வன்னி முகாமில் சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்

30

இலங்கையில் வன்னி முகாமில் இன்னமும் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் சிலரை பணயக் கைதிகளாக பிடிக்க வந்த சிங்கள இராணுவத்தினரை எதிர்த்த தமிழர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

வன்னி முகாமில் இருந்து இரண்டு பேரை விசாரணை என்ற பெயரில் சிங்கள இராணுவம் பிடித்துச் சென்று அனுராத புரம் சிறையில் அடைத்துள்ளது. இதனை எதிர்த்து வன்னி முகாமில் இருந்த தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஈடுபட்ட மூன்று பேரை பிடிக்க வந்த இராணுவத்தினரை மற்றவர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய சிங்கள இராணுவத்தினர் 185 பேரை பிடித்துச் சென்று அனுராதபுரம் கொண்டு சென்றுள்ளனர். அனுராத புரம் சிறைக்கு கொண்டு சென்ற தமிழர்களை அங்கிருக்கும் சிறை கண்காணிப்பாளர் தனது காலில் விழுந்து வணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். அதனை எதிர்த்தவர்களை மண்வெட்டியை பயன்படுத்தும் கட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்த 185 பேர் மட்டுமின்றி, அனுராதபுரம் சிறையில் ஏற்கனவே இருந்த 35 அரசியல் கைதிகள் மீதும் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் 22 அரசியல் கைதிகள் பலத்த காயமுற்றுள்ளனர். அவர்களை அங்கிருந்து கொழும்புவிலுள்ள மகர சிறைச்சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். காயம்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்காத கரணியத்தால் தலையில் கடுமையாகத் தாக்கப்பட்ட ஒரு அரசியல் கைதி இன்று மாலை உயிரிழந்துள்ளார். மற்றொரு அரசியல் கைதி உணர்வற்ற நிலையில் உள்ளார். காயமுற்ற அரசியல் கைதிகளை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சென்று பார்த்துள்ளார்.

வன்னி முகாமில் உள்ளவர்களையெல்லாம் இன்னமும் சிங்கள அரசும், அதன் இனவெறி இராணுவமும் எப்படி கொடுமைக்குள்ளாக்கி வருகிறது என்பதற்கு இந்த சம்பவம் சான்றாகும். இங்கிருந்து செல்லும் இந்திய அரசின் பிரதிநிதிகள் இதுபற்றியெல்லாம் எந்தக் கேள்வியையும் எழுப்பாமல், இலங்கை எங்களது நட்பு நாடு என்று தொடர்ந்து பிரகடனம் செய்வதில் மட்டுமே கவனமாக இருக்கின்றனர். இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறோம் என்று கூறும் இந்திய மத்திய அரசு, சிங்கள அரசு தமிழர்களுக்கு இழைத்துவரும் கொடுமைகளையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்து வருவதே இன்றளவும் தொடரும் இந்த கொடுமைகளுக்கெல்லாம் கரணியமாகும்.

தமிழர்கள் மீது தொடுத்த போரில் மட்டுமல்ல, போர் முடிந்த பிறகும் தமிழின அழிப்பை சிங்கள பெளத்த இனவாத அரசு தொடர்ந்துக்கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த கொடூர சம்பவம் சாட்சியாகும். இதையெல்லாம் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரு அரசு இல்லாமல் தமிழினம் உலக அளவில் ஒரு அடிமைப்பட்ட இனமாக இருப்பது வேதனையாக இருக்கிறது. ஐ.நா.வும், உலக நாடுகளும், இந்திய மத்திய அரசால் முழுமையாக திசை திருப்பப்படுவதால், ஈழத் தமிழனின் துயரம் தொடர்கதையாகிவருகிறது.

இந்திய அரசு தங்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வை சிங்கள இனவாத அரசிடம் இருந்து பெற்றுத்தரும் என்று இன்னமும் நம்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இதற்கு மேலாவது யதார்த்த நிலையை உணர்ந்து தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை சர்வதேச அளவில் முன்னெடுக்க வேண்டும்.

முந்தைய செய்திசெங்கல்பட்டு சிறப்பு முகாமில் அவதிப்படும் தமிழர்களை காப்பாற்றக்கோரி நாம் தமிழர் அமெரிக்கா சார்பாக ஐநா சபையில் மனு கையளிப்பு
அடுத்த செய்திசெங்கல்பட்டு சிறப்பு முகாம் முற்றுகைப் போராட்டம்: நாம் தமிழர் கட்சி அழைப்பு