மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறார் இலக்கியம், ஐக்கூ, நாடகம், புதினம், கட்டுரை உள்ளிட்ட தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களில் பரிணமித்த ஆகச்சிறந்த படைப்பாளி!
பள்ளி ஆசிரியர், செய்தி வாசிப்பாளர், திறனாய்வாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட இயக்குநர், திரைப்படப் பாடலாசிரியர் என பன்முகத்திறன் படைத்த பேராளுமை!
தனித்துவமிக்க கவித்திறனால் தமிழர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட முதுபெரும் தமிழ்க்கவிஞர் போற்றுதற்குரிய நம்முடைய ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.
தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடகமன்றம் மற்றும் அறிவியல் தமிழ்மன்ற உறுப்பினராக சிறப்புற பணியாற்றிய பெருந்தகை! 'வணக்கம் வள்ளுவ' எனும் ஆகச்சிறந்த கவிதைத்தொகுப்பிற்காக 'சாகித்ய அகாதமி' விருதை வென்ற பெருமைக்குரியவர். ஐயா அவர்களின் மறைவு, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
போற்றுதற்குரிய முதுபெரும் தமிழ்க்கவிஞர் ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



