திருத்தணிகை மலையருகே அமைந்துள்ள மடம் கிராமத்தில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்களின் வீடுகளை, கோயில் நில ஆக்கிரமிப்பு என்றுகூறி தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
அதுமட்டுமின்றி, மடம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் முறையான பட்டா ஆவணங்கள் வைத்துள்ள நிலையில் அவர்களின் வாழ்விடங்களை அரசு நிலம் என்றுகூறி வருவாய்த்துறையினர் ஆக்கிரமிக்க முயல்வதும் கொடுங்கோன்மையாகும்.
‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்பதே இறைநெறி கூறும் அறநெறியாகும். எந்த கடவுளும் மக்களுக்குத் துன்பத்தைக் கொடுத்து, இன்பம் காண வேண்டும் என்பதை விரும்புவதில்லை. மக்களைத் துன்புறுத்தி கடவுளை மகிழ்விக்க முடியும் என்பது சிறந்த வழிபாடும் ஆகாது. இன்றளவும் கோயில்கள் பெயரில் உள்ள ஏராளமான விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளை ஏழை-எளிய மக்கள் பயன்படுத்தியே வருகின்றனர். கருணை அடிப்படையில் அவற்றுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் யாரும் எடுப்பதில்லை எனும் நிலையில், திருத்தணி மலை மடம் பகுதியில் மக்கள் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் வீடுகளை இடித்து, வலுக்கட்டாயமாக மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வெளியேற்ற முயல்வது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.
ஆகவே, திருத்தணி மலை மடம் கிராமத்தில் வீடுகளை இடித்து மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு அகற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையும், வருவாய்த்துறையும் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
https://x.com/Seeman4TN/status/1876875628185837889
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி