ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்!

26

ஆவடியில் குடியிருப்புகளை அழித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்!

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக வெள்ளானூர், கும்மனூர் கிராமங்களில் உள்ள மக்கள் குடியிருப்புகளை அழித்து 626 ஏக்கர் நிலத்தை திமுக அரசு வலுக்கட்டாயமாக அபகரிக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.

மக்களின் வாழ்விடங்களை அழித்து, அதன்மீது தொழிற்சாலைகளை நிறுவும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகத்தின் செயல் எதேச்சதிகாரத்தின் உச்சமாகும்.

திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டு காலத்தில் ஆட்சி அதிகார பலத்தைப் பயன்படுத்தி கோவை மாவட்டம் அன்னூரில் 3,500 ஏக்கர் விளை நிலங்களை அழித்துப் புதிதாகத் தொழிற்வளாகம், திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு கிராமத்தில் 1000 ஏக்கர் விளைநிலங்களை அழித்துப் புதிய தொழிற்சாலைகள்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் 3034 ஏக்கரில் கூடுதலாக 5-வது தொழிற்வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 4550 ஏக்கர் நிலங்களை அழித்துப் புதிய வானூர்தி நிலையம் என தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களை வலுக்கட்டாயமாகப் பறிக்கும் கொடுங்கோன்மைச்செயல்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வருகின்றன. அக்கொடுஞ்செயல்களின் நீட்சியாக விளைநிலங்களை அழித்தது போதாதென்று, தற்போது ஆவடி அருகே குடியிருப்புகளை அழித்து, தொழிற்வளாகம் அமைக்க திமுக அரசு முடிவெடுத்துள்ளது கொடுங்கோன்மையாகும்.

தொழில்வளர்ச்சி என்ற பெயரில் மக்கள் வாழும் குடியிருப்புகளையும், மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விளை நிலங்களையும் அபகரித்துத் தொழிற்சாலை அமைப்பதென்பது மூடத்தனத்தின் உச்சமாகும். மக்களின் வாழ்விடங்களை அழித்துவிட்டு, அமைக்கப்படும் தொழிற்சாலையால் கிடைக்கும் வளர்ச்சியைக் கொண்டு அரசு யாரை வாழ வைக்கப்போகிறது? நாட்டில் வாழும் மக்களுக்காகத்தான் தொழிற்சாலை உற்பத்தியே அன்றி, தொழிற்சாலை உற்பத்திக்காக மக்கள் பிறப்பதுமில்லை. தொழிற்சாலைகளால் மட்டுமே மக்கள் வாழ்வதுமில்லை.

ஆகவே, ஆவடி அருகே புதிய தொழிற்பூங்கா அமைப்பதற்காக வெள்ளானூர், கும்மனூர் கிராமங்களில் மக்கள் குடியிருப்புகளை அழித்து 626 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் இடிக்கப்படவிருக்கும் குடியிருப்புகளைப் பாதுகாக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகனமழையால் பாதிக்கப்பட்ட மதுரை காந்திபுரம் கோபுதூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் ஆறுதல் மற்றும் துயர்துடைப்பு உதவிகள்
அடுத்த செய்திதெய்வத்திருமகனார் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாளில் அவரது பெரும்புகழ் போற்றுவோம்! – சீமான்