தலைவர் பிரபாகரன் சிலையை மீண்டும் அதேஇடத்தில் நிறுவுவோம்: சீமான் சீற்றம்

15

நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப்பொய்கைநல்லூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது:

நாகப்பட்டினம் மாவட்டம் தெற்குப் பொய்கை நல்லூர் அய்யனார் கோயில் வளாகத்தில் மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் சிலையை நிறுவி வீரத்தின் அடையாளமாக வழிபட்டிருக்கிறார்கள். தமிழ் உணர்வாளும் தலைவர் மீது கொண்ட பற்றாலும் தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் நிறுவியிருந்த சிலையைக் காவல் துறையினர் அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். குல தெய்வம் அய்யனார் இன தெய்வம் பிரபாகரன் என எண்ணியே தலைவர் பிரபாகரனுக்கு அங்கே சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இதை அப்புறப்படுத்த காவல் துறைக்கு எந்த விதத்திலும் உரிமை கிடையாது.

தமிழ்த் தேசிய இனத்தின் வீரமிகு அடையாளமாக, வரலாற்று வடிவமாக, காலம் தந்த கம்பீரமாக மேதகு தலைவர் பிரபாகரனை மனதில் ஏந்தி நிற்கும் தமிழ்ப் பிள்ளைகள் தங்களின் உடல் சதையில் அவருடைய உருவத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். உள்ளத்தில் மட்டும் அல்லாது தங்கள் இல்லத்திலும் வரவேற்பு அறையில் புகைப்படங்களாக மாட்டி வைத்திருக்கிறார்கள். பார்க்கிற போதெல்லாம் வீர உணர்வு கொள்ள அலைபேசி முகப்பிலும் முகநூல் உள்ளிட்ட இணையப் பக்கங்களிலும் தலைவர் பிரபாகரன் படத்தை வடிவமைத்து வைத்திருக்கிறார்கள். இல்லத்து நிகழ்வுகளுக்கான அழைப்பிதழ்களிலும் சுவரொட்டிகளிலும் பதாகைகளிலும் தலைவர் படத்தைப் பிரசுரித்து உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். நிலத்தில் நிறுவப்பட்டிருந்த தலைவரின் சிலையை அகற்றியவர்களால் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனத்தில் நிறுவப்பட்டிருக்கும் எண்ணத்தை என்ன செய்ய முடியும்?

தலைவர் பிரபாகரனின் படத்தை அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் எதனால் உருவானது? யாருக்கும் தொந்தரவாக இல்லாமல், தன்னுடைய சொந்த நிலத்தில் ஒருவர் உருவாக்கிய தலைவரின் சிலையால் என்ன சட்டம் ஒழுங்கு சிக்கல் வந்தது? காவல்துறை பெரிய படையாகக் கிளம்பிப்போய் தலைவர் பிரபாகரனின் சிலையைப் பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்த நிர்ப்பந்தித்தது யார்?

எவ்விதக் காரணமும் இல்லாமல் தலைவர் பிரபாகரனின் சிலையை அகற்றியிருப்பது ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளின் உணர்வுகளையும் ஊனமாக்கும் செயல்.
சாதி மதங்களாகப் பிளந்து, தாழ்வு மனப்பான்மையால் தாழ்ந்து கிடந்த தமிழ் மக்கள், ‘நம்மால் எதுவும் முடியாது’ என முடங்கிப்போய் கிடந்தார்கள். அத்தகைய இழிநிலையை மாற்றி நம்மால்தான் முடியும் என்கிற போர்க்குணத்தையும் தமிழுணர்வையும் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் ஊட்டி, நெஞ்சுரத்தோடு நிமிர வைத்தவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். அவர் வழி பரவும் உணர்வுகள் ஒருமித்த எழுச்சியாகக் கிளம்பிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய ஒடுக்குதல் நடவடிக்கைகளை அரசுத் தரப்பு பாய்ச்சி வருகிறது. தமிழ்ப் பிள்ளைகளின் பேச்சுக்கும் செயலுக்கும்தான் தடைபோட முடியும். ஆனால், அவர்களின் சிந்தனைக்கும் கனவுக்கும் தடை போட இந்த அரசால் எப்படி முடியும்?

உச்சபட்ச போர்க் கொடூரமாக வல்வெட்டித்துறையில் தலைவர் பிரபாகரன் வசித்த வீட்டை இடித்த சிங்கள அதிகாரிகளுக்கும் பிரபாகரனின் சிலையைப் பெயர்த்தெடுத்த தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. ஒருமித்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு தலைவர் பிரபாகரன் சிலையை நிறுவிய இடத்திலேயே மறுபடியும் வைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், அதே இடத்தில் தலைவர் பிரபாகரனின் சிலையை நாம் தமிழர் கட்சியே மறுபடியும் நிறுவும் என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.