அரசின் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்.- சீமான் திட்டவட்டம்

146

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழர்களின் தொன்ம வீரவிளையாட்டுகளில் முதன்மையானது ஜல்லிக்கட்டு. மாட்டின் கொம்பின் மீது ஒரு துணியில் சல்லிக்காசுகளைக் கட்டித் தொங்கவிட்டு, மாட்டை அடக்குவோருக்கு அந்தக் காசுகள் சொந்தம் என விளையாடப்பட்டதால் இது ‘ஜல்லிக்கட்டு’ எனப்பட்டது. நம் முன்னோர்களால் ஏறு தழுவுதல் என்று விளையாடப்பட்ட இவ்விளையாட்டு பெயர் மருவி இன்று ‘ஜல்லிக்கட்டு’ எனப்படுகிறது. உலகத்தில் எந்த இன மக்களும் மாடுகளுக்கு எனப் பண்டிகை வைத்துக் கொண்டாடியதில்லை. ஆனால், தமிழர்கள்தான் உழவுக்கு உதவி செய்ததற்காக நன்றிப்பெருக்கோடு மாட்டுக்குப் பொங்கல் வைத்துப் படையலிட்டு, மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறார்கள். அந்த மாட்டோடு கட்டித்தழுவி விளையாடும் வீரம்செறிந்த விளையாட்டுதான் இது. காரணத்தோடே எப்போதும் பெயரிடும் பழக்கமுடையத் தமிழர்கள் அதனாலேயே இதற்கு ‘ஏறு தழுவுதல்’ என்று பெயரிட்டார்கள். இது எதுவோ காலப்போக்கில் காட்டுமிராண்டித்தனமாக தோன்றிய விளையாட்டு அல்ல! காதலையும், வீரத்தையும் பின்னிப்பிணைத்து தமிழர்களின் பண்பாட்டை உலகுக்குச் சொல்லும் ஆதியில் விளையாட்டாகும். பழங்காலத்தில் மாட்டை அடக்குவோருக்கே தங்கள் பெண்ணை நம் முன்னோர்கள் மணமுடித்துக் கொடுத்தார்கள். இப்படி, தமிழர்களின் வாழ்வியலைச் சொல்லும் ஏறு தழுவுதலானது, சங்கக்காலத்திலேயே இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் நம்மிடையே இருக்கின்றன. மிக மூத்த நாகரீகம் எனச் சொல்லப்படும் சிந்துசமவெளி நாகரீகத்தில்கூட ‘ஏறு தழுவுதல்’ தொடர்பான கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாட்டோடும், வாழ்வியலோடும் தொடர்புடைய தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும்.

அரசின் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்.- சீமான் திட்டவட்டம்

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தி, ஆரத்தழுவி நேசித்து ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்ற பண்பாட்டைக் கொண்டு, பன்னெடுங்காலமாக அரிசி மாவில் கோலமிட்டு ஈ, எறும்புக்குக்கூட இரையிட்டவர்கள் தமிழர்கள் அப்படி, அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் பேரன்பையும், பெருங்குணத்தையும் உடைய உயிர்நேயர்களான தமிழர்களா ஒரு உயிரை வதைத்து அதில் இன்பம் காண்கிறார்கள்? அதனால், தமிழர்கள் மாட்டைத் துன்புறுத்துகிறார்கள் என்பதே முற்றிலும் தவறானக் கூற்று. ஜல்லிக்கட்டு என்பது ஆதிமனிதனான தமிழன் மாட்டை உழவுக்குப் பழக்கிய உறவைச்சொல்லும் விளையாட்டு.

அதனால், ஜல்லிக்கட்டுக்குத் தடை என்பது தமிழர்களின் அடையாளத்தையும், தொன்மையையும் அழித்துச் சிதைப்பதற்கு நடக்கும் திட்டமிட்ட சதி. அதனை ஒருபோதும் நாம் அனுமதிக்க முடியாது. அதனால், இவ்வாண்டு ஜல்லிக்கட்டுக்கு அரசு தடைவிதித்தாலும் தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தி தமிழனின் தொன்மையையும், பெருமையையும் உலகுக்கு நிலைநாட்டுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திபொதுமக்களுக்கு கழிவறை கட்டுவதற்கு சீமான் உதவி – காவல்துறையினர் எதிர்ப்பு
அடுத்த செய்திஇதழியலாளர் காமராஜ் இழப்பு தமிழ்த்தேசிய சிந்தனைக்களத்திற்கு பேரிழப்பு – சீமான் இரங்கல்