பொன்னம்மான் என்ற அற்புத(ன்)ம்!….ச.ச.முத்து

166
பொன்னம்மான் காற்றுடன் கலந்து இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்டன.பொன்னம்மானுடன் கேடில்ஸ், வாசு, சித்தார்தன், யோகேஸ், கவர், பரன், குமணன், தேவன் ஆகியோரும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் (14.02.1987)  பாரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்த வேளையில் ஏற்பட்ட எதிர்பாராத வெடிவிபத்தொன்றில் வீரச்சாவடைந்திருந்தனர்.
மிக மூத்த உறுப்பினன், மத்தியகுழுஉறுப்பினன், வெடிமருந்துகளை கையாள்வதில் அலாதியான தேர்ச்சியும் கைதேர்ந்த நுட்பமும் கொண்டவன், ஆயிரக்கணக்கான வீரர்களை உருவாக்கிய பயிற்சிப்பாசறை பொறுப்பாளன், மிகச்சிறந்த பயிற்சியாளன் இப்படி விடுதலைப்புலிகள் அமைப்பில் அவனுக்கு வழங்கப்பட்டிருந்த அத்தனை பொறுப்புகளையும் தாண்டி அவனின் புன்னகை முகம்தான் என்றென்றும் நினைவில் அழியாது சிரிக்கிறது.பொன்னம்மான் இருக்கும் இடத்தில் சிரிப்புக்கும் மகிழ்வுக்கும் குறையேதும் இருக்காது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பால் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சிப்பாசறையில் 1979ல் மாங்குளத்தில் பொன்னம்மானும் ஒருவன்.
பகலில் பயிற்சிகள் முடிந்ததும் இரவில் எல்லோரும் சுற்றிவர அமர்ந்து அவர் அவர்களுக்கு பிடித்தமான பாடலையோ ஆடலையோ செய்யும் நிகழ்வில் பொன்னம்மானின் முறைவரும்போது ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்து தலைவர் உட்பட எல்லோரையும் சிரிக்கவைத்து விடுவார்.ஆரம்பநாட்களிலேயே பொன்னம்மானுக்குள் நுட்பமான செயற்பாடுகளும், கிடைக்கின்ற பொருட்களை கொண்டே சிறப்பான ஒன்றை வடிவமைக்கும் கெட்டித்தனமும் நிறைந்தே இருந்தன. அவன் இயக்கத்துக்கு வருவதற்கு முன்னர் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்றதால்தான் அத்தகைய ஆற்றல் அவனிடம் படிந்து இருந்ததோ.அந்த ஆரம்பநாட்களில் கூடுதலான இயக்க உறுப்பினர்கள் வீடுகளுக்கு தெரியாமலோ வீடுகளில் இருந்து வெளியேறி வந்தோதான் இயக்கத்தில் இணைந்திருந்தனர். ஆனால் பொன்னம்மான் வீட்டாரின் அனுமதியுடன் வீட்டுக்கு தெரியத்தக்கதாகவே இயக்கத்தில் இணைந்திருந்தார்.

அதனால் பொன்னம்மானின் வீடு என்பது இயக்க உறுப்பினர்கள் அனைவரும் இயல்பாக வந்து செல்லும் ஒரு இடமாகவே இருந்தது. என்றாவது ஒருநாள் விருப்பு வெறுப்பில்லாத முறையில் ஒரு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு எழுதப்படுமானால் அதில் பொன்னம்மானின் வீட்டுக்கும் ஒருபெரிய அத்தியாயம் இருந்தே தீரும்.
அவரின் முழுக்குடும்பமுமே விடுதலையின் பேரில் ஆழமான விருப்புகொண்டவர்களாக இருந்திருந்தார்கள். இத்தகைய பின்புலத்தில் விளைந்து வந்த பொன்னம்மானுக்குள் விடுதலை உணர்வும் உறுதியும் மிகமிக ஆழமாக இருந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

பொன்னம்மானின் பொற்காலம் என்று நான் கருதுவது பொன்னம்மான் அண்ணையுடன் தமிழகத்தில் நின்றிருந்த 81,82 ஆண்டுக்காலம்தான். இந்த காலப்பகுதியில்தான் பொன்னம்மான் உருக்கி உறுதியாக்கப்பட்டு செப்பனிடப்பட்டான்.
அவனுக்குள் இயல்பாகவே இருந்திருந்த ஆளுமைகளும் ஆற்றல்களும் தலைவரால் மிக அண்மையில் இருந்து கவனிக்கப்பட்டு அதனை இன்னும் தலைவர் கூர்மையாக்கிய பொழுதுகள் அவை.

இந்தக் காலப்பகுதியில் நிறையவே புத்தகங்களை படிக்கவும் வரலாற்றை கவனிக்கவும் பொன்னமானுக்கு நேரம்கிடைத்திருந்தது. அவன் நிறையவே படித்தான். போர்த்தளபாடங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றிய மேற்கத்தைய நவீனங்களையும், அரசியலின் இன்னொரு பக்கத்தையும் விடுதலை வரலாறுகளையும் அவன் உள்வாங்கினான்.

சிறு கையெறிகுண்டுகளை வடிவமைப்பதிலும், உப இயந்திர துப்பாக்கியின் மகசீன் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டதிலும் பொன்னம்மான் அந்த நேரத்தில் சக தோழர்களுடன் பலவிதமான பரிசோதனை முயற்சிகளை செய்திருந்தான்.
தலைவருடன் தமிழகத்தில் நின்றிருந்த அந்த காலப்பகுதி பொன்னம்மானையும் கிட்டுவையும் பொறுத்தவரையில் ஒரு பல்கலைக்கழக காலம் போன்றது.பொன்னம்மானுக்குள்ளும் கிட்டருக்குள்ளும் தலைமைப்பண்புகள் உள்நுழைந்த காலமாக அந்தகாலம் அமைந்திருந்தது.

80களின் ஆரம்பத்தில் விடுதலைப் போராட்டத்தை இன்னும் வீச்சாக மாற்றுவதற்கு முதற்படியாக தன்னுடன் தமிழகத்தில் தங்கி நின்றிருந்த பொன்னம்மானையும் கிட்டுவையும் தலைவர் தாயகத்துக்கு அனுப்பி வைத்ததார்.

அவர்கள் வந்திறங்கி சில ஏற்பாடுகளையும் செயற்பாடுகளையும் செய்துமுடித்த பின்னர் தலைவர் வந்து இறங்குவது என்பதே ஏற்பாடு.உமையாள்புரத்தில் வீதிரோந்து வழமையாக வரும் இராணுவ தொடரணி மீதான தாக்குதல் ஒன்றுக்கு பொன்னம்மான் திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்திருந்தவேளையில் கண்ணிவெடிக்கு வரும் தொடர்பின் மீது மான் ஒன்று காலிடறியதால் அந்த தாக்குதல் மயிரிழையில் சறுகியது.

ஆனாலும் திடீரென ஏற்பட்ட நிலைமை மாற்றத்தை பொன்னம்மானும் தோழர்களும் எதிர்கொண்ட விதம் மரபுவழி இராணுவ பயிற்சிகள் எடுத்த தளபதிகளுக்கே உரியது.

அதன்பின் சரித்திர பெயர் பெற்ற 23.08.83 திருநெல்வேலி தபாற்பெட்டி சந்தியில் நடந்தராணுவதொடரணிமீதான தாக்குதலிலும் பொன்னம்மானின் பங்கு இருந்தது. இந்த தாக்குதலில் இராணுவத்தினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ‘கமர் கிரனைட்’ என்பது அந்த நேரத்தைய போராளிகள் புத்தகத்தில் மட்டுமே பார்த்த ஒன்றாக இருந்தது.
அதிலும் இரண்டாம் உலகயுத்தம் சம்பந்தமான திரைப்படங்களில் ஜேர்மனிய வீரர்கள் பயன்படுத்தும் இந்தவகை எறிகுண்டுகளை எவ்விதம் வெடிக்க வைப்பது என்பது செயல்முறையாக தெரியாத நிலையிலும் பொன்னம்மான் தலைவரின் அனுமதியுடன் கோப்பாய்வெளியில் அதனை எறிந்து சோதித்த பின்தான் பொன்னம்மானுக்கு நிம்மதி. அத்தகைய ஒரு தொழில்நுட்ப தேடல் அவனிடம் ஓங்கி இருந்தது.
தமிழகத்தில் பயிற்சிமுகாம்கள் நிறுவப்பட்டிருந்த காலத்தில் யாரை பயிற்சியாளனாக நியமிக்கலாம் என்று தலைவரின் மனதில் முதலில் வந்த முகம் பொன்னம்மானுடையதாகவே இருந்தது.
எல்லா சிறந்த தளபதிகளும் சிறந்த பயிற்சியாளர்களாக இருந்துவிடமுடியாது. பயிற்சியாளன் என்பவன் பாசத்தில் தாயாக, தந்தையாக, அண்ணணாக இருக்கவேண்டியதுடன் அவனுக்கு மற்றவர்களின் உளவியலும் ஓரளவுக்கு தெரிந்தவனாக இருக்கவேண்டும். இவை எல்லாம் பொன்னமானிடம் இருந்தது. அதனாலேயே அவன் மிகச்சிறந்த போர்வீரர்களை, மிகமிக வீரமான போராளிகளை, அதிஉயர்ந்த தளபதிகளை உருவாக்க முடிந்தது.
இவ்வளவு பொறுப்புகளை சுமந்தபடியே ஏதோஒரு இரகசிய இடத்தில் அமைக்ப்பட்டிருந்த சிறுநிலையம் ஒன்றில் இருந்து தாயகத்து போராளிகளுக்கென்று ஆயிரமாயிரம் கையெறி குண்டுகளை உருவாக்கும் பணியிலும் இரவுகளை கரைத்தவன் பொன்னம்மான்.
இத்தனை அற்புதங்களும் நிறைந்த பொன்னம்மான் தாயகம் சென்று கிட்டுவுக்கு துணையாக நின்று தாக்குதல்களை முனைப்பு பெறவைக்கும் திட்டம் ஒன்றிற்காக நாவற்குழி முகாம் மீதான தாக்குதலுக்கு அதுவரை சிங்களம் எதிர்பார்க்காத ஒரு முறையில் தாக்குதலை நடாத்துவதற்கு முயன்றவேளையில் வெடிமருந்துடன் நின்றிருந்த பவுசர் லொறி ஒன்று எதிர்பாராமல் வெடித்ததில் உடலும் கிடைக்காமல் தமிழீழ காற்றுடன் கலந்துவிட்டான்.
பொன்னம்மான் என்ற போராளி, தளபதி மறைந்தாலும் அதற்கு பிறகும் மிக நீண்ட ஆண்டுகளாக பொன்னம்மானால் பயிற்சியில் வளர்க்கப்பட்ட தளபதிகள் தமது ஒவ்வொரு அடியிலும் பொன்னம்மானை நினைவு வைத்தனர்.
பொன்னம்மானின் நினைவு என்பது காலநீட்சி, ஆண்டுகளின் அதிகரிப்பு, என்பனவற்றால் அடித்துச்சென்றுவிட முடியாதவை. அவனுடன் பழகிய எவரும் தமது இறுதி நிமிடம்வரை அவனை மறத்தல் சாத்தியம் இல்லை.
இன்றைக்கும் சேலத்திலும், கொளத்தூரில் பொன்னம்மானை நினைவு வைத்திருக்கும் இளைஞர்கள் பெரியவர்கள் தமது நினைவுக்குள் அவனை ஒரு தூயவீரனாகவே பொத்தி வைத்துள்ளார்கள்.
பொன்னம்மானுடன் அன்றைய வெடிஅதிர்வில் வீச்சாகிப்போன மேஜர் கேடில்ஸ், கப்டன் சுதாகர், லெப். சித்தார்த்தன், 2ம்லெப். பரன், வீரவேங்கைகள் யோகேஸ், கவர், அக்பர், குமணண், தேவன் ஆகியோரை நெஞ்சில் இருத்தி வணங்குவோம்.

முந்தைய செய்திபட்டுக்கோட்டையில் 16-02-2012 அன்று நாம் தமிழர் கட்சியின் மாபெரும் அரசியல் போர் முழக்கம் – துண்டறிக்கை இணைப்பு!!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சியின் கொடிகள், தோரணங்கள், குறும் தகடுகள், முகவரி அட்டைகள் வாங்க அணுகவும்