எல்லைத் தாண்டினால் சுடுவேன் என்று சொல்கிற நாட்டுக்கு, உலகின் எந்த நாட்டு பிரதமராவது மானங்கெட்டு நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போவானா?- சீமான் காட்டம்

80

மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 12-03-15 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், கட்சியின் தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் பேசியதாவது:

இலங்கை, 2008-2009இல் ஒரு இன அழிப்புப் போரை நடத்தியது. அந்தப் போரை நடத்தியது இலங்கை அல்ல. இந்தியப் பெருநிலத்தை ஆண்ட காங்கிரசு. போர் முடிந்த பின் ராஜபக்சேவும், ராஜபக்சேவின் சகோதர் கோத்தபய ராஜபக்சேவும் இந்தியா விரும்பிய போரையே நடத்தினோம் என்று கூறுகிறார்கள். 30 ஆண்டுகளாக ஜெயவர்த்தனே செய்த தவறை நாங்கள் செய்யவில்லை. ஜெயவர்த்தனே இந்தியாவை நம்பவில்லை; நாங்கள் நம்பினோம் என்று குறிப்பிடுகிறார்கள். 20 நாடுகளின் துணைகொண்டுதான் இந்தப்போரை நடத்தினார்கள். 20 வல்லாதிக்க நாடுகளின் துணைகொண்டுதான் புலிகளை வீழ்த்த முடியும் என்கிற அளவுக்கு வலிமையான படையை தேசியத்தலைவர் பிரபாகரன் கட்டியெழுப்பியிருந்தார். அதே கருத்தை, தந்தி தொலைக்காட்சியின் நேர்காணலில் ரனில் விக்ரமசிங்கே, இந்தியாதான் போரை நடத்தியது என்கிறார். போரை நடத்தியது காங்கிரசு என்றால், பார்த்துக்கொண்டு இருந்தது பாஜக. எதிர்க்கக்கூடிய வலிமை இருந்தும் மெளனமாயிருந்து போரை நடத்தியதில் பங்கு வகித்தது பாஜக. எல்லைத்தாண்டி வந்தால் சுடுவேன் என்கிறார் ரனில். எல்லைத் தாண்டி வந்தால் சுடுவேன் என்று சொல்கிற நாட்டுக்கு, உலகின் எந்த நாட்டின் பிரதமராவது நாக்கைத் தொங்க போட்டுக்கொண்டு மானங்கெட்டு போவானா? நட்போடு இருக்கிறோம் என்று இந்தியாதான் சொல்கிறது. ஆனால், இலங்கை ஒருபோதும் சொல்லவில்லை. இன்றுவரை மீனவர்களைச் சிறை பிடிக்கிறான். படகுகளைச் சிறைப் பிடிக்கிறான். சுடுவேன் என்கிறான். வளங்களைச் சுரண்டுகிறான் .நட்பு நாடு என்றால் என்ன? என் நாட்டிலிருந்து உன் நாட்டுக்கும், உன் நாட்டிலிருந்து என் நாட்டுக்கும் கல்வி கற்க வரலாம். சுற்றுலா செல்லலாம். பார்வையிடலாம். இதுதான் நட்பு நாடு. இதை எதையுமே செய்யாது மீனவர்களை அடிக்கிற நாடு நட்பு நாடா? பகை நாடா? இலங்கை நட்பு நாடு என்றுகூறி தமிழர்களின் உணர்வை அவமதிக்கிறது இந்தியா. இத்தாலிக் கடற்படையை சிறைப்படுத்தியதை போலத்தான், மீனவர்களை சிறைப்படுத்துவதும் என்கிறார் ரனில். அவர் சொல்வதுபோல பார்த்தால், சிங்கள இராணுவத்தைத்தான் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். தன் நாட்டின் குடிமக்களைக் கொன்று குவிக்கும் நாட்டிற்கு உலகின் எந்த நாடாவது பயிற்சியும், பணமும் கொடுக்குமா? இலங்கை பிரச்சனைக்கு எதற்கு இங்கு நின்றுகொண்டு பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். உலகில் தமிழர் எங்கிருந்தாலும், அவர்களின் அரசியலைத் தீர்மானிக்கும் இடம் தமிழ்நாடு. 12 கோடித் தமிழர்களுக்கு வலிமைமிக்க அரசியல் இல்லை. அந்த மண்ணில் சிங்களன் ஆயுதம் ஏந்தி, துப்பாக்கியைத் தொண்டைக்குழிக்குள் வைத்து உரிமையா? உயிரா? என்று கேட்கிறான். அங்கு அரசியல் இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து என எந்த நாட்டிலும் தமிழர்களுக்கு அரசியலில்லை. அந்த நாட்டின் அரசியலோடு இணைந்து செல்கிறோம். கர்நாடாகவில் 1 கோடித் தமிழர்கள் இருந்தும் அங்கு அரசியல் இல்லை. அந்த அரசியலோடு இணைந்து நிற்கிறோம். 8 கோடி தமிழ்த்தேசிய இன மக்கள் நிறைந்து, நிலைத்து வாழ்கிற இடம் தமிழ்நாடு. 234 சட்டமன்றத் தொகுதிகளும், புதுவை, காரைக்கால் சேர்த்து 40 பாராளுமன்றத் தொகுதிகளையும் பெற்றிருக்கும் வலிமைமிக்க அரசியல் இங்குதானிருக்கிறது. உலகின் எங்கு அடிமையாய் இங்கிருந்து போனவன் இருந்தாலும் என் மகன் என்று துடிக்கிற சுமந்த வயிறு தமிழ்நாடு.
நாம் எல்லோராலும் கைவிடப்பட்ட அடிமை சிறுபான்மைத்தேசிய இனத்தின் மக்கள் என்கிறார் தலைவர் பிரபாகரன். எனக்காக பேசவேண்டிய நாடு இந்தியா. இந்தியா என்ற நாடு நாடாவதற்கு முன்பிருந்தே இந்த நாட்டிற்காக பாடுபட்டவன் தமிழன். வெள்ளைக்காரன் இந்தியாவிற்கு வந்தான் என்கிறார்கள். அது பச்சைப்பொய். வெள்ளைக்காரன் தனித்தனி மாகாணங்களாக இருந்த அன்றைய நாட்டின் துறைமுகங்களுக்கு, மிளகு வாங்கி விற்க வந்தான். அப்படி வந்து அடிமைப்படுத்திய வெள்ளைக்காரனை எம் மண்ணைக்காப்பதற்காக அடித்து விரட்டினான் எம் பாட்டன் பூலித்தேவனும், தீரன் சின்னமலையும், மருதுபாண்டியரும். அதற்குப்பின், இந்தியா என்ற நாடு அடைந்தபின்னும் போராடி சிறைப்பட்டார்கள் வஉசி உள்ளிட்ட எம் பாட்டன்கள். இந்த நாட்டின் விடுதலைக்குச் சொல்ல இயலாத அளவுக்கு விலைகொடுத்து நின்ற பிள்ளைகள் நாம். மீத்தேன், நியூட்ரினோ,கச்சத்தீவு என வஞ்சிக்கப்பட்டு இந்தியாவை நேசித்துக்கொண்டிருக்கிறோம். எம் தாய் நாடு என்று கூறிவருகிறோம். எம் ஈழ உறவுகள் எங்கள் தந்தையர் நாடு என்று இந்தியாவை நேசித்தனர்.சிங்களர்கள் எவரது வீட்டிலாவது காந்தி, நேரு, இந்திரா காந்தி படம் இருக்கிறதா? ஆனால், ஈழத்தமிழர்களின் ஒவ்வொருவர் வீட்டிலும் பகத்சிங், சுபாஷ் சந்திரபோஸ்,காந்தி, நேரு படங்கள் இருந்தது. இந்தியாவுக்கும், இலங்கைக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறபோது இந்தியாவிற்கு ஆதரவாக எங்கள் தந்தையர் நாடு வெல்லட்டும் என கைதட்டி ஆர்ப்பரித்தவர்கள் ஈழத்தமிழர்கள். அமெரிக்கா தீர்மானம் கொண்டு வருகிறது. அதனை ஆதரிக்க வேண்டும் என்கிறார்கள். நியாயமாக அந்தத் தீர்மானத்தை இந்தியாதான் கொண்டு வந்திருக்க வேண்டும். நான் வரி, வாக்கு செலுத்தி வாழ்கிற இந்தியாதான் எனக்கான உரிமையைப் பெற்றுத்தந்திருக்க வேண்டும். அதனால், நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் காங்கிரசு இப்போதுதான் எதிரி. சிங்களன் 60ஆண்டுகளாகத்தான் எதிரி. பாஜக பரம்பரை எதிரி. ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பின்புதான் காங்கிரசு எதிரி. பாஜக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிரி. சிங்களன்கூட நம் விடுதலைக்குத் துணை நிற்பான். ஆரியப்பார்ப்பனன் ஒருபோதும் துணை நிற்கமாட்டான். சோராமசாமிக்கும், சுப்ரமணியசாமிக்கும், இந்துராமுக்கும் நாம் என்ன துரோகம் செய்தோம்? ஆனால், அவர்கள் நம் இனத்திற்கு எதிராகவே எப்போதும் நிற்கிறார்கள்.

ரனில் 5,000 பேர்தான் போரில் இறந்து போனார்கள் என்கிறார். சிறீசேனா 80,000விதவைகள் இருக்கிறார்கள் என்கிறார். அதிலும், 10,000 குறைத்து சொல்லிவிட்டார். 90,000 விதவைகள் இன்று அங்கு இருக்கிறார்கள். அப்படியென்றால், அவரது கணவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள்? அவர்களது குழந்தைகள் எங்கே? சரணடைந்த 10,000 போராளிகள் எங்கே? சரணடைந்த போராளிகளை துன்புறுத்தக்கூடாது என்பது போர் மரபு. அவர்கள் சரணடையும்போது அவர்களின் உடல்நலத்தை ஆராய்ந்து, தற்போதுள்ள உடல்நலத்துடன் ஒப்பிட்டு ஆராய வேண்டும். காணாமல்போன அந்தப் போராளிகளைக் கண்டுபிடித்துத்தருமாறு கோரிதான் தங்கை ஆனந்தி பட்டினிப்போராட்டத்தை துவங்கினாள். இதனைப்பற்றி சுஷ்மா கருத்து என்ன? மோடியின் கருத்து என்ன? அதனைக்கேட்டறியாது ராஜபக்சே வந்தபோது என்ன செய்துகொண்டு இருந்தார்கள் இவர்கள்? அங்கு இந்துக்கோயில்களை இடித்துத் தள்ளிய பெளத்தனான ராஜபக்சேவை இவர்கள் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குள் எப்படி அனுமதித்தார்கள்? சீனா, பர்மா, ஜப்பான் போன்ற பெளத்த நாடுகள் இருக்கிறபோதும், அங்கு மதிப்புமிக்க தலைவர்கள் இருந்தும் சாஞ்சியில் புத்த விகாரைத் திறக்க ராஜபக்சேவை அழைக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால், தமிழர்களை எந்தளவுக்கு அவமதிக்கிறார்கள். இதனை திட்டமிட்டு செய்கிறது இந்தியா. ராஜபக்சே 30 மைல் தூரத்துக்கு பக்கத்தில் சாமி கும்பிட வரும்போது உன்னால் என்ன செய்ய முடியும்? என்று தமிழர்களை சீண்டுகிறது. காமன்வெல்த் அமைப்பில் பல நாடுகள் இருந்தும் திட்டமிட்டு ராஜபக்சேவை அழைக்கிறார்கள். ராஜபக்சேவை சிறப்பு அழைப்பாளராக அழைத்து ஒருபக்கம் சோனியா காந்தியும், மறுபக்கம் மன்மோகன் சிங்கும், நடுவில் ராஜபக்சேவையும் அமரவைத்து, ராஜபக்சே போர்க்குற்றவாளி அல்ல! எங்கள் நண்பன் என்று உலக நாடுகளுக்குச் சொல்கிறார்கள். இந்தியா பெரும் சந்தை. சீனாவும், இந்தியாவும் உலகமக்கள் தொகையில் பாதியைக் கொண்டிருக்கிறது. உலகமக்களில் 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா. இந்தியாவோடு உலகின் பல்வேறு நாடுகள் வணிகம், ஒப்பந்தம் என தொடர்பு வைத்திருக்கிறது. இந்த வகையில் பார்க்கிறபோது, இந்தியாவுடான பகையா? தமிழர்களின் பகையா? என்று வரும். அதில் உலகநாடுகள் இந்தியாவோடுதான் நிற்கும்.

ஐயா மோடி இலங்கைக்குச் செல்கிறார். அப்படிச் சென்று அங்கு இனப்படுகொலையைப் பற்றிப் பேசுவாரா? அப்படிச் சொன்னால், நீ குஜராத்தில் செய்ததைத்தான் இலங்கையில் நான் செய்தேன் என்று சொல்வான். போர்க்குற்ற விசாரணை என்றால், முதலில் அதை குஜராத்தில் போடு என்று சொல்வான். சுப்ரமணியசாமி அமெரிக்காவுக்குச் சென்று, இலங்கைக்குப் போர்க்குற்ற விசாரணை நடத்தினால் ஈராக்கிலே கோருவார்கள். காஷ்மீரிலே கோருவார்கள் என்று கூறியிருக்கிறார். ஈழத்தில் என்ன நடந்ததோ, அதேதான் இன்று காஷ்மீரிலே நடக்கிறது. கொலைகாரர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொலையை மூடி மறைக்கிறார்கள். மோடி போய் இலங்கைப் பாராளுமன்றத்தில், இலங்கை தீவிரவாதத்தை ஒழித்திருக்கிறது; இலங்கை-இந்தியாவுக்கிடையே நட்புறவு பேணுவோம் என்பார். ஒருநாள் என்னிடம் இந்த அதிகாரம் சிக்கும். அன்றைக்கு பழிக்கு பழி வாங்குவேன். பாகிஸ்தான் தீவிரவாதத்தலைவர்களை வரச்சொல்லி அறிக்கை விடுவேன். அப்போது, இவர்கள் துடித்தெழுவார்கள். இப்படித்தானே எனக்கும் வலித்தது என்று அன்றைக்கு உரைக்கும்.
யாழ்ப்பாணத்துக்கு மோடி செல்லவிருக்கிறார். அவர் யாரை சந்திக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் எவ்வளவு நேரம் பேச வேண்டும்? என்று பயிற்சி கொடுத்து வைத்திருப்பார்கள். அதனை மீறிப் பேசினால், மோடி சென்றவுடனே, அவர்களைக் கொன்றுவிடுவார்கள். இப்படித்தான் நடக்கும். இப்படித்தான் இதுவரை நடந்து வருகிறது. ரனில் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்தார் என்கிறார் சுஷ்மா. சிங்களர்களைக் காப்பாற்ற எப்போதும் துடிப்பதும்போலத்தான், இப்போதும் ரனிலைக் காப்பாற்ற துடிக்கிறார் சுஷ்மா. சுடுவோம் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தவருக்கு மன்னிப்பு வெளிப்படையாக கேட்கத் தெரியாதா?

ஆசியாவின் வல்லாதிக்க நாடு இந்தியா. இந்தியாவின் காலடியில் இருக்கிறது இலங்கை. தமிழர்கள் 8 கோடி பேர் இந்தியாவில் வாழ்கிறார்கள். இந்தியாவின் முடிவைப் பொறுத்துத்தான் இசைவும், அசைவும் நடக்கும். அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தது. இந்தியா அதனை ஆதரிக்கவுமில்லாமல், எதிர்க்கவுமில்லாமல் நடுநிலை வகித்தது. ராஜபக்சே 6மீனவர்களை விடுதலை செய்தார். காமன்வெல்த் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக ராஜபக்சேவை அழைத்தார்கள். 6 மீனவர்களை விடுதலை செய்தார். சிறீசேனா விருந்தினராக வந்தபோது, படகுகளை விடுவித்தார். மோடி இப்போது போகிறபோது, 86 மீனவர்களை விடுதலை செய்கிறார்கள். தாலிபான் போராளிகள் பிணைக்கைதியாக ஒருவரை பிடித்துவைத்துக்கொண்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்றச்சொல்லி மிரட்டுகிறார்கள். இந்த செயலுக்குப் பெயர் பயங்கரவாதம், தீவிரவாதம் என்றால், இந்த நாட்டின் குடிமக்களாகிய மீனவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு நட்போடு அணுகினால்தான் விடுதலை என்றால், அந்தச் செயலுக்கு என்ன பெயர்? சிறீசேனா, ராஜபக்சேவுக்கு பரவாயில்லை என்கிறார்கள். இப்போதும் ராஜபக்சேவின் கட்சிதான் ஆட்சியிலிருக்கிறது. ராஜபக்சே தோல்வியடைந்துவிட்டால் எல்லாம் முடிந்து விட்டதா? செத்த எம் உறவுகளின் படுகொலைக்கு ராஜபக்சேவின் தோல்வி ஈடாகிவிடுமா?

மோடி, இலங்கைப் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும்போது தமிழ், தமிழர் என்ற வார்த்தையைக்கூட குறிப்பிடமாட்டார். நான் கடந்த பாராளுமன்றத் தேர்தல் பரப்புரையில் என்ன சொன்னேனோ, அதுதான் இப்போது 8 மாத காலமாக நடந்து கொண்டிருக்கிறது. மோடி இலங்கையில் தொழில் வர்த்தக ஒப்பந்தம் போடுவார். சம்பூர் அணையை திறக்கவிருக்கிறார். அது தமிழர்கள் நிறைந்து வாழ்ந்த பூமி. இப்போது தமிழர்களை விரட்டிவிட்டு அணை கட்டியிருக்கிறார்கள். வீடு கட்டிக்கொடுத்தேன் என்கிறார்கள். வீடு கட்டிக்கொடுத்தேன் என்றால், இருந்த வீட்டை இடித்தது யார்?

எம் விடுதலையை அம்மையார் ஜெயலலிதா பெற்றுத்தருவார்; கருணாநிதி பெற்றுத்தருவார்; காங்கிரசு பெற்றுத்தரும்; பாஜக பெற்றுத்தரும் என நம்பி நான் நிற்கவில்லை. என்னை நம்பியே நான் விற்கிறேன். நான் சுவாசித்து நீங்கள் உயிர்வாழ முடியாது. அதனால், உங்கள் விடுதலைக்கு உங்களை நம்பியே நீங்கள் நிற்க வேண்டும். கொடுக்கிற கை உயர்ந்து இருக்கும்; வாங்குகிற கை தாழ்ந்து இருக்கும் என்கிறார்கள். கொடுக்கிற கை மட்டுமல்லாது, எடுக்கிற கையும் உயர்ந்துதான் இருக்கும். உரிமையை பிச்சை எடுத்துப் பெற முடியாது; போராடித்தான் பெற வேண்டும் என்கிறார் அண்ணல் அம்பேத்கர். அதே அம்பேத்கர்தான் சொல்கிறார், கோயிலில் ஆடுகளைத்தான் வெட்டுகிறார்கள் சிங்கங்களை அல்ல! என்கிறார். நாம் சிங்கங்கள் அல்ல! புலிகள்! அதுவும் விடுதலைப்புலிகள்!! என் நாடு எனக்கான விடுதலையைப் பெற்றுத்தர வேண்டாம். பெறும்போது தடுக்காமல் இருந்தால் போதும். இப்போது கச்சத்தீவை கேட்கக்கூடாது என்கிறார் ரனில். அது ரனிலின் தாத்தன் சொத்தா? எம் பாட்டன் சொத்து. அது கச்சத்தீவை கொடுத்தது கொடுத்ததுதான் என்கிறது இந்திய அரசு. எவ்வளவு நாள் இதைச் சொல்வார்கள்? ஒருநாள் ஆட்சி அதிகாரத்திற்கு வரும்போது முதல் தீர்மானத்திலேயே, கச்சத்தீவை திருப்பி எடு! இல்லாவிட்டால், தமிழ்நாட்டைப் பிரித்து விடு என்பேன். நாட்டின் பெரிய தலைவர்கள் எல்லாம், சீமான் பிரிவினைவாதி என்பார்கள். என் தாய்நிலத்தை சேர்க்க நினைக்கிற நான் பிரிவினைவாதி; என் தாய்நிலத்தை பிரித்துக்கொடுத்த நீ தேசியவாதியா? என்று கேட்பேன்.

இது இளைய தலைமுறை பிள்ளைகள். அதுவும் தமிழ்த்தேசிய பிள்ளைகளுக்கான காலம். ராஜபக்சே போய், சிறீசேனா வந்துவிட்டதால் போராடத்தேவையில்லை என்கிறார்கள். சிங்களன் எப்போதும் தமிழனுக்கு எதிராகத்தான் இருப்பான். அந்நாட்டில் அரசைத்தீர்மானிப்பது புத்த பிக்குகள். அவர்கள் பாடத்திட்டத்திலே நஞ்சை விதைக்கிறார்கள். பாடத்தில் பூதம் போன்ற உருவம் போட்டு, இவன் தமிழன் நரமாமிசம் சாப்பிடுவான் என்று திணிக்கிறார்கள். அதனைப் படித்துவிட்டு வருகிற சிங்களன் எப்படி தமிழனுக்கு ஆதரவாய் இருப்பான்? பிரிட்டன், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தமிழர்கள் நியாயமான தீர்வு கோரி போராடி வருகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் என்று சொன்ன இவர்கள் ஏன் பச்சிளங்குழந்தைகளை ஏன் கொன்றார்கள்? சொந்த நாட்டின் மீதே இராணுவத்தாக்குதலைச் செய்ததால் லிபியாவில் புரட்சி வெடித்தது. சிரியா மீது உள்நாட்டுப்போர் நடந்தபோது உலகம் துடித்தது. உள்நாட்டுக்குள் போர் நடக்கிறபோது வானூர்தி தாக்குதலைச் செய்யக்கூடாது என்பது போர் மரபு. ஆனால், இலங்கையில் நடந்த தாக்குதல் எல்லாம் வானவழித்தாக்குதலாகத்தான் தொடுக்கப்பட்டது. இதனை மனித உரிமை மீறல் என்கிறார்கள். உயிரோடு இருக்கும்போது உரிமையை பறிப்பது உரிமை மீறல்? உயிரையே பறிப்பது, எப்படி உரிமை மீறலாகும்? அது கொலை. அதுவும் படுகொலை. குழந்தைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், ஊடகங்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் தொடுக்கப்பட்ட திட்டமிட்டப் படுகொலை.

நம் பாட்டன் இராவணன் மீது இன்றும் அம்பெய்து கொண்டாடுகிறார்கள். செத்துப்போன நம் பாட்டன் இராவணனைக் கொன்றவனே எனக்கு கடவுள் என்றால், அது எவ்வளவு பெரிய இழிநிலை? உன் அப்பனை ஒருவன் கொல்கிறான். உன் அப்பனை எவன் கொன்றானே அவனே உனக்கு அப்பனாக இருக்கிறான். இதனையெல்லாம் கடந்து சென்றவிட முடியாது. நம் வீடிழந்து, நாடிழந்து அகதியாக மாறினோம் .இவ்வளவு நடந்தும் வெறும் 5ஆண்டுகள்தான் ஆகியிருக்கிறது. ஆனால், அதனையெல்லாம் மறந்து சென்றுவிட முடியுமா? இதனை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்கிறார்கள். என் இனத்துக்கென்று நாடு அடைவதைவிட ஒரு அரசியல் எனக்கென இருக்க முடியுமா? அண்டா,குண்டா, ஆடு, மாடு கொடுப்பதா தமிழ்த்தேசிய இனத்துக்கு அரசியல்? இன்றைக்கு ஐயா கலைஞர் மாலை, துண்டு போட வேண்டாம். காசாகக் கொடுத்து விடுங்கள் என்கிறார்கள். இதனையெல்லாம் சகித்துக்கொண்டு இன்னும் தலைவர் என்று சென்றுக்கொண்டிருக்கிறார்கள். உலக நாடுகளிடம் நீதி கேட்டுப்போராடிக்கொண்டிருக்கும் வேளையில் மோடி இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது இலங்கையை அங்கீகரிப்பது போலாகிறது. எல்லா நாட்டிலும் இராணுவம் இருக்கிறது. அதில் எல்லோரும் இடம்பெற முடியும். ஆனால், இலங்கையில் இருக்கும் இராணுவத்தில், தமிழர்கள் ஒருபோதும் இடம்பெற முடியாது என்றால், அந்த இராணுவம் எப்படி தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்? போர் துவங்கியது நில உரிமை, காவல்துறை உரிமைக்காகத்தான். ஆனால், இந்த அடிப்படை உரிமையே இன்றுவரை பெற முடியவில்லை. தமிழக அரசின் சார்பில் அம்மையார் ஜெயலலிதா இலங்கை இனப்படுகொலை செய்த நாடு என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் இனப்படுகொலை நடந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். இதுதான் தமிழ்த்தேசிய இனத்தின் ஒட்டுமொத்த கருத்து. இந்தியா இதற்கு ஏதும்கூறாது மெளனமாயிருப்பது இலங்கையின் இனப்படுகொலையை ஆதரிப்பது போலாகிறது. இந்தப் பயணத்தை மோடி மேற்கொண்டால், இளைய தலைமுறை பிள்ளைகளிடம் இந்தியா மீது வெறுப்பு வரும். வருங்காலத்தில் இந்திய உணர்வே செத்துவிடும். பயணம்கூடாதென்று கூறியும் சென்றால், அது தமிழர்களுக்கு தீராத வன்மத்தையும், வடுவையும் ஏற்படுத்தி விடும்.

இவ்வாறு சீமான் பேசினார்.