காவிரிப்படுகையில் துணை இராணுவம் குவிப்பு! இன்னொரு காஸ்மீராக தமிழகத்தை மாற்றுவதா? – சீமான் கண்டனம்

38

காவிரிப்படுகையில் துணை இராணுவத்தைக் குவித்துப் போராடும் மக்களை அச்சுறுத்துவதா? இன்னொரு காஸ்மீராக தமிழகத்தை மாற்றுவதா?- சீமான் கண்டனம்

காவிரிப்படுகை மாவட்டங்களில்
திடீரென துணை இராணுவத்தைக் குவித்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப்படுகையில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஹைட்ரோகார்பன் எடுப்பு , மீத்தேன் எடுப்பு,ஷெல் எரிவாயு எடுப்பு போன்ற பேராபத்துமிக்கத் திட்டங்களைப் புகுத்தித் காவிரிப் படுகை மாவட்டங்களை பாலைவனமாக்க சதித்திட்டம் தீட்டி நடைமுறைப் படுத்தி வரும் மத்தியில் ஆளும் மோடி அரசு, தற்போது காவிரிப்படுகை நிலப்பகுதிகளில் சிஆர்பிஎப் எனப்படும் துணை இராணுவப்படையினரை திடீரென ஆயிரக்கணக்கில் கண்டு வந்து குவித்திருப்பது காலங்காலமாய் அம்மண்ணில் வாழ்ந்து வரும் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. எவ்வித சட்ட விதிமுறைகளையும் பின்பற்றாமல், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், தனியார் நிறுவனங்களுக்கு எரிகாற்று எடுக்க அனுமதி அளித்திருக்கும் மத்திய அரசு, துணை ராணுவத்தினரை பயன்படுத்தி.. இயற்கை வளத்தைச் சுரண்டும் அந்த நாசகாரத்திட்டங்களை செயல்படுத்த, அத்திட்டங்களுக்கு எதிராகப் போராடும் மக்களை தாக்கி அச்சுறுத்த, அம்மக்களைத் தீவிரவாதிகளாகக் காட்டி ஒடுக்க.. முடிவு செய்து விட்டது.

பயிற்சி எடுப்பதற்காகவே தமிழகத்திற்குத் துணை இராணுவம் வந்திருக்கிறது என பொய்க் காரணம்
கூறிக்கொண்டு துணை இராணுவம் வந்திருப்பது நாசகார திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஆயுத பலம் காட்டி அச்சுறுத்தி சிதைக்கவே என்பது அனைவரும் அறிந்த உண்மை. பயிற்சி முகாமுக்காகத்தான் துணை இராணுவம் வந்திருக்கிறதென்றால் அப்பயிற்சி முகாம்களுக்கேற்ற ஏராளமான இடங்கள் இருக்கையில் மக்கள் அடர்த்தி அதிகமுள்ள காவிரிப்படுகையைத் தேர்வுசெய்ய வேண்டிய தேவையென்ன ? … அதற்கான உரிய காலச்சூழல் இதுவா ?.. என்றெல்லாம் எழும் கேள்விகளுக்கு மத்திய அரசு எவ்வித பதிலையும் அளிக்காமல் ரகசியம் காப்பது தமிழர்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசிற்கு எதிராகத் தமிழகமே போர்க்கோலம் பூண்டிருக்கிற தற்காலச் சூழலில், அதுவும் முற்றும் முழுதாய் பாதிக்கப்பட்டுக் காவிரி உரிமைக்காகவும், மண்ணைப் பிளந்து நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோ கார்பன் மற்றும் ஷெல் வாயு எடுக்கிற அபாயகரத்திட்டத்திற்கெதிராகவும் காவிரிப்படுகை முழுக்கப் போராட்டங்கள் வீரியமாகிக் கொண்டிருக்கிற இவ்வேளையில் துணை இராணுவத்தை இறக்கிவிட்டிருப்பது மக்களை அச்சுறுத்தி போராட்டத்தைச் சிதைக்கிற மத்திய பாஜக அரசின் திட்டம் என்று தமிழர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

தமிழகத்தை இன்னொரு காஷ்மீராக, இன்னொரு நாகலாந்தாக, இன்னொரு மணிப்பூராக மாற்றுவதைதான் நோக்கமாகக் கண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதை தான் இது போன்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்துகின்றன.

தமிழகத்தின் தலைநகரமான சென்னை மாநகரமே வெள்ளத்தில் மூழ்கித் தத்தளித்தபோது வராத துணை இராணுவப்படை, ஓகிப் புயலில் சிக்குண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தவித்தபோது வராத துணை இராணுவப்படை, தேனி குரங்கிணியில் பயிற்சிக்குச் சென்ற தமிழக மாணவர்கள் தீக்கிரையாகியபோது வராத துணை இராணுவப்படை தற்போது தமிழகம் வர வேண்டிய அவசியமென்ன …என்கிற கேள்வி தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.

காவிரிப்படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் நீண்ட நெடுநாட்களாகப் போராடிக்கொண்டிருக்கிற சூழலில் அதனைப் பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவித்துத் தமிழர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிற மத்திய அரசு அவ்வகைத் திட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பினை சமாளிக்க துணை இராணுவத்தைப் பயன்படுத்த தயாராகியிருக்கிறது.

தொடக்கம் முதலே மீத்தேன் எடுப்பு, ஹைட்ரோ கார்பன் எடுப்பு, ஒ.என்.ஜி.சி. எண்ணெய்க்குழாய் பாதிப்பு போன்றவற்றிற்கெதிராக காவிரி படுகை மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் விருப்பத்திற்கு மாறாக எரிகாற்று எடுக்க மாட்டோம் என்பதை வாய்மொழியாகக் கூறிவிட்டு, பின்புலத்தில் நாசாகாரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய அத்தனை வேலைகளையும் மத்திய, மாநில அரசுகள் செய்துகொண்டு தான் வருகின்றது. அவற்றின் நீட்சியாகவே தற்போது காவிரிப்படுகையில் துணை இராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்..

இது சனநாயக மரபுகளுக்கும், மக்களாட்சிக் கோட்பாட்டிற்கும் எதிரான சர்வாதிகார நடவடிக்கைகளாகும்.

மண்ணின் மீதும், மக்களின் மீதும் பற்றுறுதி கொண்ட எவராலும் இவ்வடக்குமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே, காவிரிப்படுகையில் குவித்து வைக்கப்பட்டிருக்கிற துணை இராணுவப்படையினை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லாவிடில், தமிழகத்திடமிருந்து மிகப்பெரும் போராட்ட எதிர்வினையை மத்திய அரசானது எதிர்கொள்ள நேரிடும் என இதன் மூலம் எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.