தமிழ்நாடு முழுவதும் வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி இருமடங்காக திமுக அரசு அதிகரித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே மோடி அரசு நடைமுறைப்படுத்திய ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கட்டுக்கடங்காமல் உயர்ந்த கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் கனவு தடைபட்டுபோனது. அக்கனவினை முற்று முழுதாகத் தகர்க்கும் வகையில் சொத்து வரி, பத்திரப்பதிவுக் கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு ஆகியவற்றைப் பன்மடங்கு உயர்த்திய திமுக அரசு தற்போது வீடு வரைபட அனுமதி கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது ஏற்கவே முடியாத பெருங்கொடுமையாகும்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் அடுத்தடுத்து பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, தொழில்வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு என அடுத்தடுத்து வரிகளை உயர்த்தி மக்களின் தலையில் தாங்க முடியாத நிதிச்சுமையைச் சுமத்தி வாட்டி வதைத்து வருகிறது.
மலருக்குச் சேதாரம் இல்லாமல் தேனை உறிஞ்சும் வண்டினைப்போல் ஆளும் அரசுகள் மக்களை வதைக்காமல் வரியைப்பெற வேண்டும். மாறாக “வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு” என்று தமிழ்மறை கூறுவதுபோல் பகற்கொள்ளையர்கள் புரியும் வழிப்பறிபோல அரசு பன்மடங்கு வரியை உயர்த்தி வற்புறுத்தி வசூலிப்பது மக்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
ஏற்கனவே, பெருநகரங்களில் வீடு கட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அரசு அதிகாரிகள் முதல் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் வரை லஞ்சம் தர வேண்டியுள்ளதால் நடுத்தர மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அரசுத்துறையில் நீண்டகாலமாக நடைபெறும் இத்தகைய ஊழலை ஒழிக்கத் திறனற்ற திமுக அரசு, தன் பங்கிற்கு வரியைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளது. கட்டிய வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடிப்பதை வாடிக்கையாகக் கொண்ட திமுக அரசு இப்போது ஏழை – நடுத்தர மக்கள் வீடு கட்டவே முடியாத நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.
ஓடாய் தேய்ந்து உழைக்கும் பணத்தை வாடகை செலுத்தியே வாழ்நாளைக் கழித்த தமிழ் மக்கள் தங்கள் தலைமுறையாவது நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகச் சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு, வீடு கட்ட முனைந்தால் அதனையும் வரி என்ற பெயரில் வலுக்கட்டாயமாகப் பறிப்பது கொடுங்கோன்மையாகும்.
ஆகவே, வீடு கட்டுவதற்கான வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தும் முடிவை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
https://x.com/Seeman4TN/status/1820741509555060801
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி