தமிழக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், இன்று நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி:
என் இனமானத் தமிழர்களே… தமிழகத்தில் உள்ள 63 தொகுதிளில் தொண்டைத் தண்ணீர் வற்ற பரப்புரை செய்துவிட்டு, இப்போதுதான் உட்கார அவகாசம் கிடைத்திருக்கிறது. ஒரு கணம் ஓய்வு கிடைத்தால்கூடநிம்மதியாகக் கண் அயரலாமே என சுற்றிச் சுழன்ற உடம்பு ஏங்குகிறது. உட்காரவோ சாப்பிடவோ நேரமின்றி தமிழகம் முழுக்கச் சுற்றிவந்து இறுதியாக சென்னையில் பரப்புரையை முடித்தபோது, என்னால் முடிந்த கடமையை நிறைவேற்றிவிட்டேன் என்கிற நிம்மதி பிறக்கிறது.ஆனாலும், நிமிட பொழுதுகூட என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
எம் தமிழினம் வாக்குப் பதிவின் மகத்துவம் அறிந்து வரிசையில் நிற்குமா…
இல்லை, ‘இன்றைய விடுமுறையை எப்படியாவது கழிக்கலாம்’ என நினைத்து வாக்குச்சாவடிக்குப் போவதைத் தவிர்க்குமா என்பது என் நெஞ்சைக் குடையும் கேள்வி.
100 சதவீத வாக்குப் பதிவை முழுமையாக நிகழ்த்தி முன் மாதிரி மாநிலமாக நம்மால் மாற முடியவில்லை. ‘யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என உங்களின் விரல் பிடித்து அழைத்துப்போக நீங்கள் ஒன்றும் கிளிப்பிள்ளை அல்ல… என்னுடைய ஒற்றை வேண்டுகோள், ‘தயவு செய்து வாக்களியுங்கள்’!
கோபத்தோடு பேசுவதும் சாபத்தோடு வாழ்வதும் நமக்கான தீர்வை எப்படிக் கொடுக்கும்? நம் காயங்களுக்கு மருந்து தேடும் மகத்துவ வரமாக வாக்கு இருக்கிறது. நம்முடைய வாக்குரிமையை நாம் சரியாகப் பயன்படுத்தினாலே, இந்த சமுதாயத்துக்கு ஆற்றவேண்டிய கடமையை மிகச் சரியாக நாம் செய்துவிட்டோம் என்கிற நிறைவுக்கு உறுதி சொல்ல முடியும்.
வாக்கு செலுத்துவதன் அவசியத்தை உணர்த்த வேண்டிய தலைவர்களே இன்றைக்கு வாக்களிப்பதைப் புறக்கணித்துவிட்டு வேறு வேலைகளைப் பார்க்கிறார்கள். பெருமகனார் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் அஸ்ஸாம் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கவில்லை. ‘பிரதமருக்கு பல்வேறு அலுவல்கள் இருந்ததால் வாக்களிக்க முடியவில்லை!’ என பிரதமர் அலுவலகம் விளக்கம் சொல்கிறது. இந்த வெட்கக்கேடான நிலையை எங்கே போய் சொல்வது? ஊழல் லஞ்சம் என எத்தகைய பிரச்னையில் கருத்துக் கேட்டாலும், ‘எனக்குத் தெரியாது’ என ஒண்ணாம் வகுப்பு குழந்தைபோல் சொல்லும் பிரதமர் மன்மோகன் சிங் வாக்களிக்கும் விஷயத்தில்கூட இந்தியக் குடிமகன்களுக்கு முன் மாதிரியாக இருக்கக்கூடாதா?
என் இனமானத் தமிழர்களே… குடலைப் பிடுங்கும் குமட்டல் சமூகமாக லஞ்சமும் ஊழலும் இன்றைக்குப் பெருகிவிட்டன. நல்லாட்சி என்றால் அங்கீகரிக்கவும் காட்டாட்சி என்றால் வீட்டுக்கு அனுப்பவும் வாக்கு என்கிற வரம் நம் கையில் இருக்கிறது. ஜனநாயகத்தின் ஜீவனை நிலைகொள்ள வைக்கும் விதமாக நமது வாக்குகளைத் தவறாமல் பதிவு செய்வோம். ஜனநாயகக் கடமையை நிறைவாகச் செய்த பெருமிதத்தோடு நம் விரல்களில் கறுப்பு மையை கம்பீரமாகச் சுமப்போம்!
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
http://therthal.vikatan.com/index.php?eid=896