திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 4

96
திருப்பி அடிப்பேன்! – சீமான்


”நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்…”

”நான் தமிழகத்து நடேசன் பேசு கிறேன்…”

எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும்.

வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும் பேசுவார் தமிழ்ச்செல்வன், ”தமிழ் ஈழ ஆர்வலர்களின் தொலைபேசிப் பேச்சுகள் பதிவு செய்யப்படுகிறதாமே… அடிக்கடி நான் உன்னோடு பேசுவதால் உனக்கு ஏதும் பிரச்னைகள் வருமா?” – தமிழ்ச்செல்வனின் குரலில் பரிவும் பதற்றமும் இருக்கும்.

”நீங்கள் என்ன, தமிழ்நாட்டில் என்னை குண்டு வைக்கச் சொல்லியா பேசுகிறீர்கள்? அங்கே நம் உறவுகளின் தலையில் குண்டுகள் விழுவதைப் பற்றித்தானே அண்ணா பேசுகிறோம்… பதிவு செய்பவர்கள் அதனை உரியவர்களிடம் போட்டுக்காட்டினாலாவது அவர்களின் உள்ளத்தில் கருணை சுரக்கிறதா எனப் பார்க்கலாம்!” எனச் சொல்வேன். அதைக் கேட்டு வேதனையாக சிரிப்பார் தமிழ்ச்செல்வன்.

”வா… வா…” என்று வாஞ்சையோடு அழைத்தவன், நான் அங்கே போனபோது எதிர்கொள்ள எதிரே வரவில்லை. ”இறந்து ஒரு வருடத்துக்குப் பிறகுதான் நினைவு இல்லம் எழுப்புவது வழக்கம். அண்ணன் இறந்து 90 நாட்கள்தான் ஆகிறது. அதனால்தான் அவர் புதைக்கப்பட்ட இடம் இப்படி இருக்கிறது…” எனச் சொல்லி கை காட்டினார்கள். மலர்ந்து சிரித்தவன் மண் குவியலாகக் கிடந்தான். கை நிறையக் கார்த்திகைப் பூக்களைக் கொட்டி கையறு கோலத்தில் நின்ற பாவி நான்!

இதுபோல் ஒன்றா… இரண்டா… ஈழப் போர் தீவிரம் எடுத்த வேளையில், ‘நிச்சயம் வெல்வோம்!’ என என்னைத் தைரியப்படுத்திய குரல்கள். இறுதிக் கட்டப் போர்க் களத்தில் நின்றபடி, ‘சாவை எதிர்நோக்கி நிற்கிறோம். ஆனாலும், போரைக் கைவிடுவதாக இல்லை!’ என உறுதியோடு சொன்ன குரல்கள்!

உலகத்தின் கண் பார்க்க அவர்கள் அழித் தொழிக்கப்பட்ட நிகழ்வு முடிவுக்கு வந்தபோது, என் சிந்தனை எவை குறித்தெல்லாம் ஓடி இருக்கும்? என் மூளை நரம்புகள் எப்படி எல்லாம் மூர்க்கத்தில் தவித்திருக்கும்?

தோற்றவனாகவும் துடித்தவனாகவும் சொல்கிறேன்… மே 18-ம் தேதியே என் உயிர் பிரிந்துவிட்டது. இது இரவல் மூச்சு. உங்களின் முன்னால் ஒரு சவம்தான் உரையாடுகிறது. இந்த சவத்தை உங்களால் என்ன செய்ய முடியும்? செத்துப்போனவனை வெட்டி வீழ்த்தும் தைரியம் சிறைச் சாலைகளுக்கோ, காக்கி உடுப்புகளுக்கோ இருக்கிறதா?

”ஈழத்து விடிவை இயக்கக் கொள்கையாகப் பூண்டிருப்பவர்களே அமைதியாகிவிட்ட நிலையில் சீமானுக்கு மட்டும் ஏன் இன்னமும் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறது?” – அரசியல் சார்ந்தவர்களின் இந்தக் கேள்வி என் காதுபடவே நீள்கிறது.

ஈழத்துக்கும் எனக்கும் நிலவிய உறவைப்போல், தமிழகத்தில் உள்ள பலருக்கும் தமிழ் ஈழ ஆர்வம் இருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஈழ மக்களும் போராளிகளும் மீள முடியாத கொடூர வளையத்துக்குள் சிக்கித் தவித்தபோது, அண்ணன் பிரபாகரன் மீது பேரன்புகொண்ட முத்துக்குமார் உள்ளிட்ட தமிழகத்து இளங்குருத்துகள் தங்களுக்குத் தாங்களே தீ வைத்து மடிந்தபோது, ‘இறுதி நிமிடங்களில் நிற்கிறோம்… தாய்த் தமிழ் உறவுகளே கைகொடுங்கள்’ என யோகி உள்ளிட்ட மூத்த புலிகள் ஏக்கக் குரல் எழுப்பியபோது… ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள்கூட தமிழகத்தையே ஸ்தம்பிக்கவைக்கும் முயற்சியில் இறங்காதது ஏன்?

மது ஒழிப்பு மாநாட்டுக்குக் கூட்டம் திரட்டுபவர்கள், இன ஒழிப்பு நாட்டுக்கு எதிராக வீதிக்கு வராதது ஏன்? மாநில மாநாடுகளுக்கு லட்சோப லட்சம் தொண்டர்களைத் திரட்டும் கட்சிகள் பலவும் இணைந்து ஈழப் போரைத் தடுக்கக்கூடிய கூட்டத்தில் 5,000 பேர்கூட திரளவில்லையே… இதுதான் ஈழத்து கூக்குரலுக்கு நாம் காட்டும் இரக்கமா? மாநாட்டுக்குக் காட்டும் அக்கறையைக்கூட ஆயிரக்கணக்கான தமிழர்கள் மடிந்தபோது நாம் காட்டாமல் போய்விட்டோமே… ஒப்புக்குக் கூட்டத்தைக் கூட்டி, தப்புக்குத் துணை போனவர்கள் பட்டியலில் ஆள்பவர்களின் பெயரோடு நமது பெயரும்தானே கலந்திருக்கும்?

‘நாங்கள்தான் திரட்டவில்லை… நீ எங்கே போனாய்?’ என நீங்கள் திருப்பிக் கேட்கலாம். அன்றைக்கு இந்த சீமானுக்கு அவ்வளவு ஆதரவு கிடையாதய்யா! சுற்றி நின்ற 10 பேரைத் தவிர வேறு படை இல்லை. என் பலம் எனக்குத் தெரியும். அதனால்தான் ஈழ ஆர்வலர் களாகத் தெரிந்த உங்கள் அனைவரின் பின்னாலும் நான் ஓடோடி வந்தேன். இறுதி மூச்சின் கணத்திலும் ஈழ வலியை உணர்த்தும் சக்தி உங்களுக்கு இருக்கும் என நம்பி, தேடித் தேடிப் பின்னால் வந்தேன். பேரதிர்வு நடந்தபோதும்,  பூமி நழுவாதவர்களாய் தமிழகத்து ஜீவன்கள் வழக்கமான வேலைகளில் மூழ்கியபோதுதான் அரசியல் பக்குவங்கள்(?) பொட்டில் அறைந்தாற்போல் எனக்குப் புரிந்தது.

இயலாமையில் துடித்து அழுதவர்கள் எல்லோரும் கூடி எடுத்த முடிவுதானய்யா, ‘நாம் தமிழர்’ அமைப்பு. இது தொடங்கப்பட்டது அல்ல… தொடரப்பட்டது. அய்யா ஆதித்தனார் இந்த அமைப்பைத் தொடங்கிய போது, அவருக்கு வலு சேர்க்கத் தவறிவிட்டது தமிழினம். ‘என் வழிவரும் வீரப் பிள்ளைகள் இந்த இயக்கத்தைத் தொடருவார்கள்!’ என அப்போதே நம்பிக்கையோடு சொன்னார் ஆதித்தனார். சிறு பொறிகளாய் திசைக்கொரு பக்கமாய் சிதறிக் கிடந்தவர்களைத் திரட்டி பெருநெருப்பாக அய்யாவின் வழியில் பின்தொடர்கிறோம்.

ஈழத்தை இழவுக்காடாக்கிய காங்கிரஸுக்கு தமிழர் களின் வலியைப் புரியவைக்கும் விதமாகத்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் எவராக இருந்தாலும் சரி என்று நாங்கள் ஆதரித்தோம். காங்கிரஸின் தமிழகத் தலைவர் தங்கபாலுவை வீழ்த்தியதன் மூலம் தமிழர்களின் நெத்தியடியை டெல்லி தலைமைக்கே உணர்த்தினோம். இளங்கோவனை மண் கவ்வவைத்தோம். அப்போதே அரசியல் அதிரடிகளை அரங்கேற்றுவதற்கான சக்தி எங்களுக்குப் பிறந்துவிட்டது. ஒடுக்குவதாக நினைத்து இந்த அரசாங்கம் அடுத்தடுத்து என்னை சிறையில் தள்ளி, என் சக்தியைத்தான் பெருக்கிவிட்டது. ஈழத்து வலியை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிர ஸுக்குப் புரியவைக்க எங்களின் இயக்கம் இப்போதே தயார்.

ஆனால், காங்கிரஸை கம்பீரமாக நிமிரவைக்க… தாய்த் தமிழகத்தில் இன்றைக்கு நடைபோடுகிறாராம் ராஜீவ் காந்தியின் வாரிசு. தன் முகம் பார்த்த தமிழர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக அந்த ராஜீவ் பெருமகனாரின் வாரிசு, ‘இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் நிச்சய மாகத் தலையிடுவேன்!’ எனச் சொல்லி இருக்கிறாராம்.

வேண்டாமய்யா அப்படி ஒரு விபரீத முடிவு! உங்களின் தகப்பன் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார்… 12 ஆயிரத்துக்கும் மேலான எங்களின் உறவுகள் பலியானார்கள். உங்கள் தாய் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலை யிட்டார். எங்களின் இனமே பிணமானது. இப்போது நீங்களுமா? அங்கே மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களும் உங்கள் கண்களுக்கு உறுத்தலாகத் தெரி கிறார்களா?

ராகுல் காந்தி அவர்களே…. நீங்கள் தலையிடவும் வேண்டாம்… எங்களைக் கொலையிடவும் வேண்டாம்.

தமிழகத்தை மீட்கும் சக்தி உங்களுக்கு இருப்பதாக எண்ணி, அறிவுமிகு மேதாவிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டார்கள். சோற்றில் விஷம் ஊற்றிய வனிடம், செரிமான வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்கும் என் மறத் தமிழர்களின் அறியாமை மிக்க மாண்பை நான் எங்கே போய்ச் சொல்வேன்?

ராகுல்காந்தி அவர்களே… தமிழக இளைஞர்களுக்கு அக்கறையோடு ஓர் அறிவுரையைச் சொல்லி இருக் கிறீர்கள்… ‘மது குடிப்பது தவறு’!

அப்படியானால்… ரத்தம் குடிப்பது?!

முந்தைய செய்திதிருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 5
அடுத்த செய்திதிருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 3