முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் சாதிய ஆணவப்படுகொலை வழக்கில் அலட்சியம் காட்டுவதுதான்…

0

தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் சாதிய ஆணவப்படுகொலை வழக்கில் அலட்சியம் காட்டுவதுதான் சமூக நீதியா? சாதிய வாக்கரசியலுக்காக வழக்கைத் திட்டமிட்டுத் தாமதம் செய்வதா?

@CMOTamilnadu @mkstalin

தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கின் மேல்முறையீட்டில் திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கு பெரும் ஏமாற்றமளிக்கிறது. சமூக நீதி அரசென மூச்சுக்கு முந்நூறு தடவை தற்பெருமை கொள்ளும் திமுக அரசு, ஆணவப்படுகொலை வழக்கில் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய நீதியையே பெற்றுத் தராது இழுத்தடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

ஒருவருக்கொருவர் விரும்பி, மனமொத்து திருமணம் செய்து கொள்பவர்களை சாதியின் பெயரால் வெட்டி வீழ்த்தும் சாதிய ஆணவப்படுகொலைகள், நவீன அறிவியல் யுகமான தற்காலச் சூழலிலும் நடந்தேறி வருவது ஒட்டுமொத்தச் சமூகத்துக்குமான தலைகுனிவாகும். சாதியின் பெயரால் சொந்த இனத்துக்குள் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களும், பச்சைப்படுகொலைகளும் சகித்துக் கொள்ளவே இயலா பெருங்கொடுமையாகும்.

நாடி, நரம்பு, இரத்தம், சதை, பசி, உறக்கம், கனவு என எல்லாம் கொண்ட சகமனிதனை சாதியின் பெயரால் ஒதுக்கித் தள்ளுவதை மனநோய் என்றுரைத்தார் அண்ணல் அம்பேத்கர். சாதியை சமூக நோய் எனச் சாடினார் பாட்டனார் அயோத்திதாசப்பண்டிதர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உயிர்ம சமத்துவம் போதித்தார் தமிழ் மறையோன் வள்ளுவப்பெருமகனார். சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்! எனக் கேட்டார் சைவ சமயக்குரவர் திருநாவுக்கரசர். பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா? இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ? என வினவினார் சித்தர் சிவவாக்கியர். சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்! அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே என்று அறிவுறுத்தினார் ஐயா திருவருட்பிரகாச வள்ளலார். சாதிகள் இல்லையடி பாப்பா! – குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! என அறச்சீற்றம் கொண்டார் பெரும்பாவலர் பாட்டன் பாரதி. சாதிவெறி சமயவெறி கன்னல் நிகர் தமிழுக்கு நோயே! இடைவந்த சாதி என்னும் இடர் ஒழிந்தால் ஆள்வது நம் தாய் தாய் தாயே! எனச் சமத்துவம் போற்றினார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன். யாரு மேல கீறினாலும் ரத்தம் ஒன்னுதான்! ஆக மொத்தம் நீயும், நானும் பத்து மாசம்தான் எனப் பேதங்களைச் சாடினார் மக்கள் பாவலர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சமத்துவத்தையும், சமதர்மத்தையும், பொதுமைச்சிந்தனையையும் எல்லோருக்கும் முன்பே, உலகுக்குப் போதித்த மரபு தமிழர்களுடையது. அத்தகைய இனத்தின் மக்கள் இன்றைக்கு சாதியின் பெயரால் பிளந்து பிரிந்து நிற்பதும், தன்னினப்பகைக்கு ஆட்பட்டு வீழ்வதும் வரலாற்றுப் பெருந்துயரமாகும். சாதி, மத உணர்ச்சிகள் முழுவதுமாகப் பட்டுப் போய், தமிழர் எனும் இனஉணர்ச்சி என்றைக்கு மேலோங்குகிறதோ அன்றைக்குத்தான் தமிழ்த்தேசிய இனம் உயர்ந்து சிறக்கும்.

சாதியத்தை திராவிடக்கட்சிகள் ஒருநாளும் எதிர்க்காது; மாறாக, ஊட்டி வளர்க்கும்; தமிழர்களைப் பிளந்து, பிரிக்கும். தமிழின மக்கள் சாதி, மதத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறபோது சிந்துகிற இரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாகத்தான் திராவிட ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் மறுக்கவியலா பேருண்மையாகும். சாதிய ஆணவப் படுகொலைகளைக் கடும் சட்டங்களின் மூலமாகவும், உச்சபட்சத் தண்டனைகளை உறுதிசெய்வதன் மூலமாகவுமே முற்றாக ஒழிக்க முடியும்.

சாதிய ஆணவப் படுகொலைக்கு நீதிகேட்டுப் போராடி வரும் தங்கை கௌசல்யா அவர்களின் ஆதங்கமும், வருத்தமும் மிக நியாயமானது. வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு, ஐந்தாண்டுகளாகியும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாதிருப்பதும், ஆளும் திமுக அரசு எவ்வித ஈடுபாட்டையும் வழக்கில் காட்டாததும் தற்செயலானதல்ல. சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றாது ஆணையம் அமைத்து காலங்கடத்தும் திமுக அரசு, தற்போது சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் திட்டமிட்டு அலட்சியம் காட்டுகிறது. இதுதான் திமுக அரசு போற்றிக் கொண்டாடும் சமூக நீதியா? வழக்கை விரைந்து நடத்தித் தண்டனையைப் பெற்றுத் தர, திமுக அரசின் சார்பில் எவ்வித விரைவு மனுவும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதோடு, வழக்கின் ஆவணங்களை ஐந்தாண்டுகளாக மொழிபெயர்க்காதுவிட்டுவிட்டு, நீதிமன்றத்தில் இன்னும் ஆறுமாதம் மொழிபெயர்க்கக் காலம் கோருவது வெட்கக்கேடானது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர்களின் ஊழல் வழக்குகளுக்கும், திமுக ஆட்சியை விமர்சனம் செய்ததற்காகக் கைதுசெய்யப்பட்டவர்களின் வழக்கில் பிணைக்கு எதிராகவும் பல இலட்சங்களைக் கொட்டியிறைத்து, மிக மூத்த வழக்கறிஞர்களைக் களமிறக்கும் திமுக அரசு, சாதிய வாக்கரசியலுக்காக தம்பி சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் இயல்பான நடைமுறைகளையே பின்பற்ற மறுத்து, தாமதம் செய்வது நம்பிக்கைத்துரோகம் இல்லையா? திராவிட ஆட்சியாளர் பெருந்தகைகளே! இதுதான் உங்களது சாதி ஒழிப்பா? சமத்துவம் போற்றும் திராவிட மாடல் ஆட்சியா? பேரவலம்!

ஆகவே, தம்பி உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை விரைந்து நடத்தி, கொலையாளிகள் யாவரும் தண்டிக்கப்பட்டு, நீதிநிலைநாட்டப்பட திமுக அரசு துணைநிற்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அரசு ரப்பர் கழகத் தோட்டத்தினைத் தனியாருக்கு…
அடுத்த செய்திஎளிய மக்களின் வாழ்வியலை மண்மணம் மாறாது, திரைமொழியில் பதியமிடும் ஆகச்சிறந்த…