உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கும் தமிழ்த் திருவிழா! – சீமான் அறிவிப்பு

590

உலகத் தாய்மொழி நாளில் தமிழ்த் திருவிழா!

எனதருமைத் தாய்த்தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம்!

ஆண்டுதோறும் கும்பம் 09 (பிப்ரவரி 21) அன்று “உலகத் தாய்மொழி நாள்” உலகத்தோரால் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நாம் தமிழர் கட்சியின் மொழிப்படைப் பிரிவான தமிழ் மீட்சிப் பாசறை, உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்று வரலாற்று ஆய்வறிஞர்களால் நிறுவப்படும் நம் தாய்மொழி தமிழ்மொழியைப் போற்றிக் கொண்டாடும் வகையில் கும்பம் 15 (பிப்ரவரி 27) ஆம் நாள் “தமிழ்த் திருவிழா”வை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் நாம் வீரவணக்கம் செலுத்தும் போது, “மொழி காக்க; இனம் காக்க” என்று முதலில் மொழியைத்தான் காக்க வேண்டும் என்று சொல்கிறோம். மொழியைக் காத்தால்தான் இனத்தைக் காக்க முடியும்.

அதைப்போன்றே, “மொழியாகி எங்கள் மூச்சாகி, முடிசூடும் எம் தமிழ் மீது உறுதி” என்று உறுதியேற்கிறோம். நம் மூச்சினைப்போல, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காக்கும், மீட்கும் பணியில் நாம் ஒவ்வொருவரும் முழுமூச்சாக ஈடுபட வேண்டும்.

நம் தாய்த்தமிழ் பண்பாட்டு மொழியாக மாற, நாம் முதலில் பயன்பாட்டு மொழியாக மாற்ற வேண்டும். வழிபாட்டு மொழியாக மாற, நம் வழக்கு மொழியாக மாற்ற வேண்டும். ஆட்சி மொழியாக மாற வேண்டுமெனில் நாம் பிறமொழிக் கலப்பற்ற பேச்சு மொழியாக்க வேண்டும்.

எனவே அதை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக நம் தாய்மொழியைப் பல்வேறு பயன்பாட்டுத் தளங்களில் மீட்கும் பணியைத் தமிழ் மீட்சிப் பாசறை முன்னெடுக்கிறது. அதன்படி கீழ்காணும் மூன்று நிகழ்வுகளையும் தமிழ் மீட்சிப் பாசறை தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

1) பெயர்ப்பலகைகளை நற்றமிழில் மாற்றுதல்!

கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் தம் வணிக நிறுவனங்களின் பெயர்களை தமிழில் மாற்றுதல்.

தமிழ் வளர்ச்சித்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை ஆகியவற்றின் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரைப் பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து, மாவட்டந்தோறும் இருக்கும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர்ப்பலகை தனை தமிழ்ப்படுத்தக்கோரி விண்ணப்பம் (மனு) கொடுத்தல். மேலும் அந்த விண்ணப்பத்தின் படி (மனுவின் நகல்) மற்றும் ஒப்புகைக் கடிதத்திற்கான முகவரி நிரப்பப்பட்ட மடல் ஆகியவற்றைப் பதிவஞ்சலில் மேற்கூறிய அதிகாரிகளுக்கு அனுப்பி ஒப்புகைக் கடிதத்தைப் பெற்றுகொள்ளுதல்.

வணிகர் சங்கப் பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து, பெயர்ப்பலகைகளை தமிழ்ப் படுத்தும் அரசாணைப் படியை (நகலை) வழங்கி அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளைத் தமிழில் மாற்ற கோரிக்கை விடுத்தல்.

2) ஊர்திகளின் பதிவெண்களைத் தமிழ்ப்படுத்துதல்!

உறுப்பினர்கள் அனைவரும் தத்தம் ஊர்திகளின் பதிவெண்களைக் கட்டாயம் தமிழ்ப்படுத்துதல்.

தொகுதியின் முதன்மையான இடங்களில் முகாம் அமைத்து பொதுமக்களுடைய ஊர்திகளின் பதிவெண்களைத் தமிழ்ப்படுத்திக் கொடுத்து, அத்துடன் அதற்கான அரசாணைப் படியையும் (நகலையும்) வழங்கி தமிழ்ப் படுத்துவதன் தேவை மற்றுமதன் பெருமிதங்களை எடுத்துரைத்தல்.

3) தமிழில் கையெழுத்திட உறுதியேற்கச் செய்தல்!

தொகுதியின் முதன்மையான இடங்களில் அமைக்கும் முகாம்களில் “தமிழில் இடுவோம் கையெழுத்து! தமிழே எங்கள் உயிரெழுத்து!” என்ற முழக்கங்கள் தாங்கிய பெரிய பதாகை அமைத்து அப்பகுதி மக்களிடம் தமிழில் கையொப்பமிடுவதன் தேவை மற்றுமதன் பெருமிதங்களை எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களை இக்கையெழுத்துப் பரப்புரையில் பங்கேற்கச் செய்து, இனி பெருமிதத்தோடு தமிழிலேயே கையொப்பமிடுவோம் என்ற உறுதியை ஏற்றிடச் செய்தல்.

இது தமிழ் மீட்சிப் பாசறை என்ற ஒரு பாசறையின் பணி மட்டுமன்று. நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பு. விடுதலைக்கு முன்பே நமது பாவேந்தர் “தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த் தெருவில் தமிழ் தானில்லை” என்றார். ஆனால் எழுபது ஆண்டுகளைக் கடந்தும் அதே நிலையில் சொல்லப் போனால் அதை விட மோசமான நிலையில் தான் இன்றைய தமிழகம் இருக்கிறது.

நம் தாய்மொழி தமிழ் வழக்கொழிந்து போகாது பேணிக்காத்து, மீட்கும் கடமை நம் அனைவருக்குமானது என்பதை உணர்ந்து நாம் மொழிப்பற்றோடும் இனப்பற்றோடும் பேரெழுச்சியாக இதில் பங்கேற்று களப்பணியாற்ற வேண்டும்.

ஆகவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் உலகெங்கும் பரவிவாழும் தாய்த்தமிழ் உறவுகளும் இவற்றைக் கருத்திற்கொண்டு, உலகத் தாய்மொழி நாளையொட்டி தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக 27-02-2022 அன்று முன்னெடுக்கப்படும் “தமிழ்த் திருவிழாவை” உலகமெங்கும் வெகுசிறப்பாக முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!

 சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஉலகத்தாய்மொழி நாள் வாழ்த்துகள்! – சீமான்
அடுத்த செய்திபோர் தொடங்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களையும், பொதுமக்களையும் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்டுக்கொண்டுவர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்