செங்கல்பட்டு சிறப்பு முகாம் முற்றுகைப் போராட்டம்: நாம் தமிழர் கட்சி அழைப்பு

33

தங்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் சட்ட ரீதியாக பிணைய விடுதலை பெற்றுவிட்ட போதிலும், அயல் நாட்டினர் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக சிறப்பு முகாம் என்ற பெயரில் தடுத்து வைத்துள்ள தங்களை விடுவித்து, மற்ற முகாம்களில் வாழும் தங்கள் சொந்தங்களுடன் வாழ்ந்திட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 15ஆம் தேதியிலிருந்து பட்டிணிப் போராட்டம் நடத்திவரும் நமது ஈழத் தமிழ் சொந்தங்களின் கோரிக்கை மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பட்டிணிப் போராட்டத்தினால் உடல் நிலை கெட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 9 பேர், நமது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அரசு அளித்த சிகிச்சையை ஏற்று வந்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகமோ அல்லது காவல் துறையோ இதுவரை அவர்களிடம் வந்து பேச முன்வராததால், சிகிச்சை மறுத்துவிட்டு தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். சிறப்பு முகாம்களில் அடிமையாக இருந்து சித்ரவதைகளை அனுபவிப்பதை விட, போராடி உயிர் துறப்பதே மேல் என்று அந்த தம்பிகள் கூறுவதில் நியாயம் உள்ளது.

இப்பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுகி, சிறப்பு முகாம்களில் உள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் இதுவரை சாதகமாக எந்த செய்தியும் வரவில்லை. நேற்று முன் தினம் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து 4 பேரை விடுவித்துள்ளனர். இந்த நான்கு பேரும், அரசு உத்தரவுப்படி, ஏற்கனவே விடுவிக்கபட்ட 3 பேருடன் சேர்ந்தே விடுவிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால், அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தாத தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு, இப்போது 4 பேரை விடுவித்து திசை திருப்புகிறது. அதே நேரத்தில் மேலும் 4 ஈழத்தமிழ் சொந்தங்களை செங்கல்பட்டு சிறப்பு முகாமிற்கு கொண்டு வந்து அடைத்துள்ளது. இவர்களில் ஒருவர் 65 வயதான பெரியவர். இந்த நிலையில்தான் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மேலும் 10 பேர் பட்டிணிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

இப்படிப்பட்ட சூழலில் இதற்கு மேலும் சிறப்பு முகாம்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்க அனுமதிப்பது ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு தாய் தமிழ்நாடு இழைக்கும் துரோகமாகிவிடும்.

வன்னி முள்வேலி முகாம்களில் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நமது சொந்தங்களின் மீது சிங்கள இனவெறி இராணுவம் கொடுமையாக தாக்குதல் நடத்தியதில் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். மற்றொருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இங்கேயும் கிட்டதட்ட அதே கொடுமையை க்யூ பிரிவு காவலர்களும், அதிகாரிகளும் உயிருக்கு உயிரான நமது சொந்தங்களின் மீது கட்டவிழ்த்துவிடுகின்றனர். எனவே, சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட வன்னி முகாம்களுக்கு இணையான இந்த சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடிட வேண்டும், அதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நம் சொந்தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி வரும் 10ஆம் தேதி செவ்வாய் கிழமை செங்கல்பட்டு சிறப்பு முகாமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்று நாம் தமிழர் கட்சி முடிவெடு்த்துள்ளது. இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினரும், தமிழின உணர்வாளர்களும் பெருமளவிற்கு கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

முந்தைய செய்திவன்னி முகாமில் சிங்கள இராணுவம் கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு: நாம் தமிழர் கட்சி கண்டனம்
அடுத்த செய்திஇலங்கை வானூர்தி படையினருக்கு தமிழகத்தில் பயிற்சியளிக்கும் நடுவண் அரசை கண்டித்து நடத்தப்பட்ட முற்றுகை போராட்டம் (ஒளிப்படங்கள் இணைப்பு )