ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டது இனவழிப்பே – முன்னை நாள் பிரித்தானிய அமைச்சர்

15

மேற்கு ஹரோவிற்கான (Harrow West) தொழில்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னை நாள் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சருமான, கரெத் தொமஸ் (Gareth Thomas) அவர்களுடனான, அத்தொகுதி தமிழ்மக்களின் சந்திப்பின் போது, CHOGM மாநாட்டில், பிரதமர் கமரூன் மற்றும் இளவரசர் சார்ல்ஸ் ஆகியோரை கலந்து கொள்ள வேண்டாமென்றும்,மேலும் இம்மாநாட்டில் பிரித்தானிய சார்பில் எந்தவிதமான பிரதிநித்துவம் இருக்கக் கூடாதென்றும் 300ற்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டதுடன், இலங்கை தொடர்பான பல பிரச்சனைகள் சந்திப்பில் கலந்துகொண்ட மக்களாலும், இச்சந்திப்பை ஏற்பாடு செய்த பிரித்தானிய தமிழர் பேரவையினாலும் முன் வைக்கப்பட்டது.

வெளிப்படையாகவே, அவர் முன் வைக்கப்பட்ட, ” இலங்கையில் இடம்பெற்றது ஒரு இனவழிப்பு நடவடிக்கை என்பதை ஆமோதிக்கிறீர்களா?” என்ற கேள்விக்கு , “எனது பார்வையிலும் இலங்கையில் நடந்தேறியது இனவழிப்புத் தான்” என்று உறுதியாக பதிவு செய்தார்.

அத்துடன், தொழிற்கட்சி ஆட்சியிலிருந்திருக்குமேயானால், CHOGM மாநாட்டை நிச்சயம் புறக்கணித்திருப்போம் எனவும், தனது தலைமையும், தொழிற்கட்சி சாகக்களும் தொடர்ந்து இது சம்மந்தமான அழுத்தங்களை பிரித்தானிய அரசாங்கத்தின் மேல் பிரயோகித்துக் கொண்டேயிருப்போம் எனவும் உறுதியளித்தார், மேலும், தமிழ் மக்கள் செறிந்து வாழும், ஆளும் (conservative) கட்சியினரின் பாரளுமன்ற தொகுதிகளில், இந்த கையெழுத்து வேட்டையினை முன்னெடுப்பதின் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.