடு வனமாக்கலுக்கெனப் பறிக்கப்படும். மக்களின் நீண்டப் போராட்டத்திற்குப் பிறகு, கிடைத்த 2006- வனவுரிமை அங்கீகாரச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தற்போதைய வனத்திருத்தச் சட்டம் அமைந்துள்ளது.

மரங்கள் மண்ணின் வரங்கள்; காடின்றி நாடு அமையாது என்பதே இயற்கை நியதி. ஒரு நாட்டின் நிலப்பரப்பில் 37 விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்கிறது சூழலியல் கோட்பாட்டு விதி. காடுகளாலும், மரங்களாலும் போர்த்தப்பட்டப் பசுஞ்சோலையாகத் தமிழர் நிலத்தை மாற்றவே நாம் துடிக்கிறோம். ஆகவே, வனங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. ஆனால், வனங்களைக் காக்கிறோம் என்ற பெயரில் மண்ணின் மக்களை திட்டமிட்டு வெளியேற்ற முனைவதையும், வளங்களைக் கொள்ளையடிக்க பெரும் வனக்கொள்ளையர்களுக்கு வாசல் திறந்து விடுவதையும் வன்மையாக எதிர்க்கிறோம்.

வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் காடுகளில் பராமரிப்பின்மையை வைத்துக் கொண்டு, வனவிலங்குகளை வனக்கொள்ளையர்கள் வேட்டையாடவும், வாழ்வதற்கேற்ற சூழலின்றி வனவிலங்குகள் மடியவும், தனிப்பெரு முதலாளிகள் வனவளத்தை அபகரிக்கவும் வழிவகுத்துக் கொண்டு மறுபுறம், வனங்களைக் காப்பதாகக் கூறி மக்களின் நிலங்களைப் பறித்து அவர்களை வாழ்விடத்திலிருந்தும், வாழ்வாதாரத்திலிருந்தும் வெளியேற்றுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. வனஅதிகாரிகளின் துணையோடு வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடங்களும், சொகுசு விடுதிகளும் கட்டப்படும்போது அதனைக் கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு, நீண்டநெடிய காலமாக வாழ்ந்து வரும் ஆதிக்குடிகளை ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்ட முனைவது அவர்களை திட்டமிட்டு வஞ்சிப்பதாகும்.

உண்மையில், பொதுமக்களின் வாழ்விடங்களில்தான் மரங்கள் யாவும் பாதுகாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. புறச்சூழலும், உண்மைநிலையும் இவ்வாறிருக்க மக்களை வெளியேற்றிவிட்டு மரங்களைக் காக்கிறோம் என்பது அப்பட்டமான ஏமாற்றுவாதம். மேலும், நிலம் சார்ந்து இருக்கக்கூடிய மக்களை அப்புறப்படுத்திவிட்டு வனங்களைப் பாதுகாக்க முடியாது என நீதிமன்றங்களே அறிவுறுத்தித் தெளிவுப்படுத்திவிட்டப் பிறகு, மக்களை வெளியேற்றிவிட்டு வனங்களைக் காக்கிறோம் என்பது நீதிமன்ற வழிகாட்டுதலைப் புறந்தள்ளி, அவமதிக்கிற செயலாகும். இம்முடிவு அம்மண்ணில் கொஞ்சமேனும் இருக்கும் வேளாண்மையையும் ஒழித்துக் கட்டி, அம்மக்களின் வாழ்வாதரத்தையே காலிசெய்கிற பச்சைத்துரோகம்.

இவ்வுலகம் அனைத்து உயிர்களுக்குமானது. புல், பூண்டு, பூச்சி, வண்டு என அத்தனை உயிர்களுக்கும் இப்பூமிப்பந்தில் சமவுரிமையுண்டு. இதனைத் துளியளவும் உணராது, வெறுமனே இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிலத்தினை வேட்டைக்காடாக மாற்றி நிறுத்தியிருப்பதாலேயே அத்தனைவகைத் துன்பங்களும் மானுடச் சமூகத்திற்கு வந்து சேருகின்றன. வனவிலங்குகளைக் காப்பதும், வனத்தை ஆக்கிரமிப்புகள் செய்யாமல் தடுப்பதும் அரசின் கடமை. ஆனால், பலகாலமாக வனத்தோடு இயைந்த வாழ்வியலைக் கொண்ட மக்கள் மீது ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முத்திரைக் குத்துவதென்பது வனக்கொள்ளையர்களுக்கு ஆதரவான அதிகார அத்துமீறலாகும்.

எனவே, இந்த வனத்திருத்தச் சட்டத்தில் மக்களின் வாழ்வுரிமையை நிலைநாட்டும் பிரிவுகளைச் சேர்த்து, 2006- வனவுரிமை அங்கீகாரச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனவும், இதுவரை வன ஆக்கிரமிப்பாளர்கள் மேல் என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடவேண்டுமென்றும், தமிழ்நாடு வனச்சட்டத்தில் கொண்டு வந்திருக்கிறத் திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திவாருங்கள்… கூடிக்கொண்டாடுவோம்! திருமுருகப் பெருவிழா – பிப்.03, கோவை | சீமான் பேரழைப்பு
அடுத்த செய்திசமத்துவ பொங்கல் விழா- அண்ணா நகர் தொகுதி