சொந்தமாக விமானம், கப்பல், உலங்கு வானுர்தி, வணிக வளாகம், வாடகை வீடுகள் உள்ளதா? அவை எப்போது வாங்கப்பட்டது. உட்பட பல்வேறு கேள்விகளை தேர்தல் ஆணையம் வேட்பாளர்களை கேட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கலின் போது, தங்களின் அசையும், அசையா சொத்துகள், ரொக்க இருப்பு, நகை, தங்கள் மீதுள்ள வழக்கு விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும். கடந்த தேர்தலின் போது, வேட்பாளர்கள், அவரது வாரிசு சொத்து விவரங்களை கேட்ட தேர்தல் ஆணையம், 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் கிடுக்கிபிடி கேள்விகளை கேட்டுள்ளது. வேட்பு மனு விண்ணப்பத்தில் வேட்பாளர், அவரது வாரிசு, அவர்களை சார்ந்துள்ளவர்களின் வங்கி கணக்கு, பான்கார்டு எண் என்ன? ஆகிய கேள்விகளை கேட்டுள்ளது. சொந்த கட்டடம், வணிக வளாகம், வாடகைக்கு விட்டுள்ள வீடுகள், காலி நிலம், விவசாய நிலம் உள்ளதா? அவற்றின் மொத்த சதுரடி எவ்வளவு? அவற்றின் இன்றைய சந்தை விலை எவ்வளவு? வாரிசு, சார்ந்துள்ளவர்களின் சொத்துகள் எவ்வளவு, ரொக்க இருப்பு, நகை இருப்பு எவ்வளவு? என கேட்டுள்ளது.சொந்தமாக விமானம், உலங்கு வானுர்தி, கப்பல், பிற வாகனங்கள் உள்ளதா? அவ்வாறு இருந்தால், அவற்றின் மதிப்பு என்ன? எப்போது வாங்கப்பட்டது எனவும் கேட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இது போன்ற கேள்விகள் கோடீஸ்வர வேட்பாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தேர்தலுக்கு பின் வேட்பு மனு தாக்கல் செய்த கட்சியினர் யாரேனும், சி.பி.ஐ., சோதனையில் சிக்கினால் கூட, வேட்பு மனுவில் காட்டியுள்ள சொத்துகளுக்கு பின்னர் புதிதாக எவ்வளவு சொத்துகள் வாங்கியுள்ளார் என்பதை எளிதாக கண்டு பிடித்து விட முடியும் என கூறப்படுகிறது.