செந்தமிழன் சீமான் சொல்லும் உடல் ரகசியம்

323

பேச்சில், மூச்சில், வீச்சில்… எனத் தான் கற்றுவைத்திருக்கும் கலைகளில்கூட வீரத் தமிழன்தான் சீமான். ஒரு மணி நேரம் ஓட்டம், ஒரு மணி நேரம் ஆட்டம் எனக் கம்பு சுற்றுவதும் கபடி ஆடுவதும் சீமானின் ஆரோக்கிய அடையாளங்கள். கபடிப் போட்டி, கட்சி ஒருங்கிணைப்பு, பொதுக் கூட்டம் என சுற்றிச் சுழல்பவர், நமக்காக இங்கே ஆரோக்கிய ரகசியம் சொல்கிறார்.

Seeman_Excersise

‘உன் ஆரோக்கியம் மூன்று மைல் கல்லுக்கு அப்பால் இருக்கிறது. அதை நடந்துபோய் வாங்கிக் கொண்டு வா!’ என்று மகாத்மா காந்தி அடிகள் சொன்னதுதான் என் ஆரோக்கியத்தின் விலாசம். சென்னையில் இருந்தால் தவறாமல் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ஓட்டம். வெளியூர் என்றால், தங்கி இருக்கிற இடத்தின் மொட்டை மாடிதான் என் உடற்பயிற்சிக் கூடம். நான் குக்கிராமத்தில் குறவஞ்சி பழகியவன். சிலம்பத்தின் ஒரு வகைதான் இந்தக் குறவஞ்சி. வீச்சின் வேகமும் வசீகரமும் ஈர்க்கும் கலை. எந்த வேலையையும் ரசித்துச் செயலாற்றும்  மனநிலையை இந்தப் பயிற்சி தூண்டும். ‘நாகம்-16’ – சிலம்பத்தின் இன்னொரு வகை. எதிரியை அருகே நெருங்க விடாமல், 360 டிகிரியில் உடலைத் திருப்பிக் கம்பு வீசும் கலை. நம் கவனத்தைச் சிதறவிடாமல் ஒரு செயலைச் செய்யக் கற்றுக்கொடுக்கும் வித்தை. எதற்கும் அஞ்சாத கம்பீரத்தை, கம்பு சுற்றும் வழக்கமே உடலுக்குக் கற்றுக் கொடுக்கிறது. நேரம் கிடைக்கிறபோது கராத்தே பயிற்சிகளை மேற்கொள்வேன். பயிற்சிகளை முடிக்கிற போது உடல் தொப்பலாக வியர்வையில் நனைந்திருக்கும். தேர்தல், பொதுக் கூட்டம் என முக்கியமான நேரங்களில் தொண்டை நரம்புப் புடைக்க மேடைகளில் முழங்குவேன். எந்த நேரமும் சுற்றிச் சுழலத் தயங்காத உடல், அதற்கு ஒப்புக்கொள்ளும்  மனம்… இதுதான் இந்தத் தம்பியின் ஆரோக்கிய ரகசியம்!”

”சைவம், அசைவம் இரண்டில் எது உங்களின் விருப்ப உணவு?”

”உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு, ஊறவைத்த கொண்டைக்கடலை, பயிற்சி முடித்த பின் வெள்ளரிக்காய், வெண்டைக்காய், கேரட் போன்ற பச்சைக் காய்கறிகள்தான் என் காலை உணவு. மதியம், இரவு வேளைகளில் அந்தந்த இடங்களில் கிடைக்கும் உணவு வகைகளை உண்பது என் வழக்கம். ஆனால், அரசியல், சினிமா இரண்டுமே சாப்பாட்டு நேரத்தில்தான் அதிகம் கைவைக்கும். ஆனாலும், வயிற்றைப் பட்டினி போடும் வழக்கம் எனக்கு இல்லை. குறைந்தபட்சம் பழங்கள் மூலமாகவே பசியைத் தணித்துக் கொள்வது உண்டு. ஊருக்குப் போனால், மொக்கச் சோறு, கோழிச்சாறு இதுதான் எனக்கு மிகவும் விருப்பமான உணவு. என்னைப் பொறுத்தவரை, எந்த உணவுப் பொருளையும் எண்ணெயில் வறுத்தால், கொழுப்பு சேர்ந்து அது அசைவமாகி விடும். குழம்பில் போட்டால், கொழுப்புக் குறைந்து சைவமாகிவிடும். நான் சைவமா… அசைவமா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!”

”மொழிக்கும் ஆரோக்கியத்துக்கும் தொடர்பு உண்டா?”

”நிச்சயம் உண்டு. அந்தந்தப் பகுதித் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மாதிரி காய், கனிகள் விளைவதுபோலத்தான், மொழியின் உருவாக்கத்தையும் முப்பாட்டன் அமைத்து வைத்தான். தமிழ்நாடு வெப்ப மண்டலப் பகுதி. இங்கு வாயைத் திறந்துதான் பேச வேண்டும். அப்போதுதான் உடலின் வெப்பம் தணியும். இங்கிலாந்துக்குச் சென்று தமிழ் பேச முடியாது. குளிர் அப்பிக்கொள்ளும். அதனால்தான் ‘ஸ்’ சத்தம் அவர்கள் மொழியில் அதிகம். யோகாசனம் இல்லாமலேயே  உச்சி முதல் உந்தி வரையிலான உறுப்புகளை இயக்கும் எழுத்துகள் தமிழ் மொழியில் அதிகம்!”

”அடுக்கடுக்கான போராட்டங்களுக்கு மத்தியில் உங்கள் மன அமைதிக்கு நீங்கள் கடைப்பிடிப்பது?”

”புத்தகங்கள்! என்னைப் புதுப்பித்துக் கொள்ள புத்தகங்கள்தான் எனக்குக் கிடைத்த வரம். எனக்கான அமைதியையும் ஆறுதலையும் அள்ளித்தருபவை புத்தகங்கள்தான்!”

”உங்களைப் பின்பற்றுகிற ‘தம்பி’களுக்கு ஆரோக்கியம்குறித்து உங்களின் அறிவுரை?”

” ‘உடல் பல நுட்பமான செயல்களைச் செய்யும் ஒரு தொழிற்சாலை. அதை ஒரு நல்ல பகுத்தறிவாளன் பேணிக் காப்பான்’ என்று பெரியார் சொன்னதுதான் எனக்கும் எல்லாத் தம்பிகளுக்குமான பாடம். வாழ்க்கைக்குத் தேவையான உழைப்பு, திறன், கவனம், சாதுர்யம், எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சுறுதி என அத்தனையையும் விளையாட்டுக் களங்களே தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றன. இதனை உணர்ந்து தமிழர் விளையாட்டுகளை மறந்து விடாமல் தொடர வேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறையின் கையில் இருக்கிறது!”

”சீமானுக்குச் சிரிக்கத் தெரியுமா?”

”தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன் ஒரு சிறந்த நகைச்சுவை விரும்பி. அவருடைய போராட்டங்களையும் எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதியையும் மட்டுமே அறிந்தவர்களுக்கு இது தெரியாது. ஒருவருடைய களத்தையோ இலக்கையோ மனதில்வைத்து அடிப்படைக் குணங்களை மதிப்பிட முடியுமா என்ன? பிறந்த அறனையூர் கிராமம் தொடங்கி கனவுகளோடு வந்திறங்கிய சென்னை வரை சிரிப்பும் மகிழ்வுமாகத்தான் இந்த சீமான் இருந்தான். ஈழத் துயரங்கள், வழக்குகள், போராளித் தம்பிகளின் தாங்கொணா வேதனைகள், விமர்சனங்கள் என நெஞ்சத்தைத் துளைக்கும் நிகழ்வுகளுக்குப் பின்னால், சிரிப்பு கொஞ்சம் குறைந்து விட்டது உண்மைதான். அதற்காக சிரிப்பையே மறந்துவிட்டவன் எனச் சொல்ல முடியாது!” – வெடிச்சிரிப்பு சிரிக்கிறார் சீமான்.

நன்றி – தாய்த்தமிழ் இணையத்தளம்

http://thaaitamil.com/?p=7848