தேர்தல் தேதி அறிவித்ததும் திறக்கப்பட்ட உழவர் சந்தை! விராலிமலை விதிமீறல்

16

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகும், உழவர் சந்தை திறந்ததாக கொதித்துக் கொண்டிருக்கிறது விராலிமலை.

விராலிமலை சந்தைபேட்டை பகுதியில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் ஆமை வேகத்தில்தான் சென்று கொண்டிருந்தன. உழவர் சந்தைக்கு அடித்தளம் அமைத்து, சில நாட்களுக்கு முன்புதான் மேற்கூரை அமைக்கும் பணி துவங்கியது. தேர்தல் தேதி விரைவில் வர இருக்கிறது என தெரிந்தும் பணிகளை மந்தமாகவே மேற்கொண்டு வந்தது வேளாண்மைத் துறை.

மார்ச் 1&ம் தேதி பூச்சு வேலை முடிந்து தளம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. ஆனால், அன்று மாலையே தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

‘‘இந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களில், விராலிமலையில் உழவர் சந்தை முன்பாக தமிழக அரசுக்கு சொந்தமான வேளாண்மைத் துறை வாகனங்கள் வந்து நின்றன. அதிலிருந்து அவசர அவசரமாக இறங்கிய அதிகாரிகள், தாங்கள் கையோடு கொண்டுவந்த ‘விராலிமலை உழவர் சந்தை திறப்பு விழா’ என்ற பிளக்ஸ் போர்டை மாட்டினார்கள்.

வந்திருந்த அதிகாரிகளில் சிலபேர் வேகமாக விராலிமலை டவுனுக்குச் சென்று சில கிலோக்கள் காய்கறிகளை வாங்கி கொண்டு வந்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த காய்கறி வியாபாரிகள் சிலரையும் கூட்டி வந்து நான்கு ‘இன்ஸ்டன்ட்’ கடைகள் உடனடியாக உருவாக்கப்பட்டன. உடனே, வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் அண்ணாமலை அந்தக் கட்டடத்தை திறந்து வைத்தார். திறந்து வைத்தார் என்றால் ரிப்பன் வெட்டி அல்ல, காய்கறிகளை தராசில் அள்ளிப்போட்டு வியாபாரத்தை ஆரம்பித்து வைத்தார். அப்போது நேரம் சரியாக 6.20 மணி. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, இப்படித்தான் அவசரமாக நடந்தேறியது உழவர் சந்தை திறப்பு விழா’’ என்று விளக்கினார்கள் விராலிமலைக்காரர்கள். நம்மிடம் பேசிய விராலிமலை அ.தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன்,

“அந்த உழவர் சந்தை கட்டடப் பணிகள் முழுதாக முடியவில்லை. எந்த அறிவிப்பும் இல்லாமல் தேர்தல் தேதி அறிவித்த பிறகு அவசர அவசரமாக அதிகாரிகள் திறந்து வைத்துள்ளனர். இதன்பிறகு, மறுபடியும் கட்டட வேலையை ஆரம்பித்துவிட்டனர். தி.மு.க. அரசுக்காக அதிகாரிகள் செய்த இந்த அப்பட்டமான தேர்தல் விதிமீறலை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்’’ என்றார்.

உழவர் சந்தையை திறந்துவைத்த வேளாண்மைத் துறை துணை இயக்குனர் அண்ணாமலையிடம் பேசினோம்.

“உழவர் சந்தை திறப்புவிழா நடைபெறவில்லை. வியாபாரத்தை மட்டுமே துவக்கி வைத்தோம். திறப்புவிழாவே இந்த உழவர் சந்தைக்கு கிடையாது” என்றவரிடம், ‘அங்கு தற்போது காய்கறிகடைகளே இல்லையே..?’ என்று கேட்டோம். “அது இன்னும் கொஞ்சம் வேலைகள் முடிந்தபிறகு முழுமையாக செயல்படும்…” என மழுப்பலாக பதில் கூறினார்.

தி.மு.க. அரசின் இந்த செயல்பாடு, தேர்தல் கட்டுப்பாடுகள் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பது மாதிரி இருக்கிறது.

நன்றி

தமிழக அரசியல்

முந்தைய செய்தி34 தொகுதிகள்… 18 லட்சம் வாக்குகள்… தி.மு.க.வுக்கு எதிராகத் துடுப்புபோடும் மீனவர்கள்!
அடுத்த செய்திபா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல் – தமிழருவி மணியன்