பெயரில்லா என் கவிதைகளிலிருந்து…….. – மாரி செல்வராசு

212
இன்னும் சிறிதுநேரத்தில்
என்னை தூக்கிலிட்டுவிடுவார்கள்
காலத்தின் கனம் தாங்காமல்
கயிறு அறுந்துவிழும் பட்சத்தில்
கோப்பை விஷம் வைத்திருக்கிறார்கள்
சயனைடு குப்பியை சப்பாமல்
தொலைத்துவிட்டவனை சாகடிக்க
எதுக்கும் அவசியமில்லை
எம் இலட்சியத்தின் மீதான
ஆத்திரம் மட்டுமே போதும் அவர்களுக்கு -என்
ஆணுறுப்பை நசுக்கியே என்னை
கொன்றுவிடக்கூடும் ஆனால்
அதுவல்ல பிரச்சனை
உயிரற்ற என் உடலை
இவர்கள்  என்ன செய்வார்கள்
என்பதே பரவும் வலி
சாத்தான்கள் சம்பிரதாயமாக
உன் கடைசி ஆசை சொல் என
கேட்கும் எனில் அப்போது சொல்வேன்
ஓ சாத்தான்களே!
உங்கள் பசியடங்க என் உயிரை
தின்றுவிட்டு உயிரற்ற என்கூட்டை
தெருவில் வீசிவிடுங்கள் -ஆம்
தெருவில் வீசிவிடுங்கள்
கடல் தாண்டி தப்பிக்க பயந்த
எம் பறவைகள் என் கண்ணை
கொத்தி தின்று உயிர் வாழட்டும்
பசியோடு திரியும் நாயோ நரியோ
நாடி நரம்பு வரை கிழித்து தின்னட்டும்
ஊண் உருகி எம்மண்ணோடு இறங்கட்டும்
எஞ்சிக் கிடக்கும் என் எலும்புகளையும்
அப்புறபடுத்திவிடாதீர்கள்
தயவுசெய்து அப்புறபடுத்திவிடாதீர்கள்
இருநூறு வருடம் கழித்து
இருபது மைல் தூரத்திலிருந்து
கடல் தாண்டி கண்டிப்பாய் வருவார்கள் அவர்கள்
இங்கு தன் தமிழ் பேசி ஓரினம்
வாழ்ந்தது  என்று ஆராய்ச்சிசெய்ய……..

– மாரி செல்வராசு

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] நெய்வேலி நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டுள்ள சுவர் விளம்பரங்கள்.
அடுத்த செய்திதமிழக சட்டசபை தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை