எட்டுத் திக்கும் எமக்கான குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும் – இன அழிப்புக்கான நீதி கேட்கும் ஈருறுளிப் பயணம்

25
எல்லாமே முடிந்துவிட்டது என்று சிங்களம் திமிரோடு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை வெற்றியாகக் கொண்டாடி முடித்தது. ஆனாலும், நாம் வீழ மாட்டோம்! களத்தில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் பலத்தோடு, இங்கே நாம் புலத்தில் எழுந்து நிற்கின்றோம்!! என்ற பறைசாற்றலோடு புலத்தில் தமிழர்கள் பொங்கி எழுகின்றார்கள்.

எழுவோம்! எழுவோம்!! ஒன்றாக எழுவோம்!!! என்ற உயிர்ப்போடு புலம்பெயர் மண்ணில் தங்கள் தியாக வேள்விகளைத் தமிழர்கள் தொடர்ந்து வருகின்றார்கள். எங்கள் தாயக மண்ணில் எரிக்கப்பட்ட, புதைக்கப்பட்ட, உயிர்வாழ மறுக்கப்பட்ட, அவமானப்படுத்தப்பட்ட அத்தனை ஈழத் தமிழர்களது ‘தமிழீழம்’ என்ற இலட்சியத்தை உயிர்மூச்சாகச் சுமந்து, வலி தாங்கித் தம்மை வருத்திப் பெரும் வேள்வி நடாத்தி நடைப்பயணம் ,ஈருறுளிப் பயணம் என பல போராட்டங்கள் செய்து வந்தது யாவரும் அறிந்ததே.

அந்தவகையில் ஈகைப்பேரொளிகளின் நினைவு சுமந்து   மீண்டும் ஜெனிவா ஐநா  முருகதாசன் திடலில் இருந்து  சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி, பெல்ஜியம் தலைநகர் புரூசல்சில் உள்ள ஐரோப்பிய ஆணையம்வரை  மனித நேய நீதிக்கான ஈருறுளிப்  பயணத்தை மனித நேய செயற்பாட்டாளர்  திரு கிருபானந்தன் அவர்கள் நேற்றைய தினம் ஆரம்பித்தார்.

16.09.2013 அன்று  நடைபெற்ற மாபெரும் நீதிக்கான பேரணி நிகழ்வின் இறுதியில்  மாவீரர்களின் உறுதியுடனும் மக்களின் வாழ்த்துக்களுடனும் சீராக இல்லாத காலநிலையிலும் இரவு நேரம் 76 KM தூரத்தை  கடந்து   Lausanne நகரை ஈருறுளிப் பயணம் அங்கு ஒன்றுகூடிய தமிழ்மக்களின் வரவேற்புடன் வந்தடைந்தது.

அதை தொடர்ந்து நேற்றைய தினம் காலை 9 மணிக்கு Lausanne நகரின் முதல்வரின் செயலாளருடனான சந்திப்பு நடைபெற்றது . சந்திப்பின் போது ஈகைப்பேரொளி செந்தில்குமரனின் தியாகத்தின் காரணத்தை தெளிவாக அங்கு முன்வைக்கப்பட்டது.

தமிழ் மக்களுக்கான நீதியை பெறுவதற்கு  சுவிஸ் ஐநா விடம் தனது அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பதை சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. இறுதியில் Lausanne நகரின் முதல்வரின் செயலாளலர் மனிதநேய செயற்பாட்டாளருக்கு மலர் செண்டு வழங்கி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் .

சந்திப்பை தொடர்ந்து Bern நகரை நோக்கி ஈருறுளிப் பயணம் தொடர்ந்தது .110 KM தூரத்தை கடந்து மாலை நேரத்தில் Bern நகர மக்களின் வரவேற்புடன் பாராளுமன்றத்தை வந்தடைந்தது.

இன்று (18.09.2013 ) காலை ஈருறுளிப் பயணம் Basel நகரை நோக்கி பயணிக்க உள்ளது .
ஈருறுளிப் பயணம் இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்ஜியம் தலைநகர் புரூசல்சிலில் ஐரோப்பா பாராளுமன்றத்தின் முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சொல்லில் அடங்கா துயரத்தில் துடிக்கும் எம் உறவுகளின் உரிமைக்கு இவர்களின் உறுதி தளராத நீதி கேக்கும் பயணத்தை அனைத்து புலம்பெயர் தமிழ் மக்களும் ஆதரிப்பதோடு அவர்களுக்கு வாழ்த்தும் உற்சாகமும் வழக்கும் முகமாக அவர்களை  தொடர்புகொள்வதற்கு  பின்வரும் தகவல்களை இங்கே குறிப்பிடுகிறோம் .

ஈழத்தமிழர்களின் அவலங்களை அகற்றுவதற்கு அகிம்சை முதல் ஆயுதப் போராட்டம் வரை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சிங்கள அரசு எம்மினத்தை அழித்து இன்றும் அடக்கு முறைக்குள்ளேயே வைத்துள்ளது. சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாமல் தமிழினம் தத்தளிக்கிறது. இந்நிலையில் சர்வதேச சமூகம் தீர்வு ஏதாவது பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த தமிழ் மக்கள் பலமுறை ஏமாற்றப்பட்டனர்.
இன்று சிங்கள அரசின் இன அழிப்புக் குறித்த விடயங்கள் அனைத்தும் அம்பலமாகி இருக்கின்ற சூழ்நிலையில் உண்மைகளை சர்வதேச சமூகம் அறிந்திருக்கின்ற இத்தருணத்தில் நாமும் எல்லோரும் ஒன்றுதிரண்டு சர்வதேச சமூகமே உன் மௌனத்தை கலைத்து எம்மினத்திற்கு நியாயமான தீர்வினை பெற்றுத்தருவதற்கு விரைந்து செயற்படு என்று கேட்போம்.
வித்தாகிப் போன எம் மாவீரர்களின் கனவுகளை நனவாக்கவும் எமது விடுதலைப் போராட்டம் முடிந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்கும்  சிங்கள அரசிற்கு  சாவு மணியடிக்கவும்  வாருங்கள், முடியவில்லை எம் விடுதலை வீச்சு அதுவே எங்களின் மூச்சு என்பதை உலகிற்கு உணர்த்துவோம் ஒன்றாய் வாரீர்.

மனிதநேய செயற்பாட்டாளர்களை தொடர்புகொள்வதற்கு :
0041798611482
முந்தைய செய்திஈழச் சகோதரிகள் தான் ஆண்டாள் பாசுரத்தின் இலக்கணம் – புகழேந்தி தங்கராஜ்!
அடுத்த செய்திசுதந்திர தாகத்துடன் தமிழீழ பாதையில் நீதி கோரி நீண்ட பயணம் செய்கின்றோம்!