ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு! – சீமான் புகழாரம்

120

தன்னலமற்று உண்மையும், நேர்மையுமாய் உழைத்து உயிர்துறந்த காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் மறைவானது சமூகத்திற்கான பேரிழப்பு! –சீமான் புகழாரம்

காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் மறைவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை கொளத்தூரில் உள்ள நகைக்கடையொன்றில் நடந்த கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்வதற்காகத் தனிப்படையுடன் ராஜஸ்தான் சென்ற மதுரவாயல் காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்கள் அங்குக் கொள்ளையர் கூட்டத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செய்தியானது பெரும் துயரத்தையும், ஆழ்ந்த மனவேதனையையும் தருகிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களது குடும்பத்துயரத்தில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலருகே உள்ள மூவிருந்தாளியை அடுத்தச் சாலைப்புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்த பெரியபாண்டி அவர்கள், தனக்குக் கிடைத்த காவல்துறை பணியினைத் தனது பெரும்பேறாகக் கருதி சமூக நலனுக்காக உழைத்தவராவார். தனது சொந்த ஊரான சாலைப்புதூர் கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தைப் பள்ளியொன்றுக்குத் தானமாக வழங்கியுள்ள செய்தியின் மூலம் இவரது மாந்தநேயப்பற்றை அறியலாம். தன்னலமற்று உண்மையும், நேர்மையுமாய் உழைத்து உயிர்துறந்த அத்தகைய காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களின் மறைவானது இச்சமூகத்திற்கானப் பேரிழப்பாகும்.

இவ்விவகாரத்தில், கூடுதலான காவல்துறையினர் சென்றிருந்தால் தனது கணவன் இறந்திருக்க மாட்டார் எனக் கூறியிருக்கும் பெரியபாண்டியின் மனைவி பானுரேகாவின் கருத்து கவனத்திற்கொள்ளத்தக்கது. இனியேனும், வெளி மாநிலங்களுக்கு விசாரணைக்குச் செல்லும் காவல்துறையினரின் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கோருகிறேன். பெரியபாண்டியை இழந்து வாடும் குடும்பத்திற்கு நிதி உதவியையும் அவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தமிழக அரசு வழங்கவேண்டும். சென்ற ஜூலை மாதம் சென்னை கொடுங்கையூர் தீ விபத்தில் மரணமடைந்த தீயணைப்புத் துறை அதிகாரி ஏகராஜ் இறந்த பொழுது அவரின் குடும்பத்திற்கு 16லட்சம் மற்றும் அரசு வேலை தருவதாக அறிவித்தது தமிழக அரசு. ஆனால் இன்று வரை உதவிகள் அக்குடும்பத்திற்குப் போய்ச் சேரவில்லை. அதே போக்கை கடைபிடிக்காமல் அறிவிக்கும் நிதி உதவியை உடனடியாக வழங்கவேண்டும்.

சமூக நலனுக்காகத் தன்னுயிரை ஈந்து களப்பலியான காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாகப் வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.