192 நாடுகளை உறுப்பினராகக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலராக பான் கி மூன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பான் கி மூன் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பதவியில் நீடிப்பார்.
தென் கொரியாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான இவரது இரண்டாவது பதவிக் காலம் 2012-ம் ஆண்டு ஜனவரி 1-ல் தொடங்கும்.
ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு இந்த முறை யாரும் போட்டியிடாத நிலையில், அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தாம் மீண்டும் போட்டியிடப்போவதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பான் கி மூன் அறிவித்திருந்தார். அவருக்கு முழு ஆதரவை தருவதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஐ.நா. தலைமை பதவியில் தாம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டது குறித்து கூறுகையில், “உணர்வை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு மிகப் பெரிய கெளரவமாக கருதுகிறேன்,” என்றார்.
பான் கி மூன் முதல் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில், பல்வேறு விவகாரங்களில் தனது அணுகுமுறையால் வரவேற்பையும் எதிர்ப்பையும் சரிவிகிதத்தில் பெற்றவர் என்பது சர்வதேச அரசியல் நோக்கர்களின் பரவலான கருத்து