ஏன் இப்படிச் செய்தாய் முத்து? – செந்தமிழன் சீமான்

54

ஏன் இப்படிச் செய்தாய் முத்து? – செந்தமிழன் சீமான்

என் தம்பியே!
இளங்கவியே!
ஈடுஇணையற்ற ஆற்றலே!
என்னுயிர் இளவலே!
முத்துக்குமரா!

என்னை விட்டு
நீ எங்குச் சென்றாயடா?

ஏன் இப்படிச் செய்தாய் முத்து?

உன்னைப்போல் பாக்கள் எழுத
இங்குப் பல தம்பிகள் வருவார்கள்.
உன்னைப்போலப் பாசமுள்ள தம்பி
எனக்கு யாரடா கிடைப்பார்?

உன்னை எவ்வளவு நம்பி இருந்தேன்
ஏனடா தம்பி?
என்னை வெம்பித் துடிக்கவிட்டு
வெகுதூரம் சென்றாய்?

ஒரு தட்டில் உண்டோம்!
ஒரு கூட்டில் உறங்கினோம்!
பலநாட்கள் பசித்துக் கிடந்தோம்!
கனவையே உணவாக்கினோம்!
எழுந்தோம்!
கவலைகளைத் தொலைத்தோம்!
கண்ணீரைத் தண்ணீரில் கரைத்தோம்!
இலக்கைக் குறித்தோம்!
நான் எண்ணியது போலவே
நீ சாதனை பல செய்து சாதித்தாய்!
இன்று ஏனடா என் தம்பி?
வேதனை தந்து
உன் சாவால் என்னைச் சோதித்தாய்?

அறிவைச் சேமித்த நீ!
பணத்தையும், உடல்நலத்தையும் சேமிக்கவில்லையடா!

நட்பை உயிராய் மதித்த நீ!
உன்னுயிரை ஏன் மதிக்கவில்லை என் முத்து?

நீ இந்த இனத்தின் சொத்து என்பதை
ஏனடா மறந்தாய் என் தம்பி?

நீ ரசிக்க
இன்னும் எவ்வளவு இயற்கை இருக்கிறது?

நீ எழுத
எவ்வளவு தமிழ் இங்குத் தவம் கிடக்கிறது?

எத்தனை செவிகள்
உன் பாடல் கேட்க…
எத்தனை நட்பு
உன் கைகுலுக்க…
காத்துக்கிடக்கிறது!

நீ வருவாயா!
என் தம்பி!

அண்ணன் வரும்போதெல்லாம்
எழுந்து நிற்கும் நீ!
உன்னருகில் நின்று
உன் அண்ணன் அழுதபோது
நீ ஏனடா?
எழாமல் படுத்தே கிடந்தாய்?

என் பாசத்திற்குரியவனே!
ஏன் இப்படி
என்னை மோசம் செய்தாய்?
என் தம்பி முத்து!
இப்போது நீ எங்கு இருப்பாய்?
காற்றில் இருப்பாயா?
நீரில் இருப்பாயா?
நிலத்தில்?
மரத்தில்?
வானத்தில்?
எங்கு இருப்பாய் என் முத்து?

இருப்பாய்!
இருப்பாய்!
என் தாயாய்!
என் தமிழாய்!
என் மூச்சாய்!
என் பேச்சாய்!

இருப்பாய் எனக்குள்ளே!
நீ இருப்பாய் முத்து!
இருப்பாய்!

– செந்தமிழன் சீமான்

முந்தைய செய்திஒரத்தநாடு புதூர் கிராம பள்ளியில் நாம் தமிழர் கட்சியினரால் மறுசீரமைக்கப்பட்ட கணினிகள் மற்றும் இலவச கணினி பயிற்சி
அடுத்த செய்திதினம் ஒரு சிந்தனை – 75 | செந்தமிழன் சீமான்