தியாகச் சுடர்களான முத்துக்குமார், முருகதாசன் உட்பட்ட 19 தியாக சீலர்களினதும் இரண்டாம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு லண்டனில் (06-02-2011) இடம்பெற்றது.
மாவிலாறு முதல் முள்ளிவாய்க்கால் வரை மூர்க்கத்தனமாக முன்னேறிய சிங்கள படைகளின் கொடூர தாக்குதலில் தமிழர் தாயகமும், தமிழர்களின் வாழ்விடங்கள், சொத்துக்கள், உள்ளிட்ட அனைத்து வளங்களும் அழிக்கப்பட்டதோடு தமிழர்கள் பல்லாயிரக் கணக்கில் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டும் இருந்த வேளையில் அதனை பார்த்து பொறுக்கமுடியாமல் பொங்கி எழுந்த தமிழராய் தம் உடலில் தீயிட்டு சர்வதேசத்திடம் நீதி கேட்ட அற்புத மனிதர்களான அந்த 19 தியாகச் சுடர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வே லண்டனில் நேற்று இடம்பெற்றது.
(06-02-2011) ஞாயிற்றுக்கிழமை மாலை வடகிழக்கு லண்டனில் உள்ள “ஜக் கோர்ன்வெல் கொமியூனிட்டி சென்ரர்” மண்டபத்தில் இடம்பெற்றது.
மாலை 7 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை தேசியத்தலைவரின் மைத்துணியும் மாவீரர் பாலச்சந்திரன் (அருணன்) அவர்களின் சகோதரி திருமதி. அருணா குமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.
முருகதாசனுக்கான ஈகைச்சுடரினை ஈகைப்போராளி முருகதாசனின் சகோதரன் சுதன் அவர்கள் ஏற்றிவைத்தார். 19 தியாகிகளுக்குமான ஈகைச்சுடரினை கப்டன் வாசு, மேஜர் ஜேம்ஸ், லெப். சுந்தரி ஆகிய 3 மாவீரர்களின் சகோதரர் திரு. சேகர் அவர்கள் ஏற்றிவைத்தார்.
சுடரேற்றலைத் தொடர்ந்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும், தாயக விடுதலைப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முருகதாசனுக்கான மலர்மாலையினை முருகதாசனின் சகோதரன் சுதன் அவர்கள் அணிவிக்க, 19 தியாகச் சுடர்களுக்குமான மலர் மாலையினை மாவீரர் ஜீவா அவர்களின் சகோதரி சுதா அவர்கள் அணிவித்தார்.
சிறப்பு நிகழ்வாக “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் உரையும், உலகத் தமிழர் இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் ஐயா அவர்களின் உரையும் மண்டபத்தில் ஒலிவடிவில் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பாடல்கள், கவிதைகள், நினைவுப் பேருரைகள் நடனங்கள் என்பன இடம்பெற்றன. நினைவுப் பேருரைகளை கவிஞர் நிலா, பெரியார் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த சரவணன், தமிழீழ உணர்வாளர் முரகானந்தன் அவர்களும் வழங்கினர்.
எம்தலைவர் சாகவில்லை, ராஜகோபுரம் எங்கள் தலைவன் – என்ற பாடலுக்கு இளம் மாணவிகளின் நடன நிகழ்வோடு இரவு 10 மணியளவில் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
|