இதழியலாளர் காமராஜ் இழப்பு தமிழ்த்தேசிய சிந்தனைக்களத்திற்கு பேரிழப்பு – சீமான் இரங்கல்

16

இதழியலாளரும், வழக்கறிஞருமான கு. காமராஜ் அவர்கள் இன்று காலை விபத்தில் மரணமடைந்தார். அதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறியிருப்பதாவது,

எனது ஆருயிர்த் தம்பியும், இளம் பத்திரிக்கையாளருமான வழக்கறிஞர் கு.காமராஜ் நேற்றிரவு சாலைவிபத்தில் சிக்கி, இன்று அதிகாலை மரணம் அடைந்த செய்தி என்னை ஆற்ற இயலா துயரில் வீழ்த்தி இருக்கிறது. வழக்கறிஞர். கு. காமராஜ் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய இனத்தின் மற்றொரு தாய்நிலமான ஈழத்தின் அழிவின் போது கண்ணீரோடும், துயரோடும் , துரோகமிழைத்த அரசியல் தலைவர்களின் மீது கோபத்தோடும் தமிழ் இளையோர் நின்றிருந்த காலத்தில் தமிழ்த்தேசிய இனத்திற்கென்று பெரும்திரள் அரசியல் அமைப்பு ஒன்று தேவை என்பதை உணர்ந்து நாம் தமிழர் என்கிற இவ்வமைப்பை தொடங்க மறைந்த எம் அப்பா இயக்குனர்.மணிவண்ணன் உள்ளீட்டோர் முடிவு செய்த போது என்னோடு உள்ளமிணைந்து கரம் கோர்த்து நின்றவர் என் தம்பி காமராஜ். காலத்தின் தேவையாக உருவாகி.. வரலாற்றின் பெருவிளைச்சலாக விளைந்து..அரசியலின் பெரும் பாய்ச்சலாக நாம் தமிழர் கட்சி விளங்கிட வேண்டும் என்பதை சிந்தித்து, அதற்காக தனது கடும் உழைப்பினை எம் அமைப்பிற்காக ,பிரதிபலன் பாராது வழங்கியவர் என் தம்பி வழக்கறிஞர் காமராஜ். மிகப்பெரிய சிந்தனையாளர். சமூக விழிப்புணர்வு என்கிற மாத இதழை நடத்தி வந்தவர். தேர்ந்த வடிவமைப்பாளர். தமிழ்த்தேசிய கொள்கை நெறியாளர், ஊடகவியலாளர், வழக்கறிஞர் என பல்வேறு பரிமாணங்கள் என் தம்பி வழக்கறிஞர் காமராஜீக்கு உண்டு. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நான் சிறைப்பட்ட போது ”கல்லறையில் கருத்துரிமை ” என்கிற தொகுப்பு நூலை உருவாக்கி கருத்துரிமை சார்ந்த மாபெரும் விவாதங்களை சமூகக் களத்தில் ஏற்படுத்தியவர் வழக்கறிஞர் காமராஜ் அவர்கள். நாம் தமிழர் கட்சி சார்பாக ”தேசியத்தலைவரின் சிந்தனைகள்” என்கிற எம் தேசியத்தலைவர்.மேதகு.வே.பிரபாகரன் அவர்களுடைய சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு நூல் உருவாக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அந்நூலை உலகத்தரத்தில் உருவாக்கி காட்டியவர் தம்பி காமராஜ் அவர்கள். சிந்தனையிலும், பேச்சிலும், எழுத்திலும் தமிழ்த்தேசியக் கருத்தியல் சார்ந்து தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்ட காமராஜ் அண்மைக்காலமாக தமிழ்முழக்கம் அலுவலகத்தில் தரமான புத்தகங்கள் கொண்ட புத்தக விற்பனை நிலையத்தை நடத்தி வந்தார். மேலும் வீரத்தமிழர் முன்னணி நடத்தி வருகிற வேல்வீச்சு இதழின் வடிவமைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். சம கால அரசியலின் தகவல் களஞ்சியமாக திகழ்ந்தவர். இந்த இளம் வயதில் அரசியலின் நுண் போக்குகள் குறித்து ஆழ்ந்த அறிவு கொண்டவர். சமூகம் சார்ந்து துடிப்போடும், கொள்கைப்பற்றோடும் இயங்கிய இளம் பத்திரிக்கையாளர். என் தனிப்பட்ட வாழ்விலும், அரசியல் வாழ்விலும் தம்பி. வழக்கறிஞர் காமராஜ் அவர்களுக்கு மறக்க முடியாத, தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது .

12391781_1695045044065615_5656439203319778651_n

எனது ஆருயிர்த்தம்பி வழக்கறிஞர் காமராஜ் அவர்களின் மரணம் தனிப்பட்ட அளவில் எனக்கும் நாம் தமிழர் கட்சிக்கும், ஒட்டுமொத்த தமிழ்த்தேசிய இனத்தின் சிந்தனைக்களத்திற்கும் பேரிழப்பு. எனது தம்பியை, எனது சகாவை ,தமிழ்த்தேசிய இனத்தின் உயர்விற்காக சிந்தித்து ,இயங்கி ஆற்றலாளனை இழந்திருக்கிற இவ்விழப்பு எதன் பொருட்டும் ஈடு செய்யத்தக்கதல்ல. கண்ணீர் மல்கும் இந்நேரத்தில் என் தம்பிகளிடத்தில், என் உறவுகளிடத்தில் நான் கேட்டுக்கொள்வது இதைத்தான். தயவு செய்து இரண்டு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிந்து பயணியுங்கள். விலைமதிப்பற்ற அறிவுலக ஆளுமையான வழக்கறிஞர் காமராஜ் அவர்களை நாம் நினைத்து, உருகி, அழுது துடித்தாலும் மீளப் பெறமுடியுமா என்பதை நினைத்துப்பாருங்கள். மனித உயிர் மகத்தானது. விலைமதிக்க முடியாதது. அதிலும் இளம் வயதில் பேரறிஞராக விளங்கிய எனதருமை தம்பி வழக்கறிஞர் காமராஜ் போன்றோரின் இழப்பு மீண்டும் மீண்டும் அச்செய்தியை உறுதி செய்கிறது. கண்ணீர் மல்க எனதருமைத்தம்பி வழக்கறிஞர். கு.காமராஜ் அவர்களை நினைவுக்கரங்களால் கட்டித்தழுவுகிறேன். சென்று வா தம்பி. எந்த நோக்கத்திற்காக நீயும், நானும் இணைந்தோமோ அந்த உயரிய நோக்கத்தினை உயிர் உள்ளளவும் உன் உயிர் அண்ணன் நிறைவேற்றுவான் என உறுதிக் கொள்கிறேன். இதழியலாளர்,வழக்கறிஞர்.கு.காமராஜ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் நெஞ்சார்ந்த புகழ்வணக்கம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.