சாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி

59

தமிழ்நாட்டில் தற்பொழுது நடைபெற்றுவரும் சாதி வாரி கணக்கெடுப்பில், ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்த சாதி தொடர்பான விவரம் மட்டுமின்றி, அவர்களின் பொருளாதார வாழ்க்கை நிலையை உறுதி செய்யக்கூடிய சொத்து, வாகன இருப்பு, கணினி, குளிரூட்டிகள், அலைபேசி, தொலைபேசி போன்ற விவரங்களும் பெறப்படுகிறது.

இதன் மூலம் சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய குடும்பங்களை அடையாளம் காணும் பணி இணைந்தே செய்யப்படுவது தெரிகிறது. சாதிய, பொருளாதார விவரங்கள் சேகரிக்கப்படும் அந்த படிவத்தில், தங்களை பதிவு செய்வோர் பேசும் மொழி – அதாவது அவர்களின் தாய் மொழி என்ன என்பது பதிவு செய்யப்படவில்லை. இது ஏன் என்று புரியவில்லை. தமிழ்நாட்டில் இன்றைக்கு தமிழர் அல்லாத பிற மொழி பேசுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அவர்களின் எண்ணிக்கையை அறிய அவர்களின் தாய் மொழி பற்றிய விவரத்தையும் கேட்டுப் பதிவு செய்வதும், அதேபோல் இன்றைய நிலையில் தமிழ்நாட்டில் தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறியவும் தாய்மொழி என்ன என்ற கேள்வி அந்த படிவத்தில் இடம் பெற வேண்டியது அவசியமாகும். எனவே தமிழக அரசு, அந்த படிவத்தில் தாய் மொழி பற்றிய வினாவையும் சேர்க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இதுமட்டுமின்றி, இந்தக் கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் விவரப் படிவத்தின் ஒரு நகலை மக்களுக்கு அளிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும். தாங்கள் பதிவு செய்த விவரங்கள் இன்னென்னவென்பதை அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு காட்டுவதற்கும், சட்ட ரீதியான சிக்கல் ஏதும் எதிர்காலத்தில் எழுந்தால், இந்த நகலை ஒரு ஆதாரமாகக் காட்டி தங்கள் நிலையை தெளிவுபடுத்தவும் உதவிடும். எனவே, விவரப் பதிவு படிவத்தின் ஒரு நகலை வழங்கும் ஏற்பாட்டையும் தமிழக அரசு செய்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

முந்தைய செய்திசாதி வாரிக் கணக்கெடுப்பில் தாய் மொழியையும் பதிவு செய்திடல் வேண்டும்: நாம் தமிழர் கட்சி
அடுத்த செய்திபெருந்தமிழர் அயோத்தி தாசரின் 98-ஆவது நினைவுநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாலை அணிவிப்பு