மணல் கடத்தலைத் தடுக்க சட்டப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தம்பி சுடர் மணிகண்டன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய கூலிப்படையினரை உடனடியாக கைது செய்யவேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

15

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுடர் மணிகண்டன் (எ) கார்த்திக் அவர்கள் சிவகிரி பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வரும் 120க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் கட்டுக்கடங்காது நடைபெறும் மணல் கடத்தலைத் தடுக்கவும் வலியுறுத்தி பலமுறை புகாரளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து, கனிமவளக்கொள்ளைக்கு எதிராக தம்பி கார்த்திக், சிவகிரி பகுதியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்ததுடன், உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்ததால், அதனால் பாதிக்கப்பட்ட கனிமவளக்கொள்ளையர்கள், தம்பி கார்த்திக் மீது கூலிப்படையினரை ஏவி கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு காவல்துறை கனிமவளக் கொள்ளையர்களுக்குத் துணைநின்று தம்பி கார்த்திக் மீது பொய் வழக்கு புனைவதும், தன் மீதான தாக்குதல் தொடர்பாக அவரளித்த புகாரை ஏற்க மறுப்பதும் எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கனிமவளக்கொள்ளையைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசின் அலட்சியமே, கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடும் போராளிகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும் துணிவைக் கனிமவளக்கொள்ளையர்களுக்கு அளித்துள்ளது.

மண்ணின் வளத்தையும், மக்கள் நலத்தையும் காவுகொடுக்கும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் தக்கப்பாடம் புகட்டுவார்கள்.

ஆகவே, தம்பி கார்த்திக் மீது தாக்குதல் நடத்திய கனிமவளக் கொள்ளையர்களை, விரைந்து கைது செய்து, சட்டப்படி தண்டனைப்பெற்றுத் தர வேண்டுமெனவும், சிவகிரி பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டுவரும் செங்கல் சூளைகளை மூடவும், மணல் கடத்தலைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதொடர்வண்டித்துறை தேர்வெழுதும் தமிழகத் தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்