தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான்

56

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை.

ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்றும், இன்றளவும் தமிழின அழிப்பில் ஈடுபட்டுவரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, கண்ணியமிக்க, சமவுரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடிவரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்பு முனையாகும். அதற்காக பெரும்பான்மை பலத்துடன் 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும், தீர்மானத்திற்கு ஆதரவாக நின்ற சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் நாம் தமிழர் கட்சி இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த, பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மூவர் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைத் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத சிறிலங்க அரசிற்கும், அந்த அறிக்கையின் மீது ஆதரவு நிலையெடுக்காத இந்திய அரசிற்கும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், தமிழினத்தின் சார்பாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான, ராஜதந்திர ரீதியிலான நியாயமான அழுத்தமாகும்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழினத்திற்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலைப் போரைத் தொடங்கி, இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு ஆதரவுடன் இரண்டரையாண்டுக் காலம் நடத்தப்பட்ட அந்தப் போரில் மட்டும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission – LLRC) முன்னின்று ஈழத்தில் நடந்த மானுடப் பேரழிவு குறித்து தனது சாட்சியத்தை அளித்த மதிப்பிற்குரிய மன்னார் மாவட்டப் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள், இந்தப் போருக்கு முன் இருந்த வன்னி பகுதி மக்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், போர் முடிந்த பிறகு வன்னி முள்வேலி முகாம்களுக்கு வந்த சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 1,46,679 பேர் குறைவாக உள்ளனர் என்றும், அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமல்போய் உள்ளவர்களாகவோ இருக்கலாம் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார். உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த உண்மையை இன்று வரை சிறிலங்க அரசு மறுக்கவில்லை. ஆனால், அதுபற்றி இன்று வரை எந்த வினாவையும் சிறிலங்க அரசை நோக்கி இந்திய அரசு எழுப்பவில்லை. இது இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையில் அது உடந்தையாக நின்றது என்பதற்கான மற்றுமொருச் சான்றாகும்.

இந்திய அரசின் மெளனமே, சிறிலங்க அரசு திட்டமிட்டுச் செய்த மாபாதகச் செயலை இனப் படுகொலை என்று சர்வதேசம் கூற முன்வராததற்குக் காரணமாகும். எனவேதான் தமிழின அழிப்பு என்பது போர்க் குற்றம் என்ற அளவோடு நி்ற்கிறது. இந்த நிலையில்தான், தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்பது நம்பகமான குற்றச்சாற்று என்று ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. அந்த அடிப்படையிலேயே, ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இனப் படுகொலைப் போர் முடிந்து வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேறக்குறைய 3 இலட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவில்லை. ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுகிறது. அவர்களுடைய காணிகள் சிங்களர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும்பகுதியை இராணுவப் பகுதிகளாக (Cantonments) சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது. வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான காணிகள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழியேதுமின்றி, ஈழத் தமிழினம் சிதறடிக்கப்பட்டு, சின்னபின்னமாக்கப்பட்ட நிலையில், சிறிலங்க அரசை மண்டியிடச் செய்ய வேண்டுமெனில், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிப்பதே ஒரே வழியாகும். அந்த புரிந்துணர்வோடு தமிழக சட்டப் பேரவை இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது ராஜதந்திர ரீதியில் மிகச் சாமர்த்தியமான தீர்மானமாகும்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த தமிழ் மக்கள் எதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தார்களோ அந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றியுள்ளார்.

இதற்காக தமிழினம் அவருக்கும், தமிழக சட்டப் பேரவைக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் என்றென்றும் நன்றி தெரிவிக்கும் என்பது மட்டுமின்றி, இத்தீர்மானம் தமிழினம் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஒரு புத்துணர்வை தந்துள்ளது என்பதை நன்றியுடன் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, காணாமல் போன மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்ததற்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.

முந்தைய செய்திதமிழர்களை தாக்கியவர்கள் போர் குற்றவாளிகள் எனவும் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவும் இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
அடுத்த செய்திதமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர்கள் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள்.