[புகைப்பட தொகுப்பு இணைப்பு] மாற்று அரசியலை தேடி கடலென திரண்ட கரூர் மக்கள்.

56

மாற்று அரசியலை தேடி கடலென திரண்ட கரூர் மக்கள்.

“காங்கிரசின் வீழ்ச்சி என்பதே தமிழினத்தின் எழுச்சி” என்ற லட்சியத்தை மனதில் கொண்டு இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினரும் அதன் தலைமை ஒருங்கினைப்பபாளர் செந்தமிழன் சீமான் அவர்களும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சிக்கு எதிரான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் பிரச்சாரத்தின் 11- வது நாளான நேற்று திருப்பூர்,வெள்ளகோவில்,கரூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டகரூர் பொதுக்கூட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் மிகுந்த அளவில் கலந்து கொண்டனர். அக் கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் பேசும்போது 63 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சி தான் ஆட்சி செய்து வருகிறது. இந்த தேசத்தில் நடைபெற்ற ஊழல். கொள்ளை,கொலை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, அடிப்படை சுகாதார வசதி இல்லாத அவல நிலை இவை அனைத்திற்குமே காரணம் காங்கிரஸ் கட்சி. தமிழர்களின் மற்றுமொரு தாயகமான தமிழீழ மண்ணில் 60 ஆண்டு காலமாக நடந்து வந்த விடுதலை போராட்டத்தை வீழ்த்திய கட்சி காங்கிரஸ். தமிழர்களின் நலனில் துளியும் அக்கறையில்லாத காங்கிரஸ் கட்சிக்கு பிறகு எதுக்கு என் வாக்கு? காங்கிரஸ் கட்சிக்கு நாம் வாக்கு செலுத்தி செலுத்தியே நம் தமிழினத்துக்கு வாய்க்கரிசி போட வைத்துவிட்டோம்.

இந்த நாட்டில் காங்கிரஸ் கட்சி மக்களுக்காக மேற்கொண்ட ஒரு போராட்டம் ஏதேனும் உண்டா? ஒரு நன்மை பயக்கும் தொலைநோக்கான வளர்ச்சி திட்டம் ஏதும் உண்டா? காங்கிரசிற்கு வாக்கு கேட்கும் யாராவது இதை பற்றி என்னுடன் பேச தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர் படுகொலை தடுத்து நிறுத்துங்கள், காவிரியில் தண்ணீர் பெற்று தாருங்கள்,மீனவர் படுகொலையை தடுக்க கச்சத்தீவை திரும்ப பெறவேண்டும் என்று சொல்லி ஏதேனும் ஒரு போராட்டத்தை ஒரு அறிக்கையை இந்த மண்ணில் காங்கிரஸ் கட்சி வெளியிடிருக்கிறதா என்று தன முன்னே திரண்டிருந்த மக்களிடையே கேள்வி எழுப்பினார். நாட்டுக்காக வீட்டை கொடுத்தோம் என்று சொல்லிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர், அந்த ஒரு வீட்டுக்காக ஐம்பது வருடம் இந்த நாட்டையே எடுத்துவிட்டார்கள்.

சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பட்டியலை வெளியிட முடியாது என்றும் அதை வெளியிட்டால் பிரச்னை வரும் என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. உலகத்தில் உள்ள சிறந்த அயோக்கியர்களை கணக்கெடுத்தால் காங்கிரசில் இருக்கும் அனைவரும் அந்த பட்டியலில் வருவார்கள் என்று தெரிவித்தார். பகுத்தறிவு பகலவனின் வாரிசு என்றும், அண்ணாவின் தம்பி என்று கூறிக்கொள்ளும் கருணாநிதி அந்த இருபெரும் தலைவர்களின் கனவு காங்கிரஸ் கட்சியை ஒழிப்பது என்பதுதான்.ஆனால் அதை விடுத்து இன்று காங்கிரஸ் கட்சிக்கு வால் பிடித்துகொண்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி இந்த மண்ணில் இருக்கும் வரை இந்திய வல்லரசாக முடியாது என்று தெரிவித்தார்.

கரூரில் திரண்டு இருந்த மக்கள் கூட்டம் இப் பொதுக்கூட்டத்தை மாநாடு போல் காட்சி அளிக்க செய்தது. திரண்டு இருந்த மக்கள் கூட்டம் நாம் தமிழர் கட்சியை ஒரு மாற்று அரசியல் சக்தியாகவே கருதுகிறது என்பதை கூடி இருந்த பெண்கள், குழந்தைகள், இளைஞர்களின் கூட்டம் உறுதி செய்தது.