இலங்கை பிரச்சனைகளை சிக்கலாக்க வேண்டாம்: நேரடியாக அச்சுறுத்தும் சீனா !

26

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான பிரச்சனைகளை சிறீலங்கா மக்களும், சிறீலங்கா அரசும் நேர்த்தியாக கையாளுவார்கள் என்பதால், அதில் அனைத்துலக சமூகம் தலையிட்டு அதனை சிக்கலாக்க வேண்டாம் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சீனாவின் வெளிவிவகார அமைச்சகப் பேச்சாளர் ஹொங் லீ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிருபரின் கேள்வி ஒன்றிற்கு தொடர்ந்து பதிலளித்த அவர், சிக்கலைப் பெரிதாக்கவேண்டாம் என சர்வதேச சமூகத்திடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐ.நா அறிக்கை தொடர்பில் சீனா கவனம்செலுத்தி வருகின்றது என்றும், இலங்கை அரசு ஏற்கனவே தனது சொந்த விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது எனவும் தெரிவித்த அவர் எனவே சிறீலங்கா அரசும், அதன் மக்களும் இந்த விடயத்தை நேர்த்தியாக கையாள்வார்கள் என சீனா நம்புகின்றது என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசுக்கு உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளையே அனைத்துலக சமூகம் மேற்கொள்ளவேண்டும். சிறீலங்காவின் அரசியல் உறுதிப்பாட்டை பேணுவதற்கு அனைத்துலக சமூகம் உதவும் என சீனா நம்புகின்றது. அங்குள்ள நிலமைகளை அனைத்துலக சமூகம் மேலும் சிக்கலாக்க முனையக்கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கட்டப் போரை இலங்கை அரசாங்கமானது, ஒரு மாபெரும் மனிதநேய மீட்பு நடவடிக்கை என உலகிற்கு கூறிவருகிறது. புலிகள் வசம் அகப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் தமிழர்களை தாம் மீட்கவே இப்போரை தாம் ஆரம்பித்ததாக அது தொடர்ந்தும் கூறிவரும் நிலையில், சீனாவும் அதனை ஒரு மனிதநேய மீட்பு நடவடிக்கையாகவே பார்ப்பதாக புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்திசிறீலங்காவில் கொல்லப்பட்ட மக்களை பாதுகாக்க அனைத்துலகசமூகம் முன்வரவில்லை: லூயீஸ் ஆர்பர்
அடுத்த செய்திகனடா நாடாளுமன்றத்தில் முதன் முறையாக தமிழரின் குரல்.