சென்னை மாநகராட்சியின் தூய்மைப்பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

21

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தூய்மைப் பொறியாளர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, 11 மண்டலங்கள் தனியாரிடம் தாரைவார்க்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைக்க திமுக அரசு முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட மண்டலங்களில் பல நூற்றுக்கணக்கான தூய்மைப்பொறியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பெருங்கொடுமை நிகழ்ந்த நிலையில், மீதமுள்ள மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கவே வழிவகுக்கும்.

தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வழிவகுக்கும் அரசாணை எண் 152 ஐ திரும்பப்பெற வேண்டுமென்று, தூய்மைப்பொறியாளர்கள் போராடிவரும் நிலையில் மீதமுள்ள பணியிடங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதென்பது விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிப்பதாகும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகராட்சி தூய்மைப்பொறியாளர் பணியிடங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அதற்குக் கடுங்கண்டனம் தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தால் தூய்மைப்பொறியாளர்கள் அரசுப்பணியில், பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், தேர்தலில் வென்று முதல்வராக ஆட்சிப்பொறுப்பேற்ற பின் இன்றுவரை அதனை நிறைவேற்ற மறுத்ததுடன், மீதமுள்ள 4 மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைப்பதென்பது வாக்களித்து ஆட்சியிலமர்த்திய தூய்மைப்பொறியாளர்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

நாட்டு மக்கள் நலமாக வாழ ஒவ்வொரு நாளும் இடைவிடாது தூய்மைப்படுத்திக் காக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களும் மிகுந்த போற்றுதலுக்கும், பெருமதிப்பிற்கும் உரியவர்கள். மற்றவர்கள் முகம் சுளித்து, வெறுத்து ஒதுக்கும் பொருட்களை அர்ப்பணிப்புணர்வுடன் தூய்மைப்படுத்தும் மேன்மைமிக்க அவர்களின் பணியென்பது வாழ்த்தி வணங்கக்கூடிய மாண்புடையது.

இயற்கைப் பேரிடர், நோய்த்தொற்றுப் பரவல் உள்ளிட்ட அசாதாரணக் காலங்களிலும் உயிரைப் பணயம் வைத்துச் செய்யக்கூடிய பணியாகவும் உள்ளது. அத்தகைய போற்றுதற்குரிய பணியாற்றிவந்த மாநகராட்சி, நகராட்சிப் பணியாளர்களை, குறைந்த சம்பளத்தில் தற்காலிகப் பணியாளர்களாகவே வைத்திருந்து, உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது திடீரெனப் பணிநீக்கம் செய்ததென்பது அவர்களின் எதிர்காலத்தை இருளாக்கும் கொடுங்கோன்மையாகும். சமூக நீதி எனப்பேசி அரசியல் செய்யும் திமுக அரசு, சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் தூய்மைப்பொறியாளர்களை வஞ்சித்ததோடு, அவர்களது போராட்டங்களை அதிகாரத்தின் துணைகொண்டு அடக்கி, ஒடுக்கி குரல்வளையை நெரிக்க முயல்வது வெட்கக்கேடானது. இதுதான் திமுக அரசு கட்டிக்காக்கும் சமூகநீதியா?

ஆகவே, திமுக அரசு சென்னை மாநகராட்சியில் மீதமுள்ள மண்டலங்களையும் தனியாரிடம் ஒப்படைத்து, தூய்மைப்பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் கொடுஞ்செயலை உடனடியாகக் கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், அரசாணை எண் 152 ஐ திரும்பப்பெற்று, தமிழ்நாட்டின் அனைத்து உள்ளாட்சிகளிலும் தூய்மைப்பணிகளை மீண்டும் அரசே ஏற்று நடத்துவதோடு, அங்குப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் தூய்மைப் பொறியாளர்களாகப் பணிநிரந்தரம் செய்து, உரிய ஊதியம் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

https://x.com/Seeman4TN/status/1829068230268252590

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி“வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
அடுத்த செய்திமக்களின் நலன் சார்ந்து இயங்கும் அறப்போர் இயக்கத்திற்கு சீமான் வாழ்த்து!