சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி

62

உவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள்  போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். நேற்று உவரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். உவரி பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட சீமான், பின்னர் அப்பகுதி மக்களிடம் பேசினார்.

மீனவர்களின் இன்றைய பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியே என்றும், இந்தக் கட்சி வேட்பாளர்களை ஜெயிக்க விட்டால், இப்போதுள்ள மோசமான நிலைதான் தொடரும் என்றும் அவர் கூறினார்.

உடனே அப்பகுதி மக்கள், நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். மீனவர்களின் ஒட்டுமொத்த வாக்கையும் உங்களுக்கே அளிக்கிறோம் என்றனர் ஒருமித்த குரலில்.

அதற்கு பதிலளித்த சீமான், “இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அடுத்த தேர்தல் வரை பொறுத்திருங்கள். இப்போது உங்கள் வாக்கை காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வீழ்த்துங்கள்” என்றார்.

மீனவ சமுதாயத்துக்கு காங்கிரஸ் அரசால் நேர்ந்த கொடுமைகளை விளக்கினார். ஈழத்திலும் தமிழக கடலோர மாவட்டங்களிலும் தமிழர் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸ்தான் என்பதை அவர் சொன்னபோது, உவரி மக்கள் உரத்த குரலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றனர்.

சீமான் கிளம்புவதற்கு முன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனைவரும் விரும்பினர். அவர்களை தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார் சீமான்.

எக்காரணம் கொண்டும் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடவே மாட்டோம் என சீமான் முன்னிலையில் உவரி மக்கள் அனைவரும் உறுதி கூறிச்சென்றனர்.