அசோகமித்திரன் எழுத்துக்கள் காலம் தாண்டி நிற்கும் – சீமான் புகழாரம்

44

எளிமையான சொல்லாடல் வலிமையான கதாப்பாத்திரங்கள் நுணுக்கமான கதைகள் ரசனையான வாசிப்பு- அசோகமித்திரன் எழுத்துக்கள் காலம் தாண்டி நிற்கும் – சீமான் புகழாரம்
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தனது தன்னிகரில்லா எழுத்துகள் மூலம் படைப்புலகில் ஆதிக்கம் செலுத்தி கோலோச்சிய தமிழ் இலக்கிய உலகின் ஆகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவரான அசோகமித்திரன் அவர்களின் மறைவுச்செய்தியைக் கேட்டு மிகுந்த மனத்துயருற்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவரது குடும்பத்துயரில் பங்கேற்கிறேன்.
ஆந்திர மாநிலம், செகந்திராபாத்தில் பிறந்து தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு சென்னையில் குடியேறி முழுநேர எழுத்தாளராக மாறி, தியாகராஜன் எனும் இயற்பெயரை ‘அசோகமித்திரன்’ என மாற்றிச் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதத் தொடங்கி, தமிழ் எழுத்துலகில் தடம் பதித்து, தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் மிகச்சிறப்பான நாவல்கள் எழுதிய அவரின் அறிவுத்திறன் அளவிடமுடியாதது. 8 நாவல்கள், 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூற்றுக்கணக்கான கட்டுரைகள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள் எனத் தமிழ் படைப்புலகில் அவர் தொடர்ந்து ஆற்றிய பணிகள் ஏராளமானவை.
எளிமையான சொல்லாடலால் சாதாரணக் கதாபாத்திரங்களைக் கொண்டு அசாத்தியமான வாசிப்பு ஆற்றலைத் தருவது இவருக்கே உரித்தான தனிநடையாகும். அவரைப் போலவே அவரின் அதிர்ந்து பேசாத எழுத்துக்கள் மிக அழகானவை. வலிமையாகவும் நுணுக்கமாகவும் ரசனையாகவும் அவர் எழுதிய ‘நாடகத்தின் முடிவு’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’, ‘பிரயாணம்’, ‘தண்ணீர்’, ‘இன்று’, ‘மானசரோவர்’, ‘ஒற்றன்’, ‘ஆகாசத் தாமரை’, ‘விடுதலை’ போன்ற படைப்புகள் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுபவை.
அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் எழுத்துலகில் ஈடு இணையற்ற பங்களிப்பைச் செய்த அசோகமித்திரன் அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவருடைய எழுத்துகள் மூலமாகவும், படைப்புகள் மூலமாகவும் என்றென்றும் மக்கள் உள்ளங்களிலும், தமிழ் இலக்கியங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது மறைவு தமிழ் படைப்புலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாகப் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.