இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை! – முதல்வருக்கு சீமான் நன்றி

31

குடும்பங்களைச் சீரழிக்கும் இணையவழி நிகழ்நிலை சூதாட்ட விளையாட்டுகளை நிரந்தரமாகத் தடைசெய்ய வலுவான தடைச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சீமான் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இணையவழி நிகழ்நிலை சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடைசெய்வதற்கு விரைவில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் உறுதியளித்த மாண்புமிகு முதலமைச்சர் ஐயா. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இணையவழி சூதாட்டங்களை நிரந்தரமாகத் தடை செய்வதற்கான வலுவான தடைச்சட்டத்தை எக்காரணம் கொண்டும் இனியொருமுறை நீதிமன்றங்கள் இரத்து செய்திட முடியாதபடி உரிய சட்ட நுணுக்கங்களுடன், நிறைவேற்ற வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி