தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

242

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்து, அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்திலுள்ள நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகளாகத் தஞ்சம் அடைந்துள்ளது தமிழ்நாட்டிற்கே ஏற்பட்ட மிகப்பெரிய அவமானமும், தலைகுனிவும் ஆகும். பல ஆண்டுகளாகப் போராடியும் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றித் தராமல் ஏமாற்றி வரும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மின்வாரியத்தில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்படப் பல கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர்ந்து பல ஆண்டுகளாகப் போராடி வரும் நிலையில், அவர்கள் கோரிக்கைகள் மிக மிக நியாயமானது என்பதை உணர்ந்து, நாம் தமிழர் கட்சி அவர்களது போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறது.

கடந்த 1997ஆம் ஆண்டு முதல் முறையான ஊதியமின்றி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக மின்சார வாரியத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணி காலியிடங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள நிலையில், அந்த இடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணிநியமனம் செய்யாது, தமிழ்நாடு அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

மின்பழுது நீக்கம், பராமரிப்பு, கண்காணிப்பு, புதிய மின்மாற்றிகள் நிறுவுதல், மற்றும் தெரு விளக்குகள் பராமரிப்பு ஆகிய பணிகளில் அதிக அளவில் ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் மேற்கொண்டு வருகின்றனர். அத்தகைய கடினமான உடல் உழைப்பு பணிகளை மேற்கொள்ளும்போது அதிகமான விபத்துக்களிலும் சிக்கிக்கொள்கின்றனர். தற்காலிக ஊழியர்கள் என்பதால் விபத்து காப்பீடும் இல்லாததால் உரிய இழப்பீடும் பெறமுடியாதவர்களாய் துயருறுகின்றனர். இருப்பினும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலங்களில் தொடர்ந்து பல நாட்கள் ஓய்வின்றி உழைத்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்காமல் தமிழ்நாடு அரசு அலட்சியம் செய்து வருவது சிறிதும் அறமற்றச் செயலாகும்.,

ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாது தங்களது வாழ்வாதார மீட்சிக்காக அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளான, 10000 ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், ஏற்கனவே அரசு ஒப்புதல் அளித்தபடி ஒருநாள் ஊதியமாக ரூ.380-ம், விழாக்கால ஊக்கத்தொகையையும் வழங்கிட வேண்டுமெனவும், முறையான விபத்து காப்பீடும் ஏற்படுத்தித்தர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருப்பதியில் தமிழக மாணவர்கள் மீதும், பொது மக்கள் மீதும் ஆயுதங்களைக் கொண்டு இனவெறித்தாக்குதல் தொடுப்பதா? – சீமான் கண்டனம்