ராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் ……..ச.ச.முத்து

10

ராஜதந்திரமுச்சந்தியில் அவன்
தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாக
எதுவும் நடந்துவிடவில்லை.

எரிந்து கருகிய அவனின் உடல்
கடந்தே உலகசமாதானம் தன் நுனிநாக்கு
உச்சரிப்புகளை சொல்லி சப்புக்கொட்டிநின்றது.

தாய்நிலம் மீதான தணியாத தாகமும்
பக்கத்து மனிதன்மீதான பற்றுதலால் அவன்
பெருநெருப்பை மூட்டி அவிந்தபொழுதினில்
நாகரீகபெருமான்கள் அவமானத்தீக்கோழிகளாய்
ஜெனீவா மன்றத்துள் முகம்புதைத்துநின்றனர்.

புதுமாத்தளன் கடந்து இனஅழிப்பு
தொடர்கையில் எரிந்தபடி முருகதாசன்
‘நிறுத்தவேண்டும் உலகம் இதை’ என்றான்.

ஒருகால் முறிந்த கதிரை மட்டுமே அவனின்
சுயதகனம் பார்த்து விக்கித்துநின்றது.- மற்றப்படி
அவனின் எரிந்த உடல்கடந்தே எல்லோரும்
தம்தம் அலுவல்களுக்காய் பறந்தனர்.- எல்லோருக்கும்
உலக நாகரீகம் மீட்பதிலும்
கரைஒதுங்கும் மீன்இனம் காப்பதிலும்,
அன்டார்ட்டிக்காவில் பனிகரைவதிலும்,
ஈரானின் அணுஉலையை மூடும் மும்முரத்திலுமெ
நேரம் ஓடியது.-முருகதாசன் உடல்கருகி
ஓரத்தில் கிடந்தான்.

எம்மைத்தவிர வேறுஎவரையுமே அந்த
இளைஞனின் ஆகுதி உலுக்கியதாய்
தெரியவில்லை.-இன்றும் கூட..!

நாமும் என்ன செய்தோம்.-கூடினோம்.
ஆர்ப்பரித்தோம்.திரண்டோம்.
ஓன்றுகூடி அவன்உடலை எரித்து இப்போ
ஓன்றும் நடவாதது போலவே நடக்கிறோம்.

என் தந்தை தாய்..உன் சகோதரர்,உற்றார் என
அனைவருக்குமாக எரிந்தவன் முருகதாசன்.
ஏதொஒரு அலுவலகத்தில் எஞ்சியநாட்களை
வேலைசெய்து குடும்பம்குட்டி என
வாழ்ந்துவிட்டுப்போயிருக்கலாம் அவனும்.

ஆயினும் உலகத்துஊர் கூடிநின்று எம்
தாய்நிலம் எரித்து எம் தேசத்து பூக்களை
தணலாக்கி வெறியாட்டம் போட்ட
பொழுதினில் தன் உடல்கொழுத்தி அதனுள்
உலகத்து மனச்சாட்சியை உலுக்கமுயன்றவன்.

ஆனந்தபுரத்திலிருந்தும் அடுத்த முனையில்
சாளையிலிருந்தும்,இன்னொரு தலப்பில்
இரணைப்பாலையில் இருந்தும்
நந்திக்கடலிருந்தும் மெதுமெதுவாய்
ஒருகூட்டுப்படுகொலைக்கு உலகம் தயாரான
பொழுதினில் அதைத்தடுக்க கடிதம் எழுதி
வைத்துவிட்டு உடல்கருகிப்போன ஒருவனை
எந்தநாதியும் ஏன்என்று திரும்பிப்பார்க்கவில்லை.

ஆனாலும் நாம் அப்படியே விட்டுவிட்டு
அடுத்தவேலைக்காக பறக்கமுடியாது.
எங்களுக்காய் எரிந்தவனுக்கு என்னென்று
நன்றி நினைவுகூர்வோம்.-அவனின் உடல்எரிந்த
சாம்பலை ஊதிவிட்டு அடுத்தவருடம் அவன்
நினைவுவரும்வரைக்கும் ஓய்திருக்கபோகிறோமா??

அந்த இளைஞனின் நினைவை எம்
நெஞ்சுள் பதிவோம்.-எம் அடுத்த
தலைமுறைக்கும் சொல்லிவைப்போம்.
முருகதாசன்,
உன்னை எழுதவும் பாடவும் எமக்கிருக்கும்
வார்த்தைகளில் எதுவுமேயில்லை.
உன்னை வணங்குகிறோம்.-நீ
எரிந்தபொழுதினில் எம்நெஞ்சில்பட்ட
சுடுதழும்பை ஆறவிடாமல் வன்மம் வளர்ப்போம்.

காலம் எவ்வளவு கடந்தாலும் அனலாடிய உன்
ஆன்மத்தை, அதனிலும் உயர்ந்த உன் ஈகத்தை
எம்முள் நிரந்தரமாய் படிந்துவிட்ட காயத்தை
எதையுமே நாம் மறவோம்.
நீ நினைத்த விடுதலையை நாளைப்பொழுது
மீட்டுவரும்.நம்பிக்கையோடு இரு.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் மேற்கு மாவட்ட கிளைதிறப்பு – நிழற்படங்கள் மற்றும் காணொளி இணைப்பு!!
அடுத்த செய்திவிதைத்த இடத்தில் மலர்தூவுவோம்!