இந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம்! – செந்தமிழன் சீமான் அறிக்கை

21

தமிழக மீனவர்கள் மீதான கொலைவெறித்  தாக்குதல் மீண்டும் தொடர்வது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மிக வலுவான கடற்படைக் கப்பல்கள்,  தாக்குதல் நடந்த கடல் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், இப்படிப்பட்ட தாக்குதல்களை எப்படி இலங்கையால் மேற்கொள்ள முடிகிறது – என்பது அந்தக் கேள்விகளில் ஒன்று. இந்தியக் கடற்படைக் கப்பல்களுக்கும், இந்திய செயற்கைக் கோள்களுக்கும் தெரியாமல் இப்படியெல்லாம் தாக்குதல் நடத்துகிற அளவுக்கு இலங்கைக் கடற்படை வலுவாகி விட்டதா – என்பது இரண்டாவது கேள்வி.

இதுதொடர்பான ஐயப்பாடுகளை எல்லாம் தீர்க்கிற விதத்தில், இந்தியத் தரப்பில் இப்போது ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இலங்கைக்குப் போகும் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ், இரண்டு நாடுகளும் கூட்டாக ரோந்து பார்க்கலாம் என்கிற கோரிக்கையை முன்வைக்கப் போவதாக அந்தச் செய்திகள் கூறுகின்றன. இந்தியாவும் இலங்கையும் சேர்ந்து கூட்டாக ரோந்து போகலாம் – என்பது இலங்கையின் நீண்டகால சூழ்ச்சித் திட்டம். இந்தக் கோரிக்கையை ராஜபட்சே முன்வைத்ததும், தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பால், இந்தியா அதை ஏற்காததும் கடந்தகாலச் செய்திகள். ராஜபட்சேவின் அந்த நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற இந்தியா இப்போது  முயல்கிறதோ  என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

திருடனைப் பிடி – என்று நாம் சொன்னால், திருடனோடு கூட்டு சேர்ந்து ரோந்துபோகப் போவதாக இந்தியா சொல்வது, இலங்கையால் கண்மூடித்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மீனவச் சொந்தங்களுக்குச் செய்யப்படும் மேலதிக துரோகம். 500க்கும் மேற்பட்ட மீனவர்களைப் படுகொலை செய்த இலங்கைக் கடற்படை அதிகாரிகளைச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காகவே இப்படியொரு கபட நாடகத்தில் இந்தியா இறங்குகிறதோ என்கிற ஐயம், பகுத்தறிவு உள்ள எவருக்கும் எழும். மீனவச் சகோதரர்களின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் இதைக்  கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இன்னொரு கடுமையான ஐயத்தையும் இந்தியாவின் இந்த முயற்சி எழுப்புகிறது. அதை  அம்பலப்படுத்த வேண்டியது அவசியம் என்று நாம் தமிழர் கட்சி கருதுகிறது.

இந்தியாவின் கடற்படையை மீறி சுண்டைக்காய் இலங்கையால் இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றிருக்க முடியாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தியக் கடற்படையினரின் வீரத்திலும் விவேகத்திலும் எங்களுக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது. இப்படியொரு நிலையில்,   ஒரேமாதத்தில் பாண்டியன், ஜெயக்குமார் – என்று 2 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதையும், அதைத் தொடர்ந்து கூட்டு ரோந்து யோசனை எழுப்பப் படுவதையும்  பார்க்கும்போது, ராஜபட்சேவின் கனவான கூட்டு ரோந்து யோசனையை இந்தியாவே முன்வைப்பதற்கான தளம் செயற்கையாக உருவாக்கப் படுகிறதோ என்கிற ஐயம் எழுகிறது. இதை, பகிரங்கமாகச் சுட்டிக்காட்ட நாம் தமிழர் கட்சி கடமைப்பட்டுள்ளது.

தன்மீது எழுகிற இந்த ஐயங்களை அகற்றும் விதத்தில், மீனவச் சொந்தங்கள் பாண்டியன் மற்றும் ஜெயக்குமார் படுகொலையில் தொடர்புடைய  இலங்கை கடற்படை வெறியர்களின் விவரங்களை உடனடியாக இந்தியா கேட்டுப் பெற வேண்டும். இந்தப் படுகொலைகள் தொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தை காலதாமதமில்லாமல் அணுகவேண்டும். கூட்டு ரோந்து என்கிற தேச விரோத யோசனையைக் கைவிட்டுவிட்டு, தமிழக மீனவர்களைத் தாக்கும் இலங்கைக் கடற்படையைத் திருப்பிச் சுட உத்தரவிடவேண்டும். இதையெல்லாம் செய்யத் தவறினால், இந்தியாவின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஐயத்துக்குரியதாகவே  இருப்பதை தமிழக மக்களிடம் நேரடியாக எடுத்துச் சொல்லவேண்டிய  அவசியம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்படும் என்று எச்சரிக்கிறோம்.

ஆறே மாதத்தில் ஒரு லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறியன் ராஜபட்சேவின் கூட்டு ரோந்து யோசனையைத் தான் இந்தியா தத்து எடுக்கிறது. இந்திய – இலங்கை ராணுவக்கூட்டு எத்தகையதாக இருக்கும் என்பதை வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் தனது மரண சாசனத்தில் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறான். அந்த மாவீரனின் நினைவை உலகே போற்றும் இந்த ஜனவரி இறுதியில் அதை நினைவு படுத்த விரும்புகிறோம். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல், கூட்டு ரோந்து என்கிற சதித் திட்டத்துக்கு ஆதரவாக கருத்துத் தெரிவிக்கும் முயற்சியில் தமிழ் நாட்டிலுள்ள அரசியல் தலைவர்கள் எவரும் இறங்க வேண்டாம் என்றும் நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.

அன்புடன்,

சீமான்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமீனவரைக் காக்க இணையப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்-சீமான்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.