முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு அவரவர் மாநிலங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

12

முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வினை எழுத தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பித்திருந்த தேர்வர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருக்கும் இந்திய தேர்வு முகமையின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இது முழுக்க முழுக்க, தமிழ்நாட்டு மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, மருத்துவப் படிப்பினை கைவிடச் செய்யும் திட்டமிட்ட தொடர் நடவடிக்கைகளின் நீட்சியேயாகும்.

இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் ஏறத்தாழ 2 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேர்வு முகவை நடத்தும் 2024-25ஆம் கல்வியாண்டு முதுநிலை மருத்துவத்திற்கான இத்தேர்வானது கடந்த சூன் மாதம் 23 ஆம் தேதி இந்தத் தேர்வு நடத்தப்பட இருந்த நிலையில், அதற்கு முந்தைய நாள் இரவு தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அத்தேர்வு வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஏற்கனவே 259 தேர்வு மையங்களாக இருந்ததைத் தற்போது 185 தேர்வு மையங்களாக தேசிய தேர்வு முகமை குறைத்துள்ளது.

இதனால் அவரவர் மாநிலங்களில் விருப்பத் தேர்வு மையங்களைக் கோரியிருந்த தேர்வர்கள் பலருக்கும் 500 கி.மீ. முதல் 1,000 கி.மீ. வரையிலான தொலைவில் தேர்வு மையங்களை இந்திய தேர்வு முகமை ஒதுக்கியுள்ளதால் மாணவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்

குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் பலருக்கும் இங்குள்ள தேர்வு மையங்களில் ஒதுக்காமல், பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் தேர்வு மையங்களைத் தேர்வு முகமை ஒதுக்கியுள்ளது. தேர்வு மையங்கள் நெடுந்தொலைவில் ஒதுக்கப்பட்டு இருப்பதால், பயணச் செலவு மற்றும் அலைச்சல் அதிகரித்துள்ளதால. தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

வேறு மாநிலத்தின் இரண்டாம்நிலை நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் அமைந்துள்ள தேர்வு மையத்தினைக் கண்டறிவதில் மிகப்பெரிய நடைமுறை சிக்கல் உள்ளது. இதற்காக அவ்விடங்களுக்குச் சென்றுசேர இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே தேர்வர்கள் புறப்பட வேண்டும் என்பது தமிழ்நாட்டுத் தேர்வர்களிடம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தவும், உளவியலாகச் சிதைத்துத் தோல்வியுறச் செய்யவுமே வழிவகுக்கும். தமிழ்நாட்டுத் தேர்வர்களைத் தேர்வு எழுத விடாமலேயே போட்டியிலிருந்து வெளியேற்றுவதற்கான மற்றுமொரு சூழ்ச்சியாகும்.

இந்திய ஒன்றியத்திற்கு அதிக வருவாயை ஈட்டித்தருவதில் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்ற தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்காதது ஏன்? முறைகேடாகத் தேர்வு நடைபெறும் வட மாநிலங்களில் அதிகத் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்போது, அப்படியான எந்தப் புகாரும் எழாத நிலையில் தமிழ்நாட்டில் போதிய அளவில் தேர்வு மையங்களை அமைக்கத் தேர்வு முகமை தவறியது ஏன்? ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களைக் குறைத்தது ஏன்? இளநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகள் நடைப்பெற்றுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தற்போது முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வினையும் இத்தனை குளறுபடிகளுடன் நடத்துவது இதிலும் முறைகேடுகள் செய்வதற்கான நடவடிக்கையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

இதன் மூலம் தகுதியான மருத்துவர்களை உருவாக்குவதற்கான தேர்வு என்ற பெயரில் தொடர்ச்சியாகத் தகுதியற்ற மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு பயன்படுத்தப்படுகிறது என்பது நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே தகுதியான மருத்துவ மாணவர்களை உருவாக்குவதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.

ஆகவே, மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் உறுதியான கோரிக்கையாக இருந்தபோதிலும், தற்போதைக்கு முதுநிலை மருத்துவத்திற்கான நீட் தேர்வினை தமிழ்நாட்டுத் தேர்வர்கள் தமிழ்நாட்டிலேயே எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றித்தர வேண்டுமென இந்திய ஒன்றிய அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1820691922710671776

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: ஆக. 09, உலக பழங்குடியினர் நாளையொட்டி சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திவீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்