கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது! – ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை

214

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பக் கூடாது! – ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிற்கு சீமான் கோரிக்கை

கப்பல் விபத்தில் சிக்கி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. நாட்டைத் துறந்து ஏதிலிகளாகச் சென்ற ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது சிறிதும் மனச்சான்றற்ற பெருங்கொடுமையாகும்.

இனப்படுகொலை நாடான இலங்கையில் அந்நாட்டு ஆட்சியாளர்களின் தமிழர்கள் மீதான இனவெறி மிகுந்த தவறான ஆட்சி நிர்வாகத்தின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீரழிந்து வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாட்டு மக்கள் வறுமையில் தவித்து வருகின்றனர். சொந்த மண்ணில் வாழ வழியற்ற நிலையில் வேறுவழியின்றி அங்குள்ள தமிழ் மக்கள் இந்தியா உள்ளிட்ட அயல் நாடுகளுக்கு ஏதிலிகளாக அவ்வப்போது புலம்பெயர்ந்தும் வருகின்றனர்.

அப்படி நிம்மதியாக வாழ இந்தப் பூமிப் பந்தில் ஒரு இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன், ஊரையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு ஆழ்கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட தொப்புள்கொடி உறவுகளான 300க்கும் மேற்பட்ட ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் கனடா நாடு நோக்கிச் செல்லும் வழியில் கடந்த நவம்பர் 8 ஆம் நாளன்று புயலால் கப்பலில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுக்கடலில் சிக்கித் தவித்தனர். விரைந்து செயல்பட்ட சிங்கப்பூர் அரசு மனிதநேய அடிப்படையில் தமிழர்களை மீட்டு, அருகிலிருந்த வியட்நாம் நாட்டில் ஒப்படைத்த நிலையில், தற்போது அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப வியட்நாம் அரசு முடிவு செய்துள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனை அளிக்கிறது.

வறுமையின் காரணமாக இருந்த உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு பெரும் பொருட்செலவில் நாட்டை விட்டு வெளியேறிய மக்களை மீண்டும், பொருளாதாரம் முற்றாகச் சீரழிந்துள்ள இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென்பது அவர்களின் நிலையை மேலும் மோசமாக்கி, வறுமையிலும், பசியிலும் வாடி சிறுக சிறுக அவர்கள் உயிரிழக்கவே வழிவகுக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஏகாதிபத்திய பேரரசுகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தீரத்துடன் போராடி அடிமைத்தளையை அறுத்தெறிந்து, விடுதலையை வென்றெடுத்த புரட்சிகர வியட்நாமிய நாடு, கடந்த அரை நூற்றாண்டு காலமாக ஈழத்தாயக விடுதலைக்காகப் போராடி வரும் தமிழர்கள், அடிமைத்தன அடக்குமுறைகளால் அனுபவித்த துன்ப துயரங்களையும், மன வலிகளையும் எளிதில் உணரும் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் முழுமையாக நம்புகின்றனர். எனவே ஈழத்தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவை உடனடியாக வியட்நாமிய அரசு கைவிட வேண்டுமென்று கோருகிறேன்.

வியட்நாமிலுள்ள ஈழத்தமிழ்ச் சொந்தங்களும் தாங்கள் கனடாவுக்குச் செல்ல விரும்புவதாகவும், தங்களை இலங்கைக்கு அனுப்பக்கூடாதென்றும், ஐநாவிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆகவே, ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு உடனடியாக வியட்நாம் அரசுடன் பேசி, அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிடச் செய்வதோடு, அங்குத் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்குத் தமது சொந்த பொறுப்பிலேயே பாதுகாப்பாக அனுப்பி வைப்பதோடு, வாழ்வாதார உதவிகள் கிடைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி