தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருந்த 3359 காவலர் பணியிடங்களுக்குச் சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 10-12-2023 அன்று எழுத்துத்தேர்வுகள் நடைபெற்று, தேர்வு முடிவுகள் 12-01-2024 அன்று வெளியிடப்பட்டது. எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வானது 05-02-2024 முதல் 09-02-2024 வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இறுதித்தேர்வு முடிவுகள் திமுக அரசின் அலட்சியத்தால், 8 மாத கால தாமதத்திற்குப் பிறகு, கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.
அதன்பின், மருத்துவப் பரிசோதனையில் தகுதிபெற்று, தேர்ந்தெடுக்கப்பட்ட 3359 காவலர்களுக்கு 27-11-2024 அன்று பணியாணையும் வழங்கப்பட்டது. அவர்களில் சிறைத்துறை மற்றும் காவல்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கு உடனடியாக அந்தந்த துறை சார்பாகப் பயிற்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், தீயணைப்புத்துறைக்குத் தேர்வு செய்யப்பட்ட 674 பேருக்கு மட்டும் இன்றுவரை பயிற்சிக்கு அழைக்கப்படவில்லை என்பதால் தேர்வர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
ஏற்கனவே, எழுத்து தேர்வெழுதி ஓராண்டுக்குப் பிறகுதான் பணியாணை வழங்கப்பட்ட நிலையில், பணியாணை வழங்கப்பட்டு 5 மாதங்களாகியும் பயிற்சிக்கு அழைக்கப்படாதது ஏன்? திராவிட மாடல் திமுக ஆட்சியில் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு வேகமாக இயங்குகிறது என்பதற்கு இதுவே சான்றாகும். மக்களின் உயிர்காக்கும் தீயணைப்புத்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கக்கூட போதிய நிதி இல்லை என்பது திமுக அரசின் நிர்வாகத்தோல்வியையே காட்டுகிறது. கார் பந்தயம் நடத்தவும், ஐயா கருணாநிதி பெயரில் ஆடம்பரக் கட்டிடங்கள் கட்டவும் பல நூறு கோடிகளை வீணடிக்கும் திமுக அரசு, தீயணைப்புத் துறை வீரர்களுக்கான பயிற்சி மற்றும் உறைவிடச் செலவுக்கான 50 இலட்ச ரூபாய் நிதியை வழங்காதது வெட்கக்கேடானது.
மண்ணிற்கும், மக்களுக்கும் தொண்டு செய்யும் நோக்கத்தோடு, இரவு-பகல் பாராது அயராது படித்து, கடினமாகப் பயிற்சி எடுத்து எழுத்துத்தேர்விலும், உடற்தகுதித் தேர்விலும் வெற்றிபெற்று, தீயணைப்புத்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழிளந் தலைமுறையினரின் எதிர்கால கனவுகளைச் சிதைக்கும் வகையில் பணியாணை வழங்கியும் பயிற்சிக்கு அழைக்காமல் தாமதப்படுத்துவது அவர்களை மட்டுமல்லாது, அவர்களை நம்பி வாழும் குடும்பங்களையும் வறுமையில் வாட்டும் கொடுஞ்செயலாகும்.
ஆகவே, காவலர் தேர்வில் வென்று தமிழ்நாடு தீயணைப்புத்துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 679 காவலர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி, உடனடியாக பயிற்சியைத் தொடங்க உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
https://x.com/Seeman4TN/status/1905952405088526456
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி