வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இன ஈழத்து உறவுகள் வாழ்வதை இழிவுப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

215

வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இன ஈழத்து உறவுகள் வாழ்வதை இழிவுப்படுத்துவதா?
– சீமான் கண்டனம்

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில் திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கெதிராக நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் நிர்வாகி ராஜேந்திரன் மற்றும் திமுகவைச் சேர்ந்த பேரூர் நகர நிர்வாகி மோகன் ஆகிய இருவரும் அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழ் சொந்தங்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசி அவர்களைக் காயப்படுத்தியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இனத்து ஈழச் சொந்தங்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் ஆடு, மாடுகள் போல அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பது தமிழ்த்தேசிய இனத்திற்கு பெருத்த அவமானமாகும். திபெத்திய மக்களை அங்கீகரித்து அனைத்துவித வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து வாழ வைக்கிற இந்தியப் பெருநாடு, ஈழச் சொந்தங்களைத் தாய்த்தமிழகத்திலேயே அகதிகள் முகாமிலே அடைத்து வைத்து வைத்திருப்பது வரலாற்றுப் பெருந்துயரமாகும். தங்கள் வாழ்க்கையினை இழந்து, வாழ்வாதாரத்தை, உறவுகளை, உடைமைகளை இழந்து, தாய் நிலத்தைப் பிரிந்து நிர்கதியாய் நின்று, தந்தையர் நாடென்று கருதிய இந்தியப் பெருந்தேசத்திற்குள் அடைக்கலம் புகுந்த நம்மினச் சொந்தங்களுக்கு இம்மண்ணில் நிகழும் கொடுமைகளும், துயரங்களும், உரிமை மீறல்களும், பாலியல் சீண்டல்களும் கொஞ்ச நஞ்சமல்ல. இத்தகைய ஒரு கொடுமையான வாழ்க்கைமுறையில் வாழ்க்கையினை நகர்த்திக் கொண்டிருக்கிற அம்மக்களுக்கெதிராக நஞ்சைக் கக்கியிருக்கும் கம்யூனிஸ்ட், திமுகவினரின் பேச்சு அநாகரீகமானது; அருவெறுப்பானது. எதன்பொருட்டும் ஈழத்துச் சொந்தங்களுக்கு எதிரான இத்தகைய அவதூறுகளைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. இத்தருணத்தில், நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் தமிழகத்தில் வாழும் ஈழத்துச் சொந்தங்களுக்கு எப்போதும் பாதுகாப்புப் பேரரணாக நிற்பார்கள் என அறிவிக்கிறேன்.

சில்லறை வணிகம் செய்யும் மக்களிடம் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக மாநிலம் முழுமைக்கும் எண்ணற்ற திமுகவைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் அன்றாடம் வெளிவந்துக் கொண்டிருக்க அவர்களைக் கண்டித்து அரசியல்படுத்தவோ, நல்வழிப்படுத்தவோ, அப்புறப்படுத்தவோ வழியற்றவர்கள் ஈழச்சொந்தங்கள் மீது சேற்றைவாரி பூச முயல்வது மிக மலிவான அரசியலாகும். இம்மண்ணில் பொருளியல் சுரண்டலை மேற்கொள்ளும் மார்வாடி, பீகாரி, ராஜஸ்தானிய முதலாளிகளையும், வெளி மாநிலத்து சுரண்டல் பேர்வழிகளையும் கண்டிக்கத் துப்பற்றவர்கள், பிழைக்க வந்த ஈழ உறவுகள் மீது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருப்பது கயமைத்தனத்தின் உச்சம்.

ஆகவே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜேந்திரன், திமுகவைச் சேர்ந்த மோகன் ஆகிய இருவரும் தங்களது கருத்துக்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்து, அதற்குப் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் வேண்டும் எனவும், அதனைச் செய்ய இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் தலைமைகளும் நிர்பந்திக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாகையில் மாபெரும் தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை
அடுத்த செய்திஎங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு | திசம்பர் மாத இதழ் – 2018 [PDF Download]