ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

93

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணிநியமன ஆணை வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்ற 80,000க்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதுவரை எவ்வித பணிநியமன ஆணையும் வழங்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணி ஆணை வழங்கப் பெறாததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆசிரியர் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் முந்தைய பணியையும் பலர் துறந்து வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்றுப் பரவலையொட்டி போடப்பட்டுள்ள ஊரடங்கில் இவர்களது குடும்ப நிலைமை மிகவும் பாதிக்கப்பட்டு வறுமையில் உழலும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஆறு ஆண்டுகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பல்லாயிரம் பேர் பதவி உயர்வு மற்றும் ஓய்வு பெற்றதனால் ஏராளமான பணி வெற்றிடங்கள் உருவாகியும் தமிழக அரசு ஏன் இதுவரை அவற்றை நிரப்பாமல் வைத்துள்ளது என்ற கேள்வி எழுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ் ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லக்கதக்கது என்ற விதியின் காரணமாக, 2013ல் வெற்றிபெற்றவர்களின் தேர்ச்சி தகுதியானது இந்த ஆண்டோடு முற்றுபெறும் நிலையில் உள்ளது. இறுதி ஆண்டும் கொரோனா ஊரடங்கில் பணி ஆணை வழங்கப்படாமலே முடிந்துவிடுமோ என்ற கவலை ஆசிரியப் பெருமக்களை மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.

கல்லூரிப் பேராசிரியர்களுக்கான மத்திய-மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வுகளின் ( NET – SLET)தேர்ச்சி சான்றிதழானது, ஆயுட்காலம் முழுவதும் பணிநியமனம் செய்யப்படும் வரை செல்லத்தக்கதாக உள்ளது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் தகுதித்தேர்வின் தேர்ச்சியானது ஏழாண்டுகள் மட்டுமே செல்லதக்கத்து என்பதும், அதிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக எவ்வித பணிநியமனமும் செய்யப்படவில்லை என்பது ஆசிரியப் பெருமக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.

எனவே தமிழக அரசு, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடமாக விளங்கும் வகுப்பறைகளை வழிநடத்த காத்திருக்கும் ஆசிரிய பெருமக்களை இனியும் துன்பத்தில் ஆழ்த்தாது இனிவரும் அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமனங்களில் 2013 ஆம் ஆண்டுத் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரிய பெருமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிநியமன ஆணையை வழங்கி நிரப்பப்படாமல் உள்ள பணி வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப முன்வர வேண்டும். மேலும் கல்லூரி பேராசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் உள்ளதுபோல் தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும் காலத்தை ஆயுட்காலமாக மாற்ற வேண்டும் என்றும் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது! – சீமான் எச்சரிக்கை
அடுத்த செய்திசூழலியல் தாக்க மதிப்பீடு குறித்த எதிர்ப்பு