அமெரிக்காவுக்கான தீடிர் பயணத்தை மேற்கொண்டுள்ள ராஜபக்சேவிற்கு எதிராக, போர் குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்க விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராஜபக்சே நேற்று காலை தனது மணைவி உட்பட 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றார்.
இது தொடர்பிலான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கையில், சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருப்பதாக, அதன் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சேம் சரிப் தெரிவித்துள்ளார்.
கடத்தல், துன்புறுத்தல், நீதிக்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சே இலங்கையின் பாதுகாப்பு படையின் அதி உத்தம கட்டளைத் தளபதியாக உள்ள நிலையில், அவர் மீது யுத்த குற்றங்கள், கடத்தல், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூன் நியமித்துள்ள நிபுணர்கள் குழு தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில் ராஜபக்சேவின் இந்த அமெரிக்க பயணம் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான விக்கி லீக்ஸின் தகவல்படி ராஜபக்சேவும், அவரது சகோதர்களுமே இலங்கையின் பல குற்றச் செயல்களுக்கு காரணம் என அமெரிக்க துதுவர்கள் அமெரிக்க திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், யுத்த குற்றங்கள் தொடர்பில் ராஜபக்சே விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பு அமெரிக்காவுக்கு இருப்பதாக மன்னிப்பு சபையின் பிராந்திய இயக்குனர் சாம் செரீப் தெரிவித்துள்ளார்.