சிறீலங்காவில் கொல்லப்பட்ட மக்களை பாதுகாக்க அனைத்துலகசமூகம் முன்வரவில்லை: லூயீஸ் ஆர்பர்

44

மனித உரிமைகளை மேம்படுத்துவதாக 2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு, அங்கு  நடைபெற்ற போரின் இறுதி மாதங்களில் பல ஆயிரம் மக்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டதை கருத்தில் எடுக்கவில்லை என அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பின் தலைவர் லூயீஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 27 ஆம் நாள் பிரித்தானியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் “அனைத்துலக மனித உரிமையின் வளர்ச்சியும், வீழ்ச்சியும்” என்ற தலைப்பில் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

கடந்த 2009 ஆம் ஆண்டு சிறீலங்காவில் போர் நிறைவடைந்த பின்னர் ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவில் சிறீலங்கா அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் பாராட்டப்பட்டதுடன், விடுதலைப்புலிகள் குற்றங்களை மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை அந்த தீர்மானத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு பாராட்டியிருந்தது. விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகளை அது கண்டித்திருந்தது. ஆனால் அங்கு இடம்பெற்ற போரில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து எந்த தகவல்களும் இருக்கவில்லை.
மனித உரிமைகளை மேம்படுத்துவதாக சிறீலங்கா அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அங்கு  நடைபெற்ற போரின் இறுதி மாதங்களில் பல ஆயிரம் மக்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் தங்குவதற்கும், மருத்துவ வசதிகளை பெறுவதற்கும் என அமைக்கப்பட்ட பாதுகாப்பு வலையத்தின் மீதே சிறீலங்கா படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.

சிறீலங்கா அரசின் நடவடிக்கைகளை புறக்கணித்த மனித உரிமைகள் ஆணைக்குழு, அதே காலப்பகுதியில் காசாவில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணைக்குழுவை நியமித்திருந்தது. காசா பகுதியில் 1,300 பேர் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால் சிறீலங்காவில் 30,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. சிறீலங்கா அரச படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் சில மாதங்களில் இவ்வளவுதொகை மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.நாவின் பாதுகாப்புச்சபை அதனை கருத்தில் எடுக்கவில்லை. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலும் அதற்கான சான்றுகள் இல்லை. அவர்கள் அதனை பாதுகாப்புச்சபையின் கவனத்திற்கும் கொண்டுவரவில்லை.

எனினும் இஸ்ரேல் நடத்திய படுகொலைகளை 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பலஸ்த்தீன அதிகாhரிகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்கான பதில் இதுவரை கிடைக்கவில்லை.

2009 ஆம் ஆண்டு சிறீலங்கா மக்களுக்கு அனைத்துலகத்தின் பாதுகாப்புக்கள் கிடைக்கவில்லை. நீதி கூட தெரிவுசெய்யப்பட்ட விதமாகவே நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

ஆனால் லிபியா தொடர்பில் ஐ.நா பாதுகாப்புச் சபையும், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பொதுமக்களை பாதுகாப்பது என்பது அரசியல் நடவடிக்கைகள், நல்ல ஆட்சிமுறை, மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படலாம். அது மட்டுமல்லாது, பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவதும், நீதியான விசாரணைகளை மேற்கொள்வதிலும் அதனை எட்டமுடியும்.
பொதுமக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கு மனிதாபிமானம், நீதி, அரசியல் என்ற மூன்று வழிகளின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். அதன் மூலமே அமைதியையும் கொண்டுவரமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி:  ஈழம் நியுஸ்

முந்தைய செய்திஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையை அடுத்து தமிழக விவகாரங்களை கவனிக்க தனி பிரிவு அமைக்க இலங்கை அரசு முடிவு.
அடுத்த செய்திஇலங்கை பிரச்சனைகளை சிக்கலாக்க வேண்டாம்: நேரடியாக அச்சுறுத்தும் சீனா !