காஞ்சிபுரம், குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

100

காஞ்சிபுரம், குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம், குருவிமலை அருகே வளத்தோட்டம் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 தொழிலாளிகள் உயிரிழந்துள்ளதாகவும், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிவந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
ஏழு முதல் எட்டு நபர்கள் வரைதான் வேலை செய்ய வேண்டுமெனும் பாதுகாப்பு விதியை மீறி, 27 பேர்வரை இப்பட்டாசு ஆலையில் வேலைசெய்துள்ளது விபத்துக்குப் பிறகு, தெரியவந்துள்ளது. இதுபோன்ற விபத்துகளுக்கும், உயிர்ப்பலிகளுக்கும் விதிமீறல் ஒரு முதன்மைக் காரணமாகிறது. இதனால், பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் ஏற்படும் வெடிவிபத்தில் மனித உயிர்கள் மடிவது வாடிக்கையான ஒரு செய்தியாக மாறிவிட்டது. இதில் விபத்து எனும் போர்வைக்குள் அரசும், அதிகாரிகளும் ஒளிந்துகொள்கிறார்கள். விதி மீறலும், பாதுகாப்பின்மையும்தான் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது. இந்த பட்டாசு விபத்துகள் இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக தொடர்வதுதான் கவலை தரும் செய்தியாகும். கடந்த 20 ஆண்டுகளில் நடந்த பட்டாசு வெடி விபத்துகளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளர் எனும் புள்ளி விவரங்கள் பெரும் வேதனையைத் தருகின்றன. பட்டாசு ஆலைகளிலும், கடைகளிலும் நடந்தேறும் இவ்விதக் கோர விபத்துகளின் வீரியம் தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது கண்டும் காணாதிருக்கும் அரசும், அதன் தொடர் அலட்சியப்போக்கும், மெத்தனமும்தான் இத்தனை உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

ஆகவே, இதுபோன்ற வெடி விபத்துகள் இனியும் தொடராமல் இருக்க, தமிழகம் முழுவதும் இருக்கும் பட்டாசு ஆலைகள், பட்டாசுக்கடைகளின் பாதுகாப்பை சோதனை செய்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும், விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையிலிருந்த விதிமீறலைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இறந்துபோனவர்களின் குடும்பத்திற்கு தலா 25 இலட்ச ரூபாய் துயர்துடைப்பு நிதி வழங்க வேண்டும் எனவும், பட்டாசுத்தொழிலில் ஈடுபடும் மக்களுக்குப் பாதுகாப்பான மாற்றுத்தொழில் ஏற்பாடுகளைச் விரைந்து செய்துதர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி