போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்கள் அறியப்படவேண்டும்: மனித உரிமைகள் கண்காணிபகம்

28

ஐ.நா அறிக்கையில் தெரிவித்தபடி போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் விபரங்களும் இனங்காணப்படவேண்டும் என வொசிங்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கொள்கைப் பணிப்பாளர் ஜேம்ஸ் றோஸ் நேற்று (26) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கம் சிறீலங்கா அரசுக்கு கிடையாது. ஆனால் விசாரணை நடத்துவதாக சிறீலங்கா அரசு முன்னர் உறுதி அளித்திருந்தது.

படை நடவடிக்கையில் ஒரு பொதுமகன் கூட கொல்லப்படவில்லை என சிறீலங்கா அரசு தொடர்ந்து தெரிவித்துவருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போரின் இறுதி நாட்களில் ஏற்பட்ட பெருமளவான பொதுமக்களின் இழப்புக்கள் சிறீலங்கா அரச படையினரின் எறிகணைத் தாக்குதல்களால் இடம்பெற்றதாக நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.

சிறீலங்காவில் நீதி விசாரணைகள் இடம்பெறவில்லை என்பதையும், போரில் என்ன நடைபெற்றுள்ளது என்பதையும் அறிக்கை தெளிவாகக் காண்பித்துள்ளது. சிறீலங்கா மக்கள் பார்க்கவேண்டிய விடயங்கள் அதில் உள்ளன. ஆனால் அதனை மறைப்பதற்கு சிறீலங்கா அரசு முற்பட்டுள்ளது.

அறிக்கையில் தெரிவித்தபடி போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது தான் எமது இலக்கு. அந்த அறிக்கையில் போர்க்குற்றங்களை மேற்கொண்டவர்களின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால் விசாரணையில் அவர்கள் இனங்காணப்படலாம். அதன் பின்னர் அவர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்திஐ.நா வின் அறிக்கைக்கு எதிராக கையெழுத்திடுமாறு தமிழர்களை மிரட்டும் சிங்கள காவல்துறையினர்.
அடுத்த செய்திசிறீலங்கா அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்