இராமநாதபுரம் சமூக ஆர்வலர் ஜான் பிரிட்டோ தாயார் மீது கொலைவெறித் தாக்குதல்; சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! சீமான் வலியுறுத்தல்

7

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி ஜான் பிரிட்டோ மீது நடத்தப்பட்ட கொலைவெறித்தாக்குதலில், தடுக்க வந்த அவரது தாய் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் கொலைவெறித் தாக்குதல்களைத் தடுக்கத்தவறி வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது.

சமூக ஆர்வலர் தம்பி ஜான் பிரிட்டோ தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்த சமூக அக்கறை கொண்ட இளைஞராவார். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்புகொண்டு, அவர் புரியும் பொதுத்தொண்டு மிகுந்த பாராட்டுக்குரியது. தம்பி ஜான் பிரிட்டோ போன்று மக்கள் நலன் காக்க போராடும் மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமையும், பொறுப்புமாகும்.

ஆனால் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு – கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அரசு அலுவலகத்திலேயே மணற்கொள்ளையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டுக் கனிமவளக்கொள்ளைக்கு எதிராகப் போராடிய திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அன்புத்தம்பி பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

கடந்த வாரம் மயிலாடுதுறை முட்டம், கிராமத்தில் கள்ளத்தனமாகச் சாராயம் விற்றதைத் தட்டி கேட்ட ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி என்ற இரண்டு இளைஞர்கள் கள்ளச்சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்கள்.

தற்போது தம்பி ஜான் பிரிட்டோ தான் வசிக்கும் மங்களகுடி ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிக்கொணர்ந்து மீட்டுக் கொடுத்த காரணத்தினால், நில ஆக்கிரமிப்பாளர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான நிலையில், தடுக்க முயன்ற அவரது தாய் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொடுந்துயரம் அரங்கேறியுள்ளது.

இவையெல்லாம் ஊடகங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்த நிகழ்வுகள். ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் வெளியே தெரியவராத சமூக ஆர்வலர்கள் மீதானத் தாக்குதல்கள் பல நூற்றுக்கணக்கானவையாகும்.

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உட்படப் பல்வேறு இடங்களின் மலைகளை வெட்டிக்கடத்தும் கனிமவளக் கொள்ளையர்களுக்கு எதிராகப் போராடும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் மீது பொய் வழக்கு புனைந்து கைது செய்கிறது திராவிட மாடல் திமுக அரசு.

மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளென நாளும் நடைபெறும் சமூக அவலங்கள், குற்றங்களுக்கு எதிராகச் சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் திமுக ஆட்சியில் சாமானிய மக்களின் நிலை என்ன?

மக்களின் நலன் காக்கும் போராளிகளைப் பொய் வழக்குப் புனைந்து கைது செய்வதும், சமூக விரோதிகளால் அவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கைபார்ப்பதும்தான் திராவிட மாடலா? அரசு அலுவலர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை உண்மையும் நேர்மையுமாக மக்களுக்கும் மண்ணிற்கும் போராடும் போராளிகள் தொடர்ச்சியாகக் கொல்லப்படுவார்கள் என்றால் திமுக ஆட்சி மக்களுக்கானதா? வளக்கொள்ளையர்களுக்கானதா?

தம்பி ஜான் பிரிட்டோ போன்று சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்படுவதை திமுக அரசு தடுக்கத்தவறினால் மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்?

ஆகவே, அரசு நிலம் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் தம்பி ஜான் பிரிட்டோ மற்றும் அவரது தாயார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனைப்பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபள்ளி மாணவர்களின் பெற்றோரைக் கொண்டாட மாநாடா? திமுகவின் தேர்தல் பரப்புரைத்திட்டத்திற்கான முன்னோட்டமா? – சீமான் கடும் கண்டனம்
அடுத்த செய்திதிருத்தணி விசைத்தறி தொழிலாளர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்