34 தொகுதிகள்… 18 லட்சம் வாக்குகள்… தி.மு.க.வுக்கு எதிராகத் துடுப்புபோடும் மீனவர்கள்!

45

34 தொகுதிகள்… 18 லட்சம் வாக்குகள்…
தி.மு.க.வுக்கு எதிராகத் துடுப்புபோடும் மீனவர்கள்!

‘‘தேர்தல் தினத்தன்று தி.மு.க.வுக்கு எதிரான சுனாமியாக விசுவரூபம் எடுப்போம்’’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது இந்திய அளவில் முக்கியமான மீனவர்கள் அமைப்பான அகில இந்திய பரவர் கூட்டமைப்பு.

வரும் சட்டமன்றத் தேர்தலில் மீனவ சமுதாய மக்களின் நிலைப்பாடு குறித்து முடிவு செய்ய மார்ச் 12&ம் தேதி ராமேஸ்வரம் முதல் முட்டம் வரை உள்ள 45 சங்கங்களை உள்ளடக்கிய அகில இந்திய பரவர் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடியில் நடந்தது.

தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் என பல கட்சிகளைச் சேர்ந்த மீனவ இனப் பிரமுகர்கள் மற்றும் மீனவர்கள் சமுதாயத்தின் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில்… வரும் தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அ.தி.மு.க. கூட்டணியையே ஆதரிக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையாக இருக்க, அதன்படியே அ.தி.மு.க. அணியை ஆதரிப்பதாக அறிவித்திருக்கிறது இந்தக் கூட்டமைப்பு.

இதன் அகில இந்திய துணைத் தலைவரான ரெக்ஸ் பெர்னாண்டஸை சந்தித்தோம்.

‘‘வெறும் 200 ரூபாய் சம்பளத்திற்கு கடலுக்கு செல்கிற மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இலங்கை ராணுவம் இந்திய மீனவர்களை கொடூரமாக கொலை செய்கிறது. இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தவறிவிட்டது. தமிழக அரசு நினைத்தால், குறைந்தபட்சம் இலங்கை ராணுவத்தை பயமுறுத்தவாவது செய்திருக்கலாம். ஆனால், மீனவர்களின் உயிரை தி.மு.க. மதிக்கவே இல்லை.

எங்கள் சமுதாயத்தினருக்கு அ.தி.மு.க.வில் மாவட்டத்தில் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. தி.மு.க.வில் சொல்லுகிற அளவுக்கு எந்த பொறுப்பும் கிடையாது.

தமிழ்நாட்டில் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் மீனவ வாக்காளர்கள் இருக்கிறார்கள். தூத்துக்குடி தொகுதியில் மட்டும் சுமார் 50 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. ஏறத்தாழ 34 தொகுதிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய சக்தி எங்களிடம் உள்ளது.

கடந்த காலங்களில் எங்கள் கோரிக்கையை சொல்வதற்காக முதல்வர் கருணாநிதியை சந்திக்க அப்பாய்ன்மென்ட் கிடைத்தும், 2 மணிநேரம் எங்களை காக்கவைத்து விட்டு கடைசிவரை எங்களை சந்திக்கவே இல்லை. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எங்கள் கோரிக்கையை சொல்லியிருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் வரும் காலங்களில் நிறைவேறும் என்று நம்புகிறோம். இதன் அடிப்படையில் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம்…’’ என்றார்.

கூட்டத்தில் முக்கிய அங்கம் வகித்த தூத்துக்குடி பரவர் நலச் சங்க பொதுச் செயலாளர் ஹெர்மன் கில்டு&விடம் மீனவர்களின் கோரிக்கைகள் பற்றிக் கேட்டோம்.

‘‘அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டவரும், ஒட்டு மொத்த மீனவர்களின் தலைவருமான அமரர் குருஸ்பர்னாந்து பெயரை தூத்துக்குடி மாநகராட்சி கட்டடத்துக்கு சூட்டவேண்டும் என்று முதல்வர், துணை முதல்வர், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி ஆகியோரிடமும், அரசு அதிகாரிகளிடமும் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால், இன்றுவரை எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல், ஏமாற்றி விட்டது தி.மு.க. அரசு.

மீனவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருந்த தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், பஸ் நிலையம் ஆகியவை ஏற்கனவே நகரின் மேற்கு பகுதிக்கு இடமாற்றம் செய்துவிட்டனர். ஆனால், ஊர் முழுவதும் பாதாள சாக்கடை மூலம் வரும் கழிவுகளை சுத்திகரிக்கும் ஆலை அமைப்பது மட்டும், மீனவர்கள் குடியிருப்பு பகுதியில். இது என்ன நியாயம்?

1996&ல் எங்கள் சமுதாயத்தின் சார்பில் சுயேச்சையாக போட்டியிட்டு 38 ஆயிரத்து 300 ஓட்டுகள் வாங்கினோம். தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், இன்று சுமார் 50 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. மீனவர்களை மதிக்காததால் எங்கள் சமுதாயத்தினர் அனைவரும் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரிப்பது என்று முடிவு செய்துள்ளோம்’’ என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பேராசிரியர் பாத்திமா பாபு நம்மிடம், ‘‘கடந்த 1983 ஆகஸ்ட் 13&ம் தேதியில் இருந்து இன்றுவரை 500&க்கும் மேற்பட்ட மீனவர்கள் சித்திரவதைப்படுத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் தமிழக மீனவரை கழுத்தில் சுருக்கிட்டுக் கொன்ற சிங்கள ராணுவத்தின் செயல்பாடு தமிழக மீனவர்கள் மனதில் தீயாய் எரிகிறது. இதே குஜராத் மீனவர்கள் பாகிஸ்தானால் தாக்கப்பட்டிருந்தால், நாம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருப்போம். ஆனால், இங்கு தமிழ்ச் சொந்தங்களை கொன்று குவித்த ராஜபக்சேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து தமிழ் நெஞ்சங்களை காயப்படுத்துகின்றனர். சேது சமுத்திர திட்டம் மீனவர் நலனுக்கு எதிரானது. ஆனால், இந்த அபாயகரமான திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் போட்டுள்ளது. இப்படி மீனவர்களை பல வகைகளில் பாடாய்ப்படுத்திவரும் இந்த அரசை உறுதியோடு எதிர்ப்போம்’’ என்றார்.

மீனவர்களின் இந்த முடிவுபற்றி தி.மு.க. மாவட்டச் செயலாளர் பெரியசாமியிடம் பேசினோம்.

‘‘அன்று பழைய நகராட்சி வளாகத்தில் நான்தான் அமரர் குருஸ்பர்னாந்திற்கு சிலை வைத்தேன். தற்போது கட்டப்பட்டுள்ள புதிய மாநகராட்சி கட்டடத்திற்க்கு குருஸ்பர்னாந்து பெயர் சூட்டவும், அவரின் சிலை வைப்பதற்கும் முயற்சி எடுத்து வருகிறோம். பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மீனவர்கள் தெரிவித்த எதிர்ப்பை அடுத்து, மாற்று இடத்தில் அமைக்கப்படவுள்ளது. இதை துணை முதல்வரே அறிவித்து விட்டார். பொதுமக்களின் வசதிக்காகத்தான் பத்திரப்பதிவு அலுவலகம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மீனவர் படுகொலை விவகாரத்தில் தலைவர் கலைஞர் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். இந்த பிரச்னைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு நாங்கள் போராட்டம் நடத்தி கைதானோம்…’’ என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார் பெரியசாமி.

ஆனாலும், காயம் ஆறாத மீனவர்கள் இந்த முறை அ.தி.மு.க.வின் படகுக்கே துடுப்பு போட முடிவெடுத்துவிட்டதால் தி.மு.க. திண்டாடித்தான் நிற்கிறது!

– பி.எம்.கணேஷ்

நன்றி

தமிழக அரசியல்

முந்தைய செய்திஆட்சியை காப்பாற்றுவதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் வழங்கிய காங்கிரஸ் கூட்டணி அரசு – விக்கிலீக்ஸ் இணையதளம்
அடுத்த செய்திதேர்தல் தேதி அறிவித்ததும் திறக்கப்பட்ட உழவர் சந்தை! விராலிமலை விதிமீறல்